பெற்றோரே—பிள்ளைகளின் தேவையைப் பூர்த்தி செய்யுங்கள்!
பிள்ளைகளுக்கு வழிநடத்துதலும் அன்பான சிட்சையும் தேவை, முக்கியமாக அவர்களுடைய பெற்றோரிடமிருந்து. இதன் சம்பந்தமாக பிரேஸிலை சேர்ந்த போதனையாளர் டான்யா ஸாகூரி இவ்வாறு சொல்கிறார்: “சந்தோஷத்தையே நாடுவது பொதுவாக பிள்ளைகளின் இயல்பு. கட்டுப்பாடுகளை வைப்பது அவசியம். இதை பெற்றோரே செய்ய வேண்டும். அவர்கள் இதை செய்ய தவறும்போது பிள்ளைகள் கட்டுப்படுத்த முடியாதவர்களாக ஆகிவிடுகிறார்கள்.”
என்றபோதிலும், பல நாடுகளில் தனிப்பட்டவர்களின் சுதந்திரத்திற்கு அதிக இடங்கொடுக்கும் சமுதாயத்தின் செல்வாக்கு இந்த அறிவுரையைப் பின்பற்றுவதைக் கடினமாக்கலாம். அப்படியானால், பெற்றோர் எங்கிருந்து உதவியை பெறலாம்? பிள்ளைகள், ‘யெகோவாவால் வரும் சுதந்தரம்’ என்பதை கடவுள் பயமுள்ள பெற்றோர் அறிந்திருக்கிறார்கள். (சங்கீதம் 127:4) ஆகவே, அவர்களை வளர்ப்பதற்குரிய வழிநடத்துதலைப் பெற கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளுக்கு கவனம் செலுத்துகிறார்கள். உதாரணமாக, “பிரம்பைக் கையாடாதவன் தன் மகனைப் பகைக்கிறான்; அவன்மேல் அன்பாயிருக்கிறவனோ அவனை ஏற்கனவே தண்டிக்கிறான்” என நீதிமொழிகள் 13:24 சொல்கிறது.
இங்கே ‘பிரம்பு’ என மொழிபெயர்க்கப்பட்டுள்ள வார்த்தை சரீரப்பிரகாரமான தண்டனையை மட்டுமே அர்த்தப்படுத்துவதில்லை. அது எந்த விதத்திலாகிலும் திருத்துவதைக் குறிக்கிறது. ஒரு பிள்ளையின் தான்தோன்றித்தனமான போக்கை திருத்துவதற்கு பெரும்பாலும் கண்டிப்பான வார்த்தைகளே போதுமானதாக இருக்கலாம். “உன் மகனைச் சிட்சைசெய், அவன் உனக்கு ஆறுதல் செய்வான், உன் ஆத்துமாவுக்கு ஆனந்தத்தையும் உண்டாக்குவான்” என நீதிமொழிகள் 29:17 சொல்கிறது.
விரும்பத்தகாத குணங்களை துடைத்தழிக்க அன்பான சிட்சை பிள்ளைகளுக்குத் தேவை. அத்தகைய கண்டிப்பும் கனிவும் மிக்க சிட்சை, பிள்ளை மீது பெற்றோர் அக்கறை காட்டுகிறார் என்பதற்கு அத்தாட்சியை அளிக்கிறது. (நீதிமொழிகள் 22:6) ஆகையால் பெற்றோரே தளராதீர்கள்! பைபிள் தரும் ஞானத்தையும் நடைமுறையான புத்திமதியையும் பின்பற்றுவதன் மூலம் நீங்கள் யெகோவாவை சந்தோஷப்படுத்தலாம், உங்கள் பிள்ளைகளின் மரியாதையையும் பெறலாம்.