எந்த வயதிலும் கற்கலாம்
கஸீன்யா 1897-ம் வருடம் பிறந்தார். அவருக்கு 3 மகள்கள், ஒரு மகன், 15 பேரப்பிள்ளைகள், 25 கொள்ளுப் பேரப்பிள்ளைகள் உள்ளனர். பெற்றோர் கற்றுக்கொடுத்ததையே அவர் வாழ்நாள் முழுவதும் கடைப்பிடித்து வந்திருக்கிறார். அவர், கருங்கடலுக்கும் காகஸஸுக்கும் இடையில் அமைந்த, யுத்தக் காயங்கள் நிறைந்த அப்காஸ் குடியரசிலிருந்து ஒரு அகதியாக மாஸ்கோவிற்கு வந்திருந்தார். என்றாலும், அவர் வாழ்க்கையில் திருப்தியாக இருந்தார்; முக்கியமாக அவருடைய பாரம்பரிய மதம் அவருக்கு திருப்தியளித்தது.
கஸீன்யாவின் மகள் மெரி 1993-ல் யெகோவாவின் சாட்சியானார். மெரி, யெகோவா தேவனைப் பற்றியும் பைபிளைப் பற்றியும் கஸீன்யாவிடம் பேச ஆரம்பித்தார், ஆனால் அவர் கேட்க விரும்பவில்லை. கஸீன்யா தன் மகளிடம், “இந்த வயதான காலத்தில் எதை என்னால் புதிதாக கற்றுக்கொள்ள முடியும்” என எப்போதும் கூறி வந்தார்.
இருந்தாலும், யெகோவாவின் சாட்சிகளாக மாறியிருந்த அவருடைய மகள் மெரி, பேரனின் மனைவி லான்டா, கொள்ளுப் பேத்திகளான நானாவும் ஸாஸாவும் பைபிளைப் பற்றி அவரிடம் அடிக்கடி பேசி வந்தனர். 1999-ம் வருடம் ஒருநாள் மாலையில் அவர்கள் பைபிளிலிருந்து கஸீன்யாவுக்கு வாசித்து காண்பித்த ஒரு வசனம் அவருடைய இருதயத்தை தொட்டது. கர்த்தருடைய இராப் போஜனத்தை ஆரம்பித்து வைக்கையில் உண்மையுள்ள தமது அப்போஸ்தலர்களிடம் இயேசு கூறிய கனிவான வார்த்தைகளே அவை. (லூக்கா 22:19, 20) அன்று மாலையே, தனது 102-வது வயதில், பைபிளைப் படிக்க ஆரம்பிக்க கஸீன்யா முடிவு செய்தார்.
“102 வருடங்கள் வாழ்ந்த பிறகு கடைசியாக வாழ்க்கையின் அர்த்தத்தைத் தெரிந்துகொண்டேன். நமது அருமையான, அன்பான கடவுளாகிய யெகோவாவை சேவிப்பதைவிட சிறந்தது வேறு எதுவுமில்லை என இப்போது புரிந்துகொண்டேன். இப்போதும் நான் சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கிறேன். நான் மூக்குக் கண்ணாடி இல்லாமல் படிக்கிறேன், என் குடும்பத்தோடு நன்கு கூட்டுறவு கொள்கிறேன்” என்று கூறுகிறார்.
2000, நவம்பர் 5-ம் தேதியன்று கஸீன்யா முழுக்காட்டுதல் பெற்றார். இப்போது அவர் கூறுவதாவது: “இனி அன்போடு யெகோவாவை சேவிக்க என் வாழ்க்கையை அவருக்கு அர்ப்பணிக்கிறேன். வீட்டிற்கு பக்கத்திலுள்ள பஸ் ஸ்டாப்பில் உட்கார்ந்துகொண்டு பத்திரிகைகளையும் துண்டுப்பிரதிகளையும் விநியோகிக்கிறேன். அடிக்கடி வந்து சந்திக்கும் சொந்தக்காரர்களிடம் யெகோவாவைப் பற்றிய சத்தியத்தை சந்தோஷமாக பகிர்ந்துகொள்கிறேன்.”
‘தன் மாம்சம் வாலிபத்தில் இருந்ததைப் பார்க்கிலும் ஆரோக்கியமடைந்து தன் வாலவயது நாட்களுக்குத் திரும்பும்’ அந்த நாளை கஸீன்யா ஆவலோடு எதிர்பார்க்கிறார். (யோபு 33:25) வாழ்க்கையின் அர்த்தத்தைப் பற்றி பைபிளிலிருந்து கற்றுக்கொள்ள தனக்கு வயதாகிவிடவில்லை என நூறு வயது மூதாட்டி நினைக்கிறார் என்றால் நீங்கள் எப்படி?