கடவுளுடைய அன்பை புரிந்துகொள்கிறீர்களா?
மனிதரின் அபூரண நிலையைப் பற்றி யோபு என்பவர் ஒருமுறை இவ்வாறு விவரித்தார்: “பெண்ணிடம் பிறந்த மனிதருக்கு வாழ்நாளோ குறைவு; வருத்தமோ மிகுதி. மலர்போல் பூத்து அவர்கள் உலர்ந்து போகின்றனர்; நிழல்போல் ஓடி அவர்கள் நிலையற்றுப் போகின்றனர்.” (யோபு 14:1, 2, பொ.மொ.) யோபுவின் வாழ்க்கை அப்போது துன்பத்தாலும் துயரத்தாலுமே நிரம்பியிருந்தது. உங்களுக்கும் வாழ்க்கை அப்படி இருந்ததுண்டா?
எப்படிப்பட்ட பிரச்சினைகளையும் கஷ்டங்களையும் அனுபவித்தாலும் நமக்கு ஓர் உறுதியான நம்பிக்கை உண்டு; அந்த நம்பிக்கை, கடவுளுடைய பரிவையும் அன்பையும் அடிப்படையாக கொண்டிருக்கிறது. முதலாவதாக, பாவமுள்ள தாழ்ந்த நிலையிலிருந்து மனிதவர்க்கத்தை விடுவிப்பதற்காக இரக்கமுள்ள நம் பரலோக தகப்பன் மீட்பின் கிரய பலியை அளித்திருக்கிறார். இயேசு கிறிஸ்து இவ்வாறு குறிப்பிட்டதாக யோவான் 3:16, 17 சொல்கிறது: “தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் [மனிதவர்க்க] உலகத்தில் அன்புகூர்ந்தார். உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை [இயேசுவை] உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார்.”
அபூரண மனிதர்களாகிய நம்மிடம் கடவுள் எவ்வாறு தயவு காண்பிக்கிறார் என்பதைப் பற்றியும் சிந்தித்துப் பாருங்கள். அப்போஸ்தலனாகிய பவுல் இவ்வாறு அறிவித்தார்: “மனுஷஜாதியான சகல ஜனங்களையும் அவர் ஒரே இரத்தத்தினாலே தோன்றப்பண்ணி, பூமியின்மீதெங்கும் குடியிருக்கச் செய்து, முன் தீர்மானிக்கப்பட்ட காலங்களையும் அவர்கள் குடியிருப்பின் எல்லைகளையும் குறித்திருக்கிறார்; கர்த்தராகிய தம்மை அவர்கள் தடவியாகிலும் கண்டுபிடிக்கத்தக்கதாகத் தம்மைத் தேடும்படிக்கு அப்படிச் செய்தார்; அவர் நம்மில் ஒருவருக்கும் தூரமானவரல்லவே.” (அப்போஸ்தலர் 17:26, 27) சற்று சிந்தித்துப் பாருங்கள்! நாம் அபூரண மனிதர்களாக இருந்தாலும், அன்பான படைப்பாளராகிய யெகோவா தேவனுடன் நெருங்கிய உறவை அனுபவிக்க முடியும்.
ஆகவே, கடவுள் நம்மீது அக்கறை காட்டுகிறார் என்பதையும் நம் நிரந்தர நன்மைக்காக அன்பான ஏற்பாட்டை செய்திருக்கிறார் என்பதையும் அறிந்து எதிர்காலத்தை நம்பிக்கையோடு எதிர்நோக்கலாம். (1 பேதுரு 5:7, NW; 2 பேதுரு 3:13) நம் அன்பான கடவுளைப் பற்றி அவரது வார்த்தையாகிய பைபிளிலிருந்து இன்னுமதிகமாக கற்றுக்கொள்ள நிச்சயமாகவே நமக்கு நியாயமான காரணம் உண்டு.