“நீ குணசாலி”
ஓர் இளம் மோவாபிய பெண்மணிக்கு சூட்டப்பட்ட புகழ் மாலையே இது. அவள் பெயர் ரூத், அவள் ஒரு விதவை, நகோமி என்ற ஓர் இஸ்ரவேல் பெண்ணின் மருமகள். சுமார் 3,000 வருடங்களுக்கு முன் நியாயாதிபதிகள் காலத்தில் இஸ்ரவேலில் வாழ்ந்து வந்தாள், குணசாலி என்ற பாராட்டை ரூத் பெற்றிருந்தாள். (ரூத் 3:11) இந்தப் பாராட்டை அவள் எப்படி பெற்றாள்? அவளுடைய முன்மாதிரியிலிருந்து யார் பயனடையலாம்?
“சோம்பலின் அப்பத்தைப் புசியாமல்,” வயலில் கதிர்களை சேகரிப்பவளாக ரூத் நெடுநேரம் கடினமாக உழைத்தாள். அவள் அவ்வளவு ஊக்கமாக உழைத்ததால் பாராட்டைப் பெற்றாள். அவளுடைய வேலை பளுவை இலகுவாக்கும் வாய்ப்பு கொடுக்கப்பட்டபோதும்கூட அவள் தொடர்ந்து கடினமாக உழைத்தாள், அவளிடம் எதிர்பார்க்கப்பட்டதையும்விட அதிகமாக செய்தாள். புகழ்ச்சிக்குரிய, திறமைசாலியான, சுறுசுறுப்பான மனைவியைப் பற்றிய பைபிளின் வர்ணனைக்கு அவள் பொருத்தமாக இருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.—நீதிமொழிகள் 31:10-31; ரூத் 2:7, 15-17.
ரூத்தின் ஆவிக்குரிய குணங்களே—மனத்தாழ்மை, சுயதியாக மனப்பான்மை, பற்றுமாறா அன்பு ஆகியவையே—அவளுக்கு நன்மதிப்பை பெற்று தந்ததற்கு முக்கிய காரணங்கள். மணவாழ்க்கையால் பெறும் பாதுகாப்புக்கான எந்த நம்பிக்கையுமின்றி, அவளுடைய பெற்றோரையும் சொந்த நாட்டையும் துறந்து நகோமியுடன் ஒட்டிக்கொண்டாள். அதேசமயத்தில், தன் மாமியார் வணங்கும் கடவுளாகிய யெகோவாவை சேவிக்கும் ஆசையை ரூத் வெளிப்படுத்தினாள். அவளுடைய மதிப்பை வலியுறுத்திக் காட்டுகையில், “ஏழு குமாரரைப் பார்க்கிலும் [நகோமிக்கு] அருமையாயிரு”ந்தாள் என பைபிள் பதிவு கூறுகிறது.—ரூத் 1:16, 17; 2:11, 12; 4:15.
குணசாலியான ரூத்தைப் பற்றிய இந்தப் பதிவு மனிதர் மத்தியில் மெச்சத்தக்கதாக இருந்தாலும், அவளுடைய குணங்களை கடவுள் உயர்வாக கருதியதும் இயேசு கிறிஸ்துவின் மூதாதையாகும் பாக்கியத்தை அவர் அவளுக்கு அளித்ததுமே அதிக முக்கியத்துவமுடையது. (மத்தேயு 1:5; 1 பேதுரு 3:4) கிறிஸ்தவ பெண்களுக்கு மட்டுமல்ல, ஆனால் யெகோவாவை வணங்குவதாக உரிமை பாராட்டும் அனைவருக்கும் ரூத் சிறந்த எடுத்துக்காட்டு!