உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w02 8/1 பக். 32
  • நாரை புகட்டும் பாடம்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • நாரை புகட்டும் பாடம்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2002
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2002
w02 8/1 பக். 32

நாரை புகட்டும் பாடம்

‘ஆகாயத்திலுள்ள நாரை முதலாய்த் தன் வேளையை அறியும்; . . . என் ஜனங்களோ [யெகோவாவின்] நியாயத்தை அறியார்கள்.’ (எரேமியா 8:7) தங்கள் தேவனாகிய யெகோவாவை விட்டுவிட்டு அந்நிய தெய்வங்களை ஆராதிக்க சென்றுவிட்ட விசுவாச துரோக யூதாவுக்கு எதிராக யெகோவாவின் நியாயத்தீர்ப்பை இப்படித்தான் தீர்க்கதரிசியாகிய எரேமியா அறிவித்தார். (எரேமியா 7:18, 31) உண்மையற்ற யூதர்களுக்கு பாடம் கற்பிக்க எரேமியா ஏன் நாரையை தேர்ந்தெடுத்தார்?

நாரைகள், முக்கியமாக வெண்ணிற நாரைகள், பைபிள் நாடுகளின் வழியாக இடம்பெயர்ந்து செல்வதை காண்பது இஸ்ரவேலருக்குப் பழக்கப்பட்ட ஒரு காட்சி. பெரிய, நெட்டையான கால்களுடன் ஆழமற்ற நீர்நிலைகளில் நடந்து செல்லும் இப்பறவையின் எபிரெய பெயர், “உண்மைப் பற்றுறுதியுள்ளவர்; அன்புள்ள தயவுடையவர்” என்று அர்த்தம் தரும் வார்த்தையின் பெண்பால் வடிவமாகும். இது பொருத்தமான பெயர், ஏனென்றால் பெரும்பாலான மற்ற பறவைகளைப் போலின்றி, ஆண் பெண் வெண்ணிற நாரைகள் ஆயுசு பூராவும் ஜோடியாக சேர்ந்தே வாழும். கதகதப்பான இடங்களில் குளிர்காலத்தைக் கழித்துவிட்டு, அநேக நாரைகள் பெரும்பாலும் அவை பயன்படுத்திய அதே கூட்டிற்கு வருடாவருடம் திரும்புகின்றன.

இயல்புணர்ச்சியால் செயல்படும் நாரையின் நடத்தை உண்மைப் பற்றுறுதி என்ற பண்பை தனிச்சிறப்புமிக்க வேறு விதங்களிலும் எடுத்துக் காட்டுகிறது. ஆண் பெண் நாரைகள் இரண்டுமே முட்டைகளை அடைகாத்து குஞ்சுகளுக்கு உணவூட்டுகின்றன. நமது அற்புத வனவிலங்குகள் என்ற ஆங்கில நூல் இவ்வாறு விளக்குகிறது: “பெற்றோர்களாக நாரைகள் காண்பிக்கும் உண்மைத்தன்மை அசாதாரணமானது. ஜெர்மனியில் ஓர் ஆண் நாரை உயர் அழுத்த மின் கம்பிகளில் அடிபட்டு இறந்துவிட்டது. அதன் துணைவியே மூன்று நாட்களாக முட்டைகளை தொடர்ந்து அடைகாத்தது; இந்தக் காலப்பகுதியில் ஒரேவொரு தடவைதான், அதுவும் சற்று நேரத்திற்குத்தான் இரை தேட வெளியில் சென்றது. . . . மற்றொரு நாரையின் விஷயத்தில், பெண் நாரை சுட்டுக் கொல்லப்பட்டபோது தகப்பன் நாரைதான் தன் குஞ்சுகளை வளர்த்தது.”

இணைபிரியாமல் காலமெல்லாம் சேர்ந்தே வாழும் தன் துணைக்கு இயல்புணர்ச்சியால் உண்மைத்தன்மையை காட்டுவதன் மூலமும், குஞ்சுகளை கனிவாக கவனித்துக் கொள்வதன் மூலமும் நாரை அதன் பெயருக்கேற்ப​—⁠“உண்மைப் பற்றுறுதியுள்ளவர்” என்ற பெயருக்கேற்ப​—⁠வாழ்கிறது. இவ்வாறு, உண்மையற்ற, தான்தோன்றித்தனமான இஸ்ரவேலருக்கு நாரைகள் வலிமைமிக்க பாடம் புகட்டின.

இன்று அநேகருக்கு உண்மைப் பற்றுறுதியும் உண்மைத்தன்மையும் பழைய கருத்துக்களாக​—⁠மெச்சத்தக்கதாக ஆனால் நடைமுறைக்கு உதவாததாக​—⁠தெரிகின்றன. விவாகரத்து, கைவிடப்படுதல், மோசடி, வேறு சில ஏமாற்று செயல்கள் ஆகியவை பெருகி வருவது இனிமேலும் உண்மைப் பற்றுறுதி மதிக்கப்படுவதில்லை என்பதையே காட்டுகிறது. மாறாக, அன்பினாலும் தயவினாலும் தூண்டுவிக்கப்படுகிற உண்மைப் பற்றுறுதியை பைபிள் உயர்வாக மதிக்கிறது. “மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் [“உண்மைப் பற்றுறுதியிலும்,” NW] தேவனுடைய சாயலாக சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ளு”ம்படி கிறிஸ்தவர்களை உந்துவிக்கிறது. (எபேசியர் 4:24) ஆம், புதிய ஆள்தன்மை உண்மைப் பற்றுறுதியோடு இருப்பதற்கு நமக்கு உதவுகிறது, ஆனால் நாரையிடமிருந்தும் உண்மைப் பற்றுறுதிக்கு ஒரு பாடத்தை நாம் கற்றுக்கொள்ளலாம்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்