“ஒருவருக்கொருவர் தாராளமாக மன்னியுங்கள்”
உங்களுடைய பாவங்களை கடவுள் மன்னித்துவிட்டதாக நீங்கள் நம்புகிறீர்களா? ஐக்கிய மாகாணங்களில் வசிக்கும் வயதுவந்தவர்களில் பெரும்பாலோர் அப்படித்தான் நம்புவதாக தெரிகிறது. மிச்சிகன் பல்கலைக்கழக சமூக ஆராய்ச்சி நிறுவனம் ஒரு சுற்றாய்வை நடத்தியது; அதில் பங்கேற்ற 1,423 அமெரிக்கர்களில் 45 வயதிற்கு மேற்பட்ட 80 சதவீதத்தினர், கடவுள் தங்களுடைய பாவங்களை மன்னித்துவிட்டதாக சொன்னார்கள் என இந்த ஆராய்ச்சியின் தலைமை ஆசிரியராகிய டாக்டர் லாரன் டூசங் அறிவிக்கிறார்.
ஆனால் சுற்றாய்வு செய்யப்பட்டவர்களில் 57 சதவீதத்தினரே மற்றவர்களை தாங்கள் மன்னித்ததாக சொன்னது அக்கறைக்குரியது. மலைப்பிரசங்கத்தில் இயேசு சொன்ன வார்த்தைகளை இந்தப் புள்ளிவிவரங்கள் நினைப்பூட்டுகின்றன: “மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னித்தால், உங்கள் பரம பிதா உங்களுக்கும் மன்னிப்பார். மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னியாதிருந்தால், உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களையும் மன்னியாதிருப்பார்.” (மத்தேயு 6:14, 15) ஆம், நம்முடைய பாவங்களை கடவுள் மன்னிப்பது, ஓரளவுக்கு நாம் மற்றவர்களுடைய பாவங்களை மன்னிக்க தயாராக இருப்பதை சார்ந்திருக்கிறது.
இந்த நியமத்தை கொலோசெயில் வாழ்ந்த கிறிஸ்தவர்களுக்கு அப்போஸ்தலன் பவுல் நினைப்பூட்டினார். “ஒருவரையொருவர் தாங்கி, ஒருவர் பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால், யெகோவா உங்களுக்கு தாராளமாக மன்னித்ததுபோல, நீங்களும் ஒருவருக்கொருவர் தாராளமாக மன்னியுங்கள்” என அவர்களை உந்துவித்தார். (கொலோசெயர் 3:13, NW) இது எப்பொழுதும் அவ்வளவு சுலபம் அல்ல என்பது உண்மைதான். உதாரணமாக, யோசிக்காமல் அல்லது அன்பில்லாமல் வார்த்தைக் கணைகளை எய்தவரை மன்னிப்பது உங்களுக்கு கடினமாக இருக்கலாம்.
என்றாலும், மன்னிக்கையில் கிடைக்கும் பலன்கள் அநேகம். சமுகவியலாளர் டாக்டர் டேவிட் ஆர். வில்லியம்ஸ் தன் ஆராய்ச்சியைப் பற்றி இவ்வாறு கூறினார்: “மற்றவர்களை மன்னிப்பதற்கும் மனநலனுக்கும் இடையே பலமான உறவு இருப்பதை அமெரிக்கர்களில் நடுத்தர வயதினரிலும் வயதானவர்களிலும் கண்டோம்.” சுமார் 3,000 ஆண்டுகளுக்கு முன்னர் ஞானியாகிய சாலொமோன் ராஜா எழுதிய வார்த்தைகளுடன் இது ஒத்திருக்கிறது: “மன அமைதியே உடலுக்கு ஜீவன்.” (நீதிமொழிகள் 14:30, NW) மன்னிக்கும் மனநிலை கடவுளுடனும் அக்கம்பக்கத்தாருடனும் நல்லுறவுகளை வளர்ப்பதால், மனப்பூர்வமாக ஒருவருக்கொருவர் தாராளமாக மன்னிக்கும் குணமுடையவர்களாய் இருப்பதற்கு நல்ல காரணம் இருக்கிறது.—மத்தேயு 18:35.