“கடவுளைப் பற்றி எனக்கு அதிகம் தெரியாது”
“கடந்த ஒரு வருட காலமாக யெகோவாவின் சாட்சிகள் என்னை சந்தித்து, கடவுளுடைய ராஜ்யம் சம்பந்தமாக அருமையான செய்தியை எனக்குச் சொல்லித் தருகிறார்கள். எட்டு வருடங்களாக ஒரு கத்தோலிக்கனாக இருந்து வந்தேன், இருந்தாலும் கடவுளைப் பற்றி எனக்கு அதிகம் தெரியாது. இந்த ஒரே வருஷத்தில் நான் நிறைய விஷயங்களைத் தெரிந்துகொண்டேன்” என இந்தியாவில் கேரளாவில் வாழும் ஒருவர் எழுதினார். “காவற்கோபுரம் 139 [இப்பொழுது 146] மொழிகளில் பிரசுரிக்கப்படுவதை நினைத்து எனக்கு ரொம்ப சந்தோஷம். எல்லா மொழியினரும் கடவுளைப் பற்றி அறிந்துகொள்வதைப் பார்க்க ஆச்சரியமாய் இருக்கிறது” என்றும் அவர் எழுதியிருந்தார்.
கடவுளைப் பற்றி அறிந்துகொள்வது சாத்தியமற்றது என தத்துவஞானிகள் பலர் அடித்துக் கூறுகிறபோதிலும், அது சாத்தியமே என்பதை அப்போஸ்தலன் பவுல் தெளிவாக சுட்டிக்காட்டினார். அத்தேனே பட்டணத்தைச் சேர்ந்த ஒரு கூட்டத்தாரிடம் அவர் பேசிக் கொண்டிருந்தார், அவர்களில் சிலர் “அறியப்படாத தேவனுக்கு” அர்ப்பணிக்கப்பட்ட ஒரு பலிபீடத்தை வைத்து வணங்கி வந்தார்கள். அவர்களிடம் பவுல் இவ்வாறு கூறினார்: “நீங்கள் அறியாமல் ஆராதிக்கிற அவரையே நான் உங்களுக்கு அறிவிக்கிறேன். உலகத்தையும் அதிலுள்ள யாவற்றையும் உண்டாக்கின தேவனானவர் . . . எல்லாருக்கும் ஜீவனையும் சுவாசத்தையும் சகலத்தையும் கொடுக்கி[றார்]. . . . மனுஷ ஜாதியான சகல ஜனங்களையும் அவர் ஒரே இரத்தத்தினாலே தோன்றப்பண்ணி, பூமியின் மீதெங்கும் குடியிருக்கச் செய்[திருக்கிறார்].”—அப்போஸ்தலர் 17:23-26.
படைப்பாளரைப் பற்றி அறிந்துகொள்ளும்படி பவுல் அந்தக் கூட்டத்தாரை உந்துவித்தார், ஏனென்றால் “அவர் நம்மில் ஒருவருக்கும் தூரமானவரல்லவே.” (அப்போஸ்தலர் 17:27) மெய் கடவுளையும் அவருடைய அற்புதமான குணங்களையும் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள உதவுவதற்கு யெகோவாவின் சாட்சிகள் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.