இளைஞரின் இருதயத்தை தொடுவதற்கு ஒரு வீடியோ
இளைஞர் கேட்கின்றனர்—நல்ல நண்பர்களை சம்பாதிப்பது எப்படி?a (ஆங்கிலம்) என்ற வீடியோ, இளைஞர்கள் பலர் தங்களுடைய நடத்தையைப் பற்றி தீர யோசித்துப் பார்ப்பதற்கு உந்துவித்தது. தெளிவான வேதப்பூர்வ ஆலோசனை, இளம் கிறிஸ்தவர்கள் மனந்திறந்து பேசிய வார்த்தைகள், தீனாளைப் பற்றிய பைபிள் பதிவின் (ஆதியாகமம் 34-ம் அதிகாரம்) அடிப்படையிலான நெஞ்சை தொடும் நவீன நாடகம் ஆகியவை இந்த வீடியோவில் அடங்கியுள்ளன. இந்த வீடியோவைப் பற்றிய பின்வரும் அனுபவங்கள் மெக்ஸிகோவிலிருந்து வந்தவை.
மார்த்தா இவ்வாறு கூறுகிறாள்: “அந்த வீடியோ என் இதயத்தை ஆழமாக தொட்டுவிட்டது. அது எனக்கென்றே தயாரிக்கப்பட்டது போல இருந்தது. நான் ஒரு யெகோவாவின் சாட்சி என்று ஆசிரியர்களும் மாணவர்களும் தெரிந்திருக்கிறார்கள், அதுவே போதும் என நினைத்தேன். ஆனால் அவர்களுக்கு சாட்சி கொடுப்பதன் மூலம் அதை நிரூபிக்க தவறிவிட்டேன். யெகோவா தரும் எல்லா தகவல்களுக்கும், முக்கியமாக இந்த வீடியோ மாதிரி நம்முடைய இதயத்தை ஆழமாக தொடுகிற எல்லா தகவல்களுக்கும் நன்றியுள்ளவளாக இருக்கிறேன்.”
ஹவான் கார்லோஸ் இவ்வாறு சொல்கிறார்: “இந்த வீடியோ உண்மையிலேயே நம் சிந்தனையைத் தூண்டுகிறது. ஒரு வாலிபனாக சில தப்புத்தண்டாக்கள் செய்திருக்கிறேன், அந்த நாடகத்தில் வரும் சில கதாபாத்திரங்களின் இடத்தில் என்னை வைத்துப் பார்க்க முடிந்தது. சில வருஷங்களுக்கு முன்பு, நான் இரட்டை வாழ்க்கை வாழ்ந்து வந்தேன், ஆனால் அப்படிப்பட்ட வாழ்க்கை மோசமான விளைவுகளைக் கொண்டுவரும் என்பதை புரிந்துகொண்டேன். அந்த வீடியோவைப் பார்த்தப் பிறகு, யெகோவாவுக்கு உண்மைத்தன்மையுடன் நிலைத்திருக்க உறுதிபூண்டிருக்கிறேன்.”
சூலேம் இவ்வாறு மனந்திறந்து கூறுகிறாள்: “அந்த வீடியோவைப் பார்த்தபோது, என்னுடைய உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இதற்கு முன்பு, பைபிள் வாசிப்பதை நிறுத்தியிருந்தேன், யெகோவாவிடம் அதிகமாக ஜெபம் செய்யவில்லை. ஆனால் அந்த வீடியோவில் வரும் இளைஞர்கள் சொன்ன விஷயங்களை செவிகொடுத்துக் கேட்டேன், மறுபடியும் பைபிள் படிக்க ஆரம்பிக்கவும் யெகோவாவிடம் ஜெபிக்கவும் அவை என்னை தூண்டின.”
இளைஞர்கள் இன்று அநேக சவால்களை எதிர்ப்படுகிறார்கள், அவர்கள் தேர்ந்தெடுக்கும் நண்பர்கள் அவர்களுடைய வாழ்க்கையில் பலமாக செல்வாக்கு செலுத்தலாம். (சங்கீதம் 26:4; நீதிமொழிகள் 13:20) இதன் சம்பந்தமாக நல்ல தீர்மானம் எடுப்பதற்கு, இளைஞர் கேட்கின்றனர்—நல்ல நண்பர்களை சம்பாதிப்பது எப்படி? என்ற வீடியோ பலருக்கு உதவி செய்து வருகிறது.
[அடிக்குறிப்பு]
a யெகோவாவின் சாட்சிகளால் தயாரிக்கப்பட்டது.