நமக்கு உண்மையிலேயே மற்றவர்கள் தேவையா?
“நம்முடைய வாழ்க்கையையும் நம்முடைய நடவடிக்கைகளையும் ஆராய்ந்து பார்க்கும்போது, கிட்டத்தட்ட நம்முடைய எல்லா செயல்களும் ஆசைகளும் மற்றவர்களுடைய வாழ்க்கையோடு பின்னிப்பிணைந்திருப்பதை நாம் விரைவில் அறிந்துகொள்கிறோம்” என பிரபல விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கூறினார். அவர் மேலும் கூறினார்: “மற்றவர்கள் விளைவித்த உணவுப் பொருட்களை உட்கொள்கிறோம், மற்றவர்கள் நெய்த ஆடைகளை அணிகிறோம், மற்றவர்கள் கட்டிய வீடுகளில் வசிக்கிறோம். . . . ஒரு நபர் அந்நபராக இருப்பதற்கும் அந்நபராக முக்கியத்துவம் பெற்றிருப்பதற்கும் தலையாய காரணம் அவருடைய ஆள்தன்மை அல்ல, ஆனால் அவர் மனித சமுதாயத்தின் பாகமாக இருப்பதே ஆகும். இந்த சமுதாயமே தொட்டில் முதல் சுடுகாடு வரை அவருடைய உலக மற்றும் ஆன்மீக வாழ்க்கை மீது செல்வாக்கு செலுத்துகிறது.”
விலங்குகள் இயல்புணர்ச்சியால் கூடிவாழ்வதை நாம் சாதாரணமாக பார்க்கலாம். யானைகள் தங்களுடைய குட்டிகளை கவனமாக பாதுகாத்துக்கொண்டு, கூட்டம் கூட்டமாக செல்கின்றன. பெண் சிங்கங்கள் ஒருமித்து வேட்டையாடி ஆண் சிங்கங்களுடன் உணவை பகிர்ந்துண்கின்றன. டால்பின்கள் ஒன்றுசேர்ந்து விளையாடுகின்றன, பிற விலங்குகளை அல்லது நீச்சலடிப்பவர்களை ஆபத்திலிருந்து காப்பாற்றியும் இருக்கின்றன.
ஆனால், மனிதர்கள் மத்தியில் வளர்ந்துவரும் ஒரு பிரச்சினை கவலைகொள்ளச் செய்வதைப் பற்றி சமுக அறிவியலாளர்கள் கவனித்திருக்கின்றனர். “வருஷக்கணக்காக தனி நபர்கள் ஒதுங்கி வாழ்வதும் சமுக வாழ்க்கை குறைந்து வருவதும் ஐ.மா. சமுதாயத்தின் மீது பயங்கர பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது” என அறிவியலாளர்கள் சிலர் கருதுவதாக மெக்ஸிகோவில் பிரசுரிக்கப்பட்ட ஒரு செய்தித்தாள் கூறியது. “முழு சமுதாயமும் மாறினால்தான், அதாவது சமுக வாழ்க்கைக்கு மீண்டும் திரும்பினால்தான் அந்த தேசம் நலம்பெறும்” என அந்தச் செய்தித்தாள் குறிப்பிட்டது.
இந்தப் பிரச்சினை முக்கியமாக வளர்ச்சியடைந்த நாடுகளில் வாழ்கிறவர்கள் மத்தியில் பரவி வருகிறது. தங்களை தனியே ஒதுக்கி வைத்துக்கொள்ளும் போக்கு வேகமாக வளர்ந்துவருகிறது. மக்கள் ‘தன்னிச்சையாக வாழ’ விரும்புகிறார்கள், பிறர் ‘தங்களுடைய வாழ்க்கையில் குறுக்கிடுவதை’ கடுமையாக எதிர்க்கிறார்கள். இந்த மனோபாவம் உணர்ச்சி ரீதியிலான பிரச்சினைகளுக்கும், மன உளைச்சலுக்கும், தற்கொலைக்கும் வழிநடத்தியிருக்கிறது என சொல்லப்படுகிறது.
இதன் சம்பந்தமாக டாக்டர் டேனியல் கோல்மன் இவ்வாறு குறிப்பிட்டார்: “சமுதாயத்திலிருந்து ஒதுங்கி வாழ்வது—அதாவது, தனிப்பட்ட உணர்ச்சிகளைத் தெரிவிப்பதற்கோ நெருக்கமான உறவை வைத்துக்கொள்வதற்கோ ஒருவருமே இல்லை என்பது—வியாதியை அல்லது மரணத்தை உண்டாக்கும் சாத்தியத்தை இரட்டிப்பாக்குகிறது.” ‘புகைபிடிக்கும் பழக்கம், உயர் இரத்த அழுத்தம், கொழுப்புச் சத்து மிகுதி, உடல் பருமன், உடற்பயிற்சியின்மை ஆகியவற்றைப் போன்றே சமுதாயத்திலிருந்து ஒதுங்கியிருப்பதும் இறப்பு வீதத்திற்கு முக்கிய காரணமாக இருக்கிறது’ என்ற முடிவுக்கு வந்தது சயன்ஸ் இதழில் வெளியிடப்பட்ட ஓர் அறிக்கை.
அப்படியானால், பல்வேறு காரணங்களுக்காக நமக்கு உண்மையிலேயே மற்றவர்கள் தேவை. நாம் முற்றிலும் தனித்து வாழ முடியாது. ஆகவே ஒதுங்கி வாழும் இந்தப் பிரச்சினையை எப்படி தீர்க்கலாம்? பலருக்கு எது உண்மையான அர்த்தமுடைய வாழ்வை தந்திருக்கிறது? இந்தக் கேள்விகளை அடுத்து வரும் கட்டுரை அலசும்.
[பக்கம் 3-ன் சிறு குறிப்பு]
‘கிட்டத்தட்ட நம்முடைய எல்லா செயல்களும் ஆசைகளும் மற்றவர்களுடைய வாழ்க்கையோடு பின்னிப்பிணைந்திருக்கின்றன.’—ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்