உதவிக்காக கூக்குரலிடுவோருக்கு ஆறுதல்
பைபிள் மனநல மேம்பாட்டிற்கான ஓர் ஏடு அல்ல. இருந்தாலும், அது நமக்கு ஆறுதல் தருகிறது, நாம் எதிர்ப்படும் கஷ்டங்கள் மத்தியிலும் வாழ்க்கையை அனுபவித்து மகிழ வழி சொல்கிறது. “ஸ்திரீயினிடத்தில் பிறந்த மனுஷன் வாழ்நாள் குறுகினவனும் சஞ்சலம் நிறைந்தவனுமாயிருக்கிறான்” என்று பைபிள் யதார்த்தமாகவே சொல்கிறது. (யோபு 14:1) நமக்கு வரும் சில சோதனைகள் நம்முடைய சொந்த அபூரணத்தால் வருகின்றன. ஆனால் மனிதன் துயரப்படுவதற்கு முக்கிய பொறுப்பாளி யார்?
பிசாசு என்றும் சாத்தான் என்றும் அழைக்கப்படும் பொல்லாத ஆவியே என பைபிள் அடையாளம் காட்டுகிறது. அவனே இந்த ‘உலகமனைத்தையும் மோசம் போக்கி’ வருகிறான்; மனிதகுலத்தை பீடித்திருக்கும் பல தொல்லைகளுக்கும் அவனே காரணகர்த்தா. இருந்தாலும், அவனுடைய முடிவு காலம் நெருங்கி வருகிறது என்றும் பைபிள் நமக்குச் சொல்கிறது. (வெளிப்படுத்துதல் 12:9, 12) பூமியின் குடிகள் மீது சாத்தான் சுமத்தியிருக்கிற அனைத்து வேதனைக்கும் கடவுளுடைய தலையீட்டால் விரைவில் ஒரு முடிவு வரும். பைபிள் சொல்கிறபடி, கடவுள் வாக்குறுதி அளித்திருக்கிற நீதியான புதிய உலகம் சோர்வுக்கும் விரக்திக்கும் முற்றுப்புள்ளி வைக்கும்.—2 பேதுரு 3:13.
மனிதன் படும் துயரங்களெல்லாம் தற்காலிகமே என்பதை அறிவது எவ்வளவு ஆறுதலளிக்கிறது! இயேசு கிறிஸ்துவின் தலைமையில் கடவுளுடைய பரலோக ராஜ்யம் ஆட்சி செய்கையில் அநீதியும் துன்பமும் ஒழிந்துபோகும். கடவுளால் நியமிக்கப்பட்ட அரசரைப் பற்றி பைபிள் இவ்வாறு குறிப்பிடுகிறது: “கூப்பிடுகிற எளியவனையும், உதவியற்ற சிறுமையானவனையும் அவர் விடுவிப்பார். பலவீனனுக்கும் எளியவனுக்கும் அவர் இரங்கி, எளியவர்களின் ஆத்துமாக்களை இரட்சிப்பார். அவர்கள் ஆத்துமாக்களை வஞ்சகத்திற்கும் கொடுமைக்கும் தப்புவிப்பார்; அவர்களுடைய இரத்தம் அவருடைய பார்வைக்கு அருமையாயிருக்கும்.”—சங்கீதம் 72:12-14.
இந்தத் தீர்க்கதரிசன வார்த்தைகள் நிறைவேறும் காலம் வெகு அருகில் இருக்கிறது. அற்புதகரமான சூழ்நிலைமைகளில் பூங்காவனம் போன்ற பரதீஸிய பூமியில் நித்திய வாழ்வை அனுபவித்து மகிழலாம். (லூக்கா 23:43; யோவான் 17:3) உதவிக்காக கூக்குரலிடும் நெஞ்சங்களுக்கு பைபிள் தரும் இந்த ஆறுதலான வாக்குறுதியைப் பற்றி அறிவது நம்பிக்கை அளிக்கிறது.
[பக்கம் 32-ன் படத்திற்கான நன்றி]
மனச்சோர்வடைந்த சிறுமி: Photo ILO/J. Maillard