விசுவாசம் சுகப்படுத்துமா?
வியாதியில் அவதிப்படும்போது, அதிலிருந்து நிவாரணமடைவதற்கும் பூரண நலம் பெறுவதற்கும் முயற்சி செய்கிறோம். எல்லா வித வியாதிகளையும் இயேசு கிறிஸ்து பல முறை சுகப்படுத்தியதைப் பற்றி நீங்கள் ஒருவேளை பைபிளில் வாசித்திருக்கலாம்; அவ்வாறு அவர் சுகப்படுத்தியதால் ஏராளமான பிணியாளிகள் குணமடைந்தனர். அத்தகைய சுகப்படுத்துதல்கள் எவ்வாறு நடைபெற்றன? ‘தேவனுடைய வல்லமையினால்’ என பைபிள் சொல்கிறது. (லூக்கா 9:42, 43, NW; அப்போஸ்தலர் 19:11, 12) ஆகவே, வியாதிப்பட்டவர் பூரண சுகமடைந்ததற்கு கடவுளுடைய பரிசுத்த ஆவிதான் காரணமே தவிர வியாதிப்பட்டவரின் விசுவாசம் மட்டுமே அல்ல. (அப்போஸ்தலர் 28:7-9) அதனால்தான், சுகவீனர்கள் குணமடைவதற்கு தம்மீது விசுவாசம் இருப்பதை அவர்கள் வெளிப்படையாக தெரிவிக்க வேண்டுமென்று இயேசு எதிர்பார்க்கவில்லை.
‘அப்படிப்பட்ட அற்புத சுகப்படுத்துதல் இனி நடக்காதா? அன்று இயேசு செய்ததைப் போன்ற சுகப்படுத்துதல்கள் மறுபடியும் நடக்குமா? வேதனையான அல்லது தீராத நோயினால் அவதிப்படுபவர்களுக்கு என்ன நம்பிக்கை இருக்கிறது?’ என்றெல்லாம் நீங்கள் ஒருவேளை யோசிக்கலாம்.
இயேசு பூமியிலிருந்த சமயத்தில் செய்தது போன்ற அற்புத சுகப்படுத்துதல்கள் தேவனுடைய வல்லமையால் திரும்பவும் நடக்கப் போகின்றன என பைபிள் சொல்கிறது; கடவுளுடைய நீதியான புதிய உலகத்தில் அவை நடைபெறப் போகின்றன. விசுவாச சுகமளிக்கும் எவராலும் செய்ய முடியாத காரியத்தை கடவுள் செய்யப் போகிறார்; அதாவது எல்லா வியாதிகளையும், ஏன், மரணத்தையும்கூட நீக்கப்போகிறார்; ஆம், கடவுள் நிச்சயம் ‘மரணத்தை ஜெயமாக விழுங்கப் போகிறார்.’ எப்படி? எப்போது? உங்கள் பிராந்தியத்திலுள்ள யெகோவாவின் சாட்சிகள் இதற்கான பதிலை அளிப்பதில் சந்தோஷப்படுவார்கள்.—ஏசாயா 25:8.