ராஜ்ய அறிவிப்பாளர் அறிக்கை
‘நீர் வந்து எங்களுக்கு உதவி செய்யும்’
பொலிவியாவிற்கு வந்து உதவுமாறு ஆஸ்திரியா, ஜெர்மனி, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் வசிக்கும், ஜெர்மன் மொழி அறிந்த சாட்சிகளுக்கு ஜூலை 2000-ல் அழைப்பு விடுக்கப்பட்டது. ஏன்? பொலிவியாவில் சான்டா க்ரூஸுக்கு அருகே 300 கிலோமீட்டர் சுற்றுவட்டாரத்தில் ஜெர்மன் மொழி பேசும் மெனனைட் இனத்தவர் பைபிளில் மிகுந்த ஆர்வம் காட்டினார்கள்; அவர்கள் தனிக்குடியிருப்புகளில் வசிக்கிறார்கள்.
சுமார் 140 சாட்சிகள் இந்த அழைப்பை ஏற்றார்கள். சிலர் ஒருசில வாரங்கள் அங்கு தங்கி ஊழியம் செய்ய சென்றார்கள், மற்றவர்கள் ஒரு வருடத்திற்கோ அதற்கும் அதிகமாகவோ ஊழியம் செய்ய சென்றார்கள். இவ்விதத்தில் முதல் நூற்றாண்டு மிஷனரிகள் காட்டிய மனப்பான்மையையே அவர்களும் வெளிக்காட்டினார்கள்; அந்த மிஷனரிகள், ‘நீர் மக்கெதோனியாவுக்கு வந்து எங்களுக்கு உதவி செய்ய வேண்டும்’ என்ற அழைப்பை ஏற்று செயல்பட்டிருந்தார்கள்.—அப்போஸ்தலர் 16:9, 10.
பொலிவியாவிலுள்ள அந்தப் பிராந்தியத்தில் செய்யப்படும் ஊழியம் எப்படியிருக்கிறது? அங்குள்ள சபையின் ஒரு மூப்பர் இவ்வாறு விளக்குகிறார்: “43 மெனனைட் குடியிருப்புகளில் ஒரு குடியிருப்புக்கு செல்ல கிட்டத்தட்ட எட்டு மணிநேரம் எடுக்கும். ஃபோர்-வீல்-டிரைவ் வாகனத்தில் கரடுமுரடான சாலைகளில் பயணிக்க வேண்டும். இன்னும் தொலைவான குடியிருப்புகளுக்கு செல்ல நான்கு நாட்கள் எடுக்கும், சில நாள் ராத்திரியில் கூடாரங்களில் தூங்க வேண்டும். ஆனால் இத்தனை முயற்சியும் தகுந்ததுதான், ஏனென்றால் இந்த மக்களில் யாரும் நற்செய்தியை இதுவரை கேட்டதே இல்லை.”
மெனனைட் இனத்தவரில் அநேகர் சாட்சிகளை முதலில் வரவேற்கவில்லை. ஆனால் சாட்சிகள் அவர்களை திரும்பத் திரும்ப சந்தித்ததால் இப்போது அவர்களின் வேலையை போற்ற ஆரம்பித்திருக்கிறார்கள். உதாரணத்திற்கு, விழித்தெழு! பத்திரிகையை ஒரு வருடமாக படித்து வந்ததாக ஒரு விவசாயி சொன்னார். “நீங்கள் சொல்வதை இங்குள்ள அநேகர் ஏற்றுக்கொள்வதில்லை என்பது எனக்குத் தெரியும், ஆனால் அதுதான் சத்தியம் என நான் நம்புகிறேன்” என்றும் சொன்னார். இன்னொரு குடியிருப்பில் ஒருவர் இவ்வாறு கூறினார்: “அக்கம்பக்கத்தில் சிலர் உங்களை பொய் தீர்க்கதரிசிகள் என்று சொல்கிறார்கள், மற்றவர்கள் உங்களிடம் சத்தியம் இருப்பதாக சொல்கிறார்கள். எது உண்மையென நானே கண்டுபிடிக்க வேண்டும்.”
இப்போது பொலிவியாவில் ஜெர்மன் மொழி சபை ஒன்று இருக்கிறது; அதில் 35 பிரஸ்தாபிகள் இருக்கிறார்கள். அவர்களில் 14 பேர் முழுநேர சுவிசேஷகர்கள். இன்றுவரை மெனனைட் இனத்தவரில் 14 பேர் ராஜ்ய பிரஸ்தாபிகளாக ஆகியிருக்கிறார்கள், இன்னும் 9 பேர் தவறாமல் கூட்டங்களுக்கு வருகிறார்கள். சமீபத்தில் முழுக்காட்டுதல் பெற்ற வயதான ஒருவர் இவ்வாறு சொன்னார்: “யெகோவாவின் வழிநடத்துதலை எங்களால் தெளிவாக பார்க்க முடிகிறது. ஜெர்மன் மொழி பேசும் அனுபவம் வாய்ந்த சகோதர சகோதரிகளை எங்களுக்காக அனுப்பி வைத்திருக்கிறார். நாங்கள் அதற்கு ரொம்ப நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்.” அவருடைய 17 வயது மகளும் முழுக்காட்டுதல் எடுத்திருக்கிறாள். அவள் சொல்வதாவது: “இங்கே வந்திருக்கும் இளம் சகோதர சகோதரிகளின் உற்சாகம் மற்றவர்களையும் தொற்றிக்கொள்கிறது. அவர்களில் பெரும்பாலோர், மற்றவர்களுக்கு உதவி செய்ய தங்கள் நேரத்தையும் பணத்தையும் செலவிடும் பயனியர்கள். அவர்களைப் போல் ஆக வேண்டுமென்ற ஆசை எனக்கும் வந்துவிட்டது.”
‘வந்து உதவி செய்யும்’ என்ற அழைப்பை ஏற்று செயல்பட்டவர்கள் உண்மையில் மிகுந்த சந்தோஷத்தையும் மனதிருப்தியையும் அடைந்து வருகிறார்கள்.