வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
குறிப்பிட்ட புறதேசத்தாரை மணமுடிக்கக் கூடாது என மோசேயின் நியாயப்பிரமாண சட்டம் கட்டளையிட்டிருந்த போதிலும் சிறைபிடித்து வந்த புறதேச பெண்களை மணமுடிக்க இஸ்ரவேல் ஆண்களுக்கு ஏன் அனுமதி அளிக்கப்பட்டது?—உபாகமம் 7:1-3; 21:10, 11.
இப்படி அனுமதிக்கப்பட்டதற்கு பிரத்தியேக சூழ்நிலைமைகளே காரணம். கானானில் குடியிருந்த ஏழு தேசத்தாரை முற்றிலும் கொன்று, அவர்களது பட்டணங்களை தரைமட்டமாக்கும்படி இஸ்ரவேலருக்கு யெகோவா கட்டளையிட்டிருந்தார். (உபாகமம் 20:15-18) மற்ற தேசங்களை அழிக்கையில், தப்பிப்பிழைத்தவர்கள் இருந்தார்கள் என்றால் அவர்கள் சிறைபிடிக்கப்பட்ட கன்னிப் பெண்கள் மட்டுமே. (எண்ணாகமம் 31:17, 18; உபாகமம் 20:14) அத்தகைய ஒரு பெண் சில நடவடிக்கைகளை எடுத்திருந்தால் அவளை ஓர் இஸ்ரவேலன் மணமுடிக்கலாம்.
அவள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளைப் பற்றி பைபிள் இவ்வாறு விவரிக்கிறது: “அவள் தன் தலையைச் சிரைத்து, தன் நகங்களைக் களைந்து [“வெட்டி,” பொது மொழிபெயர்ப்பு], தன் சிறையிருப்பின் வஸ்திரத்தையும் நீக்கி, உன் வீட்டிலிருந்து, ஒரு மாதமட்டும் தன் தகப்பனையும் தாயையும் நினைத்துத் துக்கங்கொண்டாடக்கடவள்; அதன் பின்பு நீ அவளோடே சேர்ந்து, அவளுக்குப் புருஷனாயிரு, அவள் உனக்கு மனைவியாயிருப்பாள்.”—உபாகமம் 21:12, 13.
சிறைபிடிக்கப்பட்ட ஒரு கன்னிகையை ஓர் இஸ்ரவேலன் மணமுடிக்க விரும்பினால் அவளுடைய தலையை சிரைக்க வேண்டும். தலையை சிரைப்பது, துக்கத்தை அல்லது வருத்தத்தை வெளிக்காட்டுவதாக இருந்தது. (ஏசாயா 3:24) உதாரணத்திற்கு, கோத்திரத் தகப்பனாகிய யோபு தன் பிள்ளைகள், சொத்து சுகங்கள் அனைத்தையும் இழந்து நிர்க்கதியாய் நின்றபோது, துக்கத்தை வெளிக்காட்டும் விதத்தில் தன் தலைமுடியை சிரைத்தார். (யோபு 1:20) மேலும், அந்தப் புறதேச பெண் தன் நகங்களை ‘ஒட்ட வெட்ட’ வேண்டும்; ஒருவேளை அவள் தன் நகங்களுக்கு சாயம் பூசியிருந்தாலும் அவை அழகாக தெரியாதிருப்பதற்கு அப்படி வெட்ட வேண்டும். (உபாகமம் [இணைச் சட்டம்] 21:12, பொ.மொ.) சிறைபிடித்து வரப்பட்ட பெண் களைய வேண்டிய ‘சிறையிருப்பின் வஸ்திரம்’ எது? கானானிய பட்டணங்கள் கைப்பற்றப்பட போவது தெரிய வருகையில் அவற்றிலிருந்த பெண்கள் அழகான வஸ்திரங்களால் தங்களை அலங்கரித்துக் கொள்வது வழக்கம். கைப்பற்றுபவர்களைக் கவர்ந்திழுக்கும் நம்பிக்கையிலேயே அவர்கள் இவ்வாறு அலங்கரித்துக் கொண்டார்கள். சிறைபிடிக்கப்பட்ட பெண் துக்கிக்கையில் அத்தகைய ஆடையை உடுத்தாமல் நீக்கிவிட வேண்டியிருந்தது.
ஓர் இஸ்ரவேலனுக்கு மனைவியாகப் போகும் சிறைபிடிக்கப்பட்ட பெண், இறந்துபோன தன் நேசத்திற்குரியவர்களுக்காக ஒரு மாத காலம் துக்கம் அனுஷ்டிக்க வேண்டியிருந்தது. கானானிய பட்டணங்கள் தரைமட்டமாக்கப்பட்டதால் அவளுடைய குடும்பத்தாரும் சொந்த பந்தங்களும் உயிரோடில்லை. இஸ்ரவேல் போர்வீரர்கள் அவளுடைய தேவர்களின் உருவச் சிலைகளை அழித்துவிட்டிருந்ததால் அவள் வணங்கி வந்த பொருட்களும் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டிருந்தன. அந்த ஒரு மாத கால துக்கம், சுத்திகரித்துக் கொள்வதற்கான காலப் பகுதியும்கூட; அந்த சமயத்தில் அந்தப் பெண் தனது கடந்த கால மத பழக்கவழக்கங்கள் அனைத்தையும் விட்டொழிக்க வேண்டியிருந்தது.
ஆனால், பொதுவாக மற்ற புறமத பெண்களைப் பொறுத்ததில் சூழ்நிலை வித்தியாசமாக இருந்தது. அதன் சம்பந்தமாக யெகோவா இவ்வாறு கட்டளையிட்டார்: “அவர்களோடே சம்பந்தம் கலவாயாக; உன் குமாரத்திகளை அவர்கள் குமாரருக்குக் கொடாமலும், அவர்கள் குமாரத்திகளை உன் குமாரருக்குக் கொள்ளாமலும் இருப்பாயாக.” (உபாகமம் 7:3) இந்தக் கட்டுப்பாட்டிற்குக் காரணம் என்ன? “என்னைப் பின்பற்றாமல், அந்நிய தேவர்களைச் சேவிக்கும்படி அவர்கள் உன் குமாரரை விலகப் பண்ணுவார்கள்” என உபாகமம் 7:4 சொல்கிறது. எனவே இஸ்ரவேலர் மத சம்பந்தமாக தங்களை கறைபடுத்திக் கொள்ளாதிருக்கும் நோக்கத்துடனேயே இந்தக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் உபாகமம் 21:10-13-ல் விவரிக்கப்பட்ட சூழ்நிலைமைகளில் இருந்த ஒரு புறதேச பெண்ணால் அத்தகைய ஆபத்து ஏதுமில்லை. ஏனெனில் அவளுடைய சொந்த பந்தங்கள் எல்லாரும் மடிந்துவிட்டார்கள், அவளுடைய தேவர்களைப் பிரதிநிதித்துவம் செய்த உருவச் சிலைகளும் அழிக்கப்பட்டுவிட்டன. பொய் மதத்தைப் பின்பற்றியவர்களுடன் அவளுக்கு எந்தத் தொடர்பும் இல்லாதிருந்தது. இப்படிப்பட்ட சூழ்நிலைமைகளில் ஒரு புறதேசத்தாளை மணமுடிக்க ஓர் இஸ்ரவேலன் அனுமதிக்கப்பட்டான்.