சாப்பாட்டு நேரம்—சாப்பிடுவதற்கு மட்டுமல்ல!
எல்லாருமே அறுசுவைமிக்க உணவை உண்டு மகிழ்கிறோம். இப்படி உணவருந்தும் வேளையில் அன்புக்குரியவர்களுடன் உரையாடும் போதும் உறவாடும் போதும் ஓர் இனிய பொழுதை அனுபவித்த உணர்வு உண்டாகிறது. ஒரு நாளில் ஒரு தடவையாவது ஒன்றாகக் கூடி உணவு அருந்துவதைப் பல குடும்பங்கள் பழக்கமாக ஆக்கியிருக்கின்றன. அந்நாளில் நடந்த சம்பவங்களையோ எதிர்கால திட்டங்களையோ குடும்பமாக கலந்துரையாட பொன்னான வாய்ப்பும் கிடைக்கிறது. பிள்ளைகள் சொல்வதைக் காதுகொடுத்துக் கேட்கும் பெற்றோர்களுக்கு அவர்களுடைய சிந்தைகளையும் உணர்ச்சிகளையும் பற்றி ஓரளவு தெரிந்துகொள்ள முடிகிறது. இப்படியே செய்து வந்தால், சாப்பாட்டு நேரத்தில் அனுபவித்து மகிழும் மகிழ்ச்சியான இனிய தோழமை பாதுகாப்புணர்வையும் நம்பிக்கையையும் அன்பையும் குடும்பத்தில் வளர்க்கும். இவையெல்லாம் குடும்பம் ஸ்திரப்பட துணைபுரியும்.
இன்று குடும்ப அங்கத்தினர்கள் பலர் சதா வேலை வேலையென பம்பரமாய் சுழன்று கொண்டிருப்பதால், சாப்பிட ஒன்றாகக் கூடிவருவது அவர்களுக்குப் பெரும்பாடாக இருக்கிறது. சில இடங்களில், குடும்பமாக சேர்ந்து உணவருந்துவதையும் அந்தச் சமயத்தில் பேசுவதையும்கூட உள்ளூர் கலாச்சாரம் அனுமதிப்பதில்லை. வேறு சில குடும்பங்களில் சாப்பாட்டு நேரத்தில் டிவியை ‘ஆன்’ செய்துவிடுகிறார்கள், இது அர்த்தமுள்ள பேச்சுக்கு முட்டுக்கட்டையாக ஆகிவிடுகிறது.
ஆனால் கிறிஸ்தவ பெற்றோர்கள் தங்களுடைய குடும்பத்தைக் கட்டியமைக்க எப்பொழுதும் விழிப்புடன் இருக்கிறார்கள். (நீதிமொழிகள் 24:27) வெகு காலத்திற்கு முன்பு, கடவுளுடைய வார்த்தையைப் பற்றி தங்கள் பிள்ளைகளிடம் பேசுவதற்கு மிகச் சிறந்த சந்தர்ப்பம் அவர்கள் ‘வீட்டில் உட்கார்ந்திருக்கிற நேரமே’ என்று பெற்றோரிடம் சொல்லப்பட்டது. (உபாகமம் 6:7) வழக்கமாக ஒன்றுசேர்ந்து சாப்பிடும்போது, யெகோவாவுக்கும் அவருடைய நீதியான நியமங்களுக்குமான ஆழமான அன்பை பிள்ளைகளுடைய மனதில் பெற்றோர்கள் பதிய வைக்க சிறந்த சந்தர்ப்பம் கிடைக்கிறது. மகிழ்ச்சியான, அமைதலான சூழலை உருவாக்குவதன் மூலம் உணவருந்தும் வேளையை ஓர் இனிய வேளையாக மாற்றலாம். அது உங்களுடைய குடும்பத்திற்கும்கூட உற்சாகமூட்டும் ஓர் அனுபவமாக இருக்கலாம். ஆம், சாப்பாட்டு நேரத்தை சாப்பிடுவதற்கு மட்டுமல்ல மகிழ்ச்சியான நேரமாகவும் ஆக்குங்கள்!