சொற் போர்கள்—ஏன் தீங்கிழைக்கின்றன?
“உங்களுக்குள்ளே யுத்தங்களும் சண்டைகளும் எதினாலே வருகிறது?”—யாக்கோபு 4:1.
நாடுகளைக் கைப்பற்றுவதற்காக போரிட்டுக் கொண்டிருந்த ரோம படை வீரர்களிடம் பைபிள் எழுத்தாளரான யாக்கோபு இக்கேள்வியை கேட்கவில்லை. பொ.ச. முதல் நூற்றாண்டைச் சேர்ந்த யூத ஸிக்காரிகள் அல்லது பட்டாக்கத்தி வீரர்கள் நடத்திய கொரில்லா போர்களுக்கான காரணங்களையும் அவர் ஆராய்ந்து கொண்டில்லை. குறைந்தபட்சம் இரண்டு நபர்களுக்கு இடையில் ஏற்படும் பிரச்சினைகளைப் பற்றியே யாக்கோபு பேசிக்கொண்டிருந்தார். ஏன்? போர்களைப் போல, தனிப்பட்ட சச்சரவுகளும்கூட தீங்குக்கு வழிநடத்தியிருக்கின்றன. பின்வரும் பைபிள் பதிவுகளைக் கவனியுங்கள்.
கோத்திரப் பிதாவான யாக்கோபின் மகன்கள் தங்கள் சகோதரன் யோசேப்பை மிகவும் பகைத்ததால் அவனை ஓர் அடிமையாக விற்றுப்போட்டார்கள். (ஆதியாகமம் 37:4-28) பிற்பாடு, இஸ்ரவேலை ஆண்ட சவுல் ராஜாவோ தாவீதை கொல்வதற்கு முயற்சித்தான். ஏன்? ஏனென்றால் அவன் தாவீதைப் பார்த்து பொறாமைப்பட்டான். (1 சாமுவேல் 18:7-11; 1 சாமுவேல் 23:14, 15) முதல் நூற்றாண்டில், எயோதியாள் மற்றும் சிந்திகேயாள் என்ற இரு கிறிஸ்தவ பெண்களும் தங்களுக்குள் தகராறு பண்ணி முழு சபையின் சமாதானத்தையும் குலைத்துப் போட்டார்கள்.—பிலிப்பியர் 4:2.
சமீப காலங்களில், கத்தி முனையில் அல்லது துப்பாக்கி முனையில் ஒத்தைக்கு ஒத்தையாக மனிதர்கள் சண்டைகளைத் தீர்த்து கொண்டார்கள். அதில் ஒருவர் பெரும்பாலும் உயிரிழந்தார் அல்லது நிரந்தரமாக ஊனமானார். இன்றோ, சண்டையிடுபவர்கள் கடுமையான, காயப்படுத்தும் வார்த்தைகளை ஆயுதமாய் பயன்படுத்துகிறார்கள். கத்தியின்றி ரத்தமின்றி சண்டையிட்டாலும், சொற்களால் மற்றவர்களின் உணர்ச்சிகளையும் நற்பெயரையும் காயப்படுத்துகிறார்கள். இந்தப் “போர்களில்” குற்றமற்றவர்கள்தான் பெரும்பாலும் துன்பத்திற்கு ஆளாகிறார்கள்.
சில வருடங்களுக்கு முன்பு, சர்ச் நிதியை துஷ்பிரயோகம் செய்ததாக ஆங்கிலிகன் பாதிரியார் ஒருவர் மற்றொரு பாதிரியாரை குற்றஞ்சாட்டியபோது என்ன நடந்தது என்பதை கவனியுங்கள். அவர்களுடைய சச்சரவு வெளியரங்கமானவுடன், அவர்களுடைய சபை பல தொகுதிகளாக பிரிந்தது. உறுப்பினர்கள் சிலர், தாங்கள் எதிர்க்கிற பாதிரியார் ஆராதனை நடத்தும் நாட்களில் சர்ச்சுக்குப் போவதையே தவிர்த்தார்கள். உறுப்பினரிடையே வெறுப்பு அந்தளவு கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்ததால், ஆராதனைக்காக சர்ச்சில் கூடியபோது ஒருவருக்கொருவர் முகத்தைத் திருப்பிக் கொண்டார்கள். குற்றஞ்சாட்டிய பாதிரியாரே பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளானபோது, விவாதம் இன்னும் சூடேற ஆரம்பித்தது.
கான்டர்பரியின் ஆர்ச்பிஷப் இவர்களின் சண்டையை “புற்றுநோய்” என்றும், “கர்த்தருடைய நாமத்தை அவமதிக்கும் இழிவான நடத்தை” என்றும் குறிப்பிட்டு அதற்கு முடிவுகட்டும்படி இருவரிடமும் கேட்டுக்கொண்டார். 1997-ல் அந்த பாதிரியார்களில் ஒருவர் ஓய்வு பெற சம்மதித்தார். மற்றொருவர் கட்டாய ஓய்வு பெறும் வயதை அடையும்வரை அந்தப் பதவியை விட்டுவிட மறுத்துவிட்டார். கடைசிவரை அந்தப் பதவியிலேயே இருந்து ஆகஸ்ட் 7, 2001-ல் தனது 70-ம் பிறந்த நாளில் ஓய்வு பெற்றார். அவர் ஓய்வு பெற்ற தினம் “புனித” விக்ட்ரிசியஸுக்குப் பண்டிகை நாள் என சர்ச் ஆஃப் இங்லாண்ட் நியூஸ்பேப்பர் குறிப்பிட்டது. “புனித” விக்ட்ரிசியஸ் யார்? ராணுவத்தில் சேர்ந்து சண்டையிட மறுத்ததன் காரணமாக கசையால் அடிக்கப்பட்டதாக சொல்லப்படும் நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த பிஷப். “புனித” விக்ட்ரிசியஸ் காட்டிய மனப்பான்மையும் இந்தப் பாதிரியார் காட்டிய மனப்பான்மையும் முற்றிலும் வித்தியாசமாக இருந்ததைக் குறித்து அந்த செய்தித்தாள் இவ்வாறு குறிப்பிட்டது: “[ஓய்வு பெறும் இந்தப் பாதிரியார்] திருக்கோயில் தொடர்பான சண்டையில் ஈடுபட மறுக்கவே இல்லை.”
“ஒருவனுக்கும் தீமைக்குத் தீமை செய்யாதிருங்கள்; எல்லா மனுஷருக்கு முன்பாகவும் யோக்கியமானவைகளைச் செய்ய நாடுங்கள். கூடுமானால் உங்களாலானமட்டும் எல்லா மனுஷரோடும் சமாதானமாயிருங்கள்” என்று ரோமர் 12:17, 18-ல் சொல்லப்பட்டுள்ள அறிவுரையை அந்தப் பாதிரியார்கள் பின்பற்றியிருந்தால் தங்களைத் தாங்களேயும் மற்றவர்களையும் புண்படுத்துவதை தவிர்த்திருக்கலாம்.
உங்களைப் பற்றியென்ன? யாராவது உங்களைப் புண்படுத்திவிட்டால் கோபத்தில் எரிந்து விழுகிறீர்களா? அல்லது கடுமையான வார்த்தைகளைத் தவிர்த்து சமாதானத்திற்கான வாசலை திறந்தே வைக்கிறீர்களா? நீங்கள் ஒருவரை புண்படுத்திவிட்டால், காலப்போக்கில் அவர் அந்தப் பிரச்சினையை மறந்து விடுவார் என்று நினைத்து அவரை வேண்டுமென்றே தவிர்க்கிறீர்களா? அல்லது உடனுக்குடன் மன்னிப்பு கேட்கிறீர்களா? நீங்கள் மன்னிப்பு கேட்டாலும் சரி மன்னித்தாலும் சரி, சமாதானம் ஆவதற்கு முயற்சி செய்வது உங்களுக்கு நன்மையிலேயே விளைவடையும். பின்வரும் கட்டுரை காட்டுகிறபடி, பைபிளின் அறிவுரை பல்லாண்டு பகையையும்கூட தீர்க்க உதவும்.