எப்படிப்பட்ட அஸ்திபாரத்தின் மீது கட்டுகிறீர்கள்?
ஒரு கட்டடம் நீண்ட காலம் நிலைத்திருப்பதற்கு அதன் அஸ்திபாரம் பலமானதாக இருக்க வேண்டும். இந்த உண்மையை பைபிள் அடையாள அர்த்தத்தில் சில சமயம் பயன்படுத்துகிறது.
உதாரணமாக, ‘பூமியை அஸ்திபாரப்படுத்துகிறவர்’ என யெகோவா தேவனைப் பற்றி ஏசாயா தீர்க்கதரிசி குறிப்பிடுகிறார். (ஏசாயா 51:12) பூமியின் இயக்கத்தைக் கட்டுப்படுத்தி, அதன் நிலையிலேயே இருக்கும்படி பார்த்துக்கொள்ளும் சட்டங்களை—கடவுளுடைய மாறாத சட்டங்களை—இந்த அஸ்திபாரம் குறிக்கிறது. (சங்கீதம் 104:5) மனித சமுதாயத்தின் ‘அஸ்திபாரங்களைப்’ பற்றியும் பைபிள் பேசுகிறது. நீதி, சட்டம், ஒழுங்கு ஆகியவையே இந்த அஸ்திபாரங்கள். அநீதி, ஊழல், வன்முறை ஆகியவற்றால் இவை ‘தகர்க்கப்படும்போது,’ அதாவது பலவீனமாகும்போது, சமுதாய ஒழுங்கு சீர்குலைந்து ஆட்டங்காண்கிறது.—சங்கீதம் 11:2-6, பொது மொழிபெயர்ப்பு; நீதிமொழிகள் 29:4.
இதே நியமம் தனிப்பட்ட நபர்களுக்கும் பொருந்துகிறது. புகழ்பெற்ற மலைப் பிரசங்கத்தின் முடிவில் இயேசு கிறிஸ்து இவ்வாறு சொன்னார்: “நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவைகளின்படி செய்கிறவன் எவனோ, அவனைக் கன்மலையின் மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள மனுஷனுக்கு ஒப்பிடுவேன். பெருமழை சொரிந்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின் மேல் மோதியும், அது விழவில்லை; ஏனென்றால், அது கன்மலையின் மேல் அஸ்திபாரம் போடப்பட்டிருந்தது. நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவைகளின்படி செய்யாதிருக்கிறவன் எவனோ, அவன் தன் வீட்டை மணலின் மேல் கட்டின புத்தியில்லாத மனுஷனுக்கு ஒப்பிடப்படுவான். பெருமழை சொரிந்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின் மேல் மோதினபோது அது விழுந்தது; விழுந்து முழுவதும் அழிந்தது.”—மத்தேயு 7:24-27.
அப்படியானால் எத்தகைய அஸ்திபாரத்தின்மீது உங்களுடைய வாழ்க்கையைக் கட்டுகிறீர்கள்? வாழ்க்கை என்ற கட்டமைப்பையே ஆட்டங்காணச் செய்யும் மனித தத்துவம் எனும் உறுதியற்ற மணலின் மீது கட்டுகிறீர்களா? அல்லது வாழ்க்கையில் புயல் போல் தாக்கும் பிரச்சினைகளிலிருந்து தப்பிக்க உதவுகிற இயேசு கிறிஸ்துவின் போதனைகளுக்குக் கீழ்ப்படிவதன் மூலம் உறுதியான கற்பாறையின் மீது கட்டுகிறீர்களா?