“விசுவாசத்திற்காக துன்புறுத்தப்பட்டார்”
மனித உரிமை மீறல்களுக்குப் பலியானவர்கள் நினைவாக வட இத்தாலியில் செர்னாபியோ டவுனிலுள்ள ஒரு பூங்காவில் நினைவாலயம் ஒன்று ஸ்தாபிக்கப்பட்டது. அங்கு நார்ஸிஸோ ரிட் என்பவருக்கு நினைவுச்சின்னம் ஒன்று அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இவர் ஜெர்மனியில் வசித்துவந்த இத்தாலிய பெற்றோர்களுக்குப் பிறந்தவர், இவர் 1930-களில் யெகோவாவின் சாட்சிகளில் ஒருவராக ஆனார். உண்மை கடவுளாகிய யெகோவாவைக் காட்டிலும் மேலான ஸ்தானத்தை ஹிட்லருக்குக் கொடுக்க மறுத்ததால் அவருடைய ஆட்சியில் யெகோவாவின் சாட்சிகள் துன்புறுத்தப்பட்டார்கள்.
காவற்கோபுரம் பிரதிகளை சித்திரவதை முகாம்களுக்குள் கொண்டுவருவதில் ரிட் ஈடுபட்டிருந்ததை கெஸ்டப்போ கண்டுபிடித்தபோது, அவர் செர்னாபியோவுக்குத் தப்பிச்சென்றார். அங்கே காவற்கோபுரம் பத்திரிகையை இத்தாலிய மொழியில் மொழிபெயர்த்து, அருகிலிருந்த சக விசுவாசிகளுக்கு வினியோகிக்கும்படி அவர் கேட்டுக்கொள்ளப்பட்டார். அந்த வேலையை அவர் சுறுசுறுப்பாக செய்துவந்தார், ஆனால் அவருடைய நடவடிக்கைகள் கண்டுபிடிக்கப்பட்டன. எஸ்எஸ் அதிகாரி ஒருவரும் அவருடைய ஆட்களும் ரிட்டின் வீட்டில் திடீரென நுழைந்து சோதனை செய்தனர். பின்பு அவரைக் கைது செய்து, “குற்றத்திற்கு” அத்தாட்சியாக இரண்டு பைபிள்களையும் சில கடிதங்களையும் பறிமுதல் செய்தனர். ரிட் ஜெர்மனிக்கு நாடுகடத்தப்பட்டார். டாக்காவ் சித்திரவதை முகாமில் சிறையிடப்பட்டு, இரண்டாம் உலகப் போர் முடிவடைவதற்கு சற்று முன்பு கொலை செய்யப்பட்டார். “விசுவாசத்திற்காக துன்புறுத்தப்பட்டார்” என செர்னாபியோ நினைவுச்சின்ன கற்பலகையில் பொறிக்கப்பட்டுள்ளது.
நாசி துன்புறுத்தலுக்குப் பலியான நார்ஸிஸோ ரிட் மற்றும் நூற்றுக்கணக்கான மற்ற யெகோவாவின் சாட்சிகளுடைய விசுவாசம், யெகோவாவுக்கு உண்மையுடன் நிலைத்திருக்கும் இன்றுள்ள கிறிஸ்தவர்களுக்கு உற்சாகமூட்டுவதாக இருக்கிறது. அவர்களுடைய வணக்கத்தைப் பெற இந்த பிரபஞ்சம் முழுவதிலும் யெகோவா ஒருவரே தகுதியானவர். (வெளிப்படுத்துதல் 4:11) இயேசு இவ்வாறு கூறினார்: “நீதியினிமித்தம் துன்பப்படுகிறவர்கள் சந்தோஷமுள்ளவர்கள்.” அவர்களுடைய கிரியைகளை கடவுள் நினைவுகூர்ந்து அவர்களுடைய தைரியமான நடத்தைக்குப் பலனளிப்பார்.—மத்தேயு 5:10, NW; எபிரெயர் 6:10.