கடவுள் எதற்காக பூமியைப் படைத்தார்?
பசுமை தவழும் பூங்காவில் உலா வருவதற்கோ நறுமணம் கமழும் பூந்தோட்டத்தில் வலம் வருவதற்கோ நீங்கள் விரும்புவதேன்? எழில் கொஞ்சும் ஏரியையோ விண்ணைத்தொட்டு மேகங்களை முத்தமிடும் மலைகளையோ கண்டு ஆனந்தப் பரவசம் அடைவதேன்? மரக்கிளைகளில் அமர்ந்து இன்னிசை பாடும் பறவைகளின் இனிய கீதங்களைக் கேட்டு மெய்மறந்து நிற்பதேன்? சமவெளியில் நளினமாகத் துள்ளிக்குதிக்கும் மான்களையோ புல்வெளியில் கூட்டமாய் மேய்ந்துதிரியும் ஆடுகளையோ பார்த்து மகிழ்வதேன்?
இந்த எல்லாக் கேள்விகளுக்கும் பதில் இதுதான்: பூங்காவன பரதீஸில் வாழவே நாம் படைக்கப்பட்டிருக்கிறோம்! அங்கேதான் நமது முதல் பெற்றோரான ஆதாம் ஏவாளின் வாழ்க்கை ஆரம்பமானது. பரதீஸில் வாழ வேண்டுமென்ற ஆசையை அவர்களிடமிருந்தே நாம் பெற்றிருக்கிறோம், அவர்களுக்குள் அந்த ஆசையை வைத்தவர் படைப்பாளரான யெகோவா தேவன். மனிதர்களாகிய நாம் பரதீஸில் மகிழ்ச்சியாய் இருப்போம் என்பதை யெகோவா அறிந்திருந்தார், ஏனென்றால் இத்தகைய அற்புதமான பூவுலகில் இன்பமாய் வாழ்ந்து மகிழ்வதற்குத் தேவையான குணங்களோடுதான் அவர் நம்மைப் படைத்திருக்கிறார்.
சரி, யெகோவா எதற்காக இந்தப் பூமியைப் படைத்தார்? மனிதர்களுடைய ‘குடியிருப்புக்காக அதைப் படைத்தார்.’ (ஏசாயா 45:18) ‘பூமியை உண்டாக்கியவர்’ ஆதாம் ஏவாளுக்கு ஓர் அழகிய பரதீஸ் வீட்டை, ஏதேன் என்ற தோட்டத்தைக் கொடுத்தார். (எரேமியா 10:12; ஆதியாகமம் 2:7-9, 15, 21, 22) அங்கே பாய்ந்தோடிய ஆறுகளையும் பூத்துக்குலுங்கிய மலர்களையும் உயர்ந்தோங்கிய மரங்களையும் அவர்கள் எவ்வளவாய் அனுபவித்து மகிழ்ந்திருக்க வேண்டும்! ஆகாயத்தில் சிறகடித்துப் பறந்த அழகிய பறவைகளையும் தோட்டத்தில் சுற்றித்திரிந்த பல்வகை விலங்கினங்களையும் அவர்கள் பார்த்திருப்பார்கள்—அவற்றால் மனிதருக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை. மீன்களும் வேறுசில ஜீவராசிகளும் தெளிந்த நீர்ப்பரப்புகளில் நீந்தி விளையாடின. இவை எல்லாவற்றிற்கும் மேலாக, ஆதாமும் ஏவாளும் சேர்ந்தே வாழ்ந்தார்கள். அவர்கள் பிள்ளைச் செல்வங்களைப் பெற்று, அவர்களோடு சேர்ந்து தங்களுடைய பரதீஸ் வீட்டை ஆனந்தமாய் விஸ்தரித்திருப்பார்கள்.
இந்தப் பூமி, தற்சமயம் ஒரு பரதீஸாக இல்லையென்றாலும், நல்லதொரு குடும்பத்தின் ஓர் அருமையான வீட்டைப்போலவே இருக்கிறது. கடவுள் தந்திருக்கும் இந்தப் பூகோள வீட்டில் நமக்குத் தேவையான ஒளி, எரிபொருள், தண்ணீர், உணவு ஆகியவையெல்லாம் இருக்கின்றன. பகலில் வெப்பமான சூரிய ஒளியையும் இரவில் குளிர்ந்த நிலவொளியையும் நாம் எவ்வளவாய் விரும்புகிறோம்! (ஆதியாகமம் 1:14-18) நமக்குத் தேவையான நிலக்கரி, எண்ணெய் போன்ற எரிபொருள்கள் இந்தப் பூமியில் இருக்கின்றன. நீர் சுழற்சியின் காரணமாகவும் ஆறுகள், ஏரிகள் மற்றும் கடல்களின் காரணமாகவும் நமக்குத் தண்ணீர் கிடைக்கிறது. பச்சைக் கம்பளம் விரித்தாற்போல் இந்தப் பூமி வீட்டின் தரை புல்வெளிகளால் மூடப்பட்டிருக்கிறது.
வீட்டில் உணவை சேகரித்து வைப்பதைப் போல், பூமியின் உணவறையில் உணவுப் பொருள்கள் ஏராளம் உள்ளன. வயலில் பயிர்களும் பழத்தோட்டங்களில் பழங்களும் கிடைக்கின்றன; இவ்வாறாக, கடவுள் ‘செழிப்புள்ள காலங்களை நமக்குத் தந்து, ஆகாரத்தினாலும் சந்தோஷத்தினாலும் நம்முடைய இருதயங்களை நிரப்பியிருக்கிறார்.’ (அப்போஸ்தலர் 14:16, 17) இந்தப் பூமி இப்போதே ஓர் அழகிய வீட்டைப் போல் இருக்க, ‘நித்தியானந்த தேவனாகிய’ யெகோவா இதை ஒரு பரதீஸாக மாற்றும்போது எப்படியிருக்கும் என்பதை சற்று கற்பனை செய்து பாருங்கள்!—1 தீமோத்தேயு 1:11.