வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
“ஆயிரம் பேருக்குள்ளே ஒரு புருஷனைக் கண்டேன்” ஆனால் “இவர்களெல்லாருக்குள்ளும் ஒரு ஸ்திரீயை நான் காணவில்லை” என்று என்ன அர்த்தத்தில் பிரசங்கி சொன்னார்?—பிரசங்கி 7:28.
தேவாவியால் ஏவப்பட்ட இந்த வார்த்தைகளைப் புரிந்துகொள்வதற்கு, கடவுள் பெண்களை எப்படிக் கருதுகிறார் என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். விதவையாயிருந்த நகோமியின் மருமகளான ரூத்தைப்பற்றி “குணசாலி” என்று பைபிள் சொல்கிறது. (ரூத் 3:11) ஒரு நல்ல மனைவி “பவளத்தைவிட பெருமதிப்புள்ளவள்” என்று நீதிமொழிகள் 31:10 (பொது மொழிபெயர்ப்பு) கூறுகிறது. அப்படியென்றால், பூர்வ இஸ்ரவேலின் ராஜாவான சாலொமோன் என்ன அர்த்தத்தில் இந்த வார்த்தைகளைச் சொன்னார்: “ஆயிரம் பேருக்குள்ளே ஒரு [நல்ல] ஆடவனைக் கண்டேன்; எல்லாப் பெண்களுக்குள்ளேயும் ஒரு [நல்ல] பெண்ணை நான் காணவில்லை.”—சங்கத் திருவுரை (பிரசங்கி) 7:29, தமிழ் கத்தோலிக்க பைபிள்.
சாலொமோனின் நாட்களில் இருந்த பெண்களின் மத்தியில் மோசமான ஒழுக்கத் தராதரங்கள் மேலோங்கி இருந்ததை இந்த வசனத்தின் சூழமைவு காண்பிக்கிறது. (பிரசங்கி 7:26) பாகால் வணக்கத்தில் ஈடுபட்டிருந்த அந்நிய பெண்களின் செல்வாக்கு இதற்கு முக்கிய காரணமாக இருந்திருக்கலாம். சாலொமோன் ராஜாகூட தன்னுடைய புறஜாதி மனைவிகளின் செல்வாக்கிற்கு அடிபணிந்துவிட்டார். “அவனுக்குப் பிரபுக்கள் குலமான எழுநூறு மனையாட்டிகளும், முந்நூறு மறுமனையாட்டிகளும் இருந்தார்கள்; அவனுடைய ஸ்திரீகள் அவன் இருதயத்தை” பொய் கடவுட்களை வணங்குவதற்கு “வழுவிப்போகப் பண்ணினார்கள்” என்று பைபிள் சொல்கிறது. (1 இராஜாக்கள் 11:1-4) ஆண்களின் ஒழுக்கத் தராதரங்களும் மோசமாகவே இருந்தன. ஆயிரத்தில் ஒரு நீதியான ஆணைக் காண்பதுகூட அரிதாக இருந்தது, கிட்டத்தட்ட இல்லையென்றே சொல்லலாம். “தேவன் மனுஷனைச் செம்மையானவனாக உண்டாக்கினார்; அவர்களோ அநேக உபாய தந்திரங்களைத் தேடிக்கொண்டார்கள்; இதை மாத்திரம் கண்டேன்” என்ற முடிவுக்குச் சாலொமோன் வருகிறார். (பிரசங்கி 7:29) இந்த வசனத்தில் பெண்ணுடன் ஆணை ஒப்பிட்டு சாலொமோன் பேசவில்லை. ஆனால், மனிதவர்க்கத்தைப் பற்றி பொதுவாகப் பேசினார். எனவே, பிரசங்கி 7:28-ல் காணப்படும் வார்த்தைகள், சாலொமோனின் நாட்களிலிருந்த மக்களின் பொதுவான ஒழுக்கத் தராதரங்களைப் பற்றித்தான் குறிப்பிடுகின்றன என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
என்றாலும், இந்த வசனத்திற்குத் தீர்க்கதரிசன அர்த்தமும் இருக்கலாம். எப்படியெனில், ஒரு பெண் யெகோவாவுக்கு முழுமையான கீழ்ப்படிதலைக் காட்டியதாக சரித்திரமில்லை. ஆனால் ஓர் ஆண் காட்டியிருக்கிறார், அவர்தான் இயேசு கிறிஸ்து.—ரோமர் 5:15-17.
[பக்கம் 31-ன் படம்]
‘ஆயிரம் பேருக்குள்ளே ஒரு புருஷன்’