சுருக்கமானது, ஆனால் திருத்தமானதா?
செப்டம்பர் 2005-ல், 100 நிமிட பைபிள் என்ற பைபிள் வெளியீட்டை சர்ச் ஆஃப் இங்லண்ட் ரத்தின கம்பளம் விரித்து வரவேற்றது. 100 நிமிடத்தில் படித்து முடித்துவிடும் வகையில் இந்த பைபிள் சுருக்கமாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் எபிரெய வேதாகமம் முழுவதும் 17 பகுதிகளாகவும் கிரேக்க வேதாகமம் 33 பகுதிகளாகவும் சுருக்கப்பட்டிருக்கின்றன; இந்த பகுதிகள் ஒவ்வொன்றும் ஒரு பக்க நீளத்திற்கு இருக்கின்றன. இப்படியாக, பைபிளில் உள்ள “சுவாரஸ்யமற்ற தகவல்கள்” எல்லாம் நீக்கப்பட்டிருப்பதாக இதை ஆய்வு செய்த ஒருவர் சொன்னார். இந்த பைபிளைச் சுலபமாக, சீக்கிரமாகப் படித்துவிடலாம், ஆனால் அது திருத்தமாக இருக்கிறதா?
கடவுளுடைய பெயரான யெகோவா என்பதே இதிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறது. (சங்கீதம் 83:17) பைபிளைக் கருத்தூன்றிப் படிப்போர் அதிலுள்ள மற்ற பல தவறுகளையும் கவனிக்க முடியும். உதாரணமாக, கடவுள் “ஆறு நாட்களில் வானத்தையும் பூமியையும் படைத்தார்” என்று இந்த பைபிளின் முதல் பகுதி குறிப்பிடுகிறது. ஆனால், முழுமையான பைபிளில் ஆதியாகமம் 1:1, “ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்” என்றுதான் குறிப்பிடுகிறது. அதன் பிறகு, பூமி உட்பட மற்ற எல்லாவற்றையும் ஆறு ‘நாட்களில்’ அல்லது காலப்பகுதிகளில் படைத்தார் என்றும் அது சொல்கிறது. பின்னர், ‘தேவனாகிய கர்த்தர் பூமியையும் வானத்தையும் உண்டாக்கின நாளிலே’ என்று ஆதியாகமம் 2:4 சொன்னபோது, படைப்புக்கு எடுக்கப்பட்ட முழு காலப்பகுதியையும் குறிப்பதற்கு நாள் என்ற வார்த்தையைப் பயன்படுத்தியிருக்கிறது.
100 நிமிட பைபிள், “[கடவுளுடைய] ஊழியர்களில் ஒருவனான சாத்தான்” உத்தமரான யோபுவைத் தாக்கினான் என்றும், “மனிதர்களைப் பழித்துப் பேசுவதே அவனுக்குக் கொடுக்கப்பட்ட வேலை” என்றும் சொல்கிறது. இது பெரிய தவறு, அல்லவா? “சாத்தான்” என்றால் “எதிர்ப்பவன்” என்று அர்த்தம். அவன் கடவுளுடைய ஊழியன் அல்ல; மாறாக, அவருடைய பிரதான எதிரி. மனிதர்களைப் பழிப்பதை அவனாகவே தேர்ந்தெடுத்துக்கொண்டான்.—வெளிப்படுத்துதல் 12:7-10.
100 நிமிட பைபிள் கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தைத் திருத்தமாகச் சுருக்கியிருக்கிறதா? செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் பற்றிய உவமையில், “அற்பமாக கருதப்படுகிற யாருக்கு” உதவினாலும், இயேசு அவர்களுக்குத் தயவுகாட்டுவார் என்று இந்த பைபிள் சொல்கிறது. உண்மையில், தம்மைப் பின்பற்றுவோரான தம் ‘சகோதரர்களுக்கு’ உதவுகிறவர்களை தாம் ஆசீர்வதிப்பதாகத்தான் இயேசு குறிப்பிட்டார். (மத்தேயு 25:40) 100 நிமிட பைபிளில் உள்ள வெளிப்படுத்துதலின் சுருக்கம், “மகா பாபிலோனான ரோம் முழுமையாக அழிக்கப்படும்” என்று சொல்கிறது. ரோம்தான் “மகா பாபிலோன்” என்ற முடிவுக்கு வர முழுமையான பைபிளில் எந்த அத்தாட்சியும் காணப்படுவதில்லை என்பதை பைபிளைக் கருத்தூன்றிப் படிப்போர் அறிந்திருக்கிறார்கள்.—வெளிப்படுத்துதல் 17:15–18:24.
நம்முடைய படைப்பாளரைப்பற்றி தெரிந்துகொண்டு, அவருடைய நோக்கத்தைப் புரிந்துகொள்ள விரும்புவோர் முழுமையான பைபிளைப் படிப்பதே சிறந்தது. அதைப் படிக்க 100 நிமிடத்திற்கு மேலாக ஆகும் என்பது உண்மைதான். ஆனால், அது அளிக்கும் பலன்கள் மதிப்புமிக்கவை. (யோவான் 17:3) முயற்சி எடுத்து படியுங்கள், ஆசீர்வாதங்களை அறுவடை செய்யுங்கள்.—2 தீமோத்தேயு 3:16, 17.