வானிலை கணிப்பைவிட அதிமுக்கியமானது
அநேகமாக எல்லா நாடுகளிலுமே வானிலைபற்றிய பழமொழிகள் உண்டு. மாலைநேர செவ்வானம் மாலுமிகளுக்குக் கொண்டாட்டம்; காலைநேர செவ்வானம் மாலுமிகளுக்குத் திண்டாட்டம் போன்ற பழமொழிகள் உண்டு. இந்தப் பழமொழி சொல்கிறபடி வானிலையில் மாற்றங்கள் ஏற்படுவதற்கு அறிவியல்பூர்வ காரணங்கள் இருப்பதாக இன்றைய வானிலை ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்.
இயேசுவின் காலத்து மக்களும்கூட, வானத்தைக் கணிப்பதிலும் அதன் தோற்றத்தை விளக்குவதிலும் அனுபவமுள்ளவர்களாக இருந்தார்கள். யூதர்கள் சிலரிடம் இயேசு இவ்வாறு கூறினார்: “மாலை வேளையாகும்போது வானம் சிவந்திருந்தால் ‘வானிலை நன்றாக இருக்கிறது’ என நீங்கள் சொல்வீர்கள். காலை வேளையில், வானம் சிவந்து மந்தாரமாயிருந்தால், ‘இன்று காற்றுடன் கூடிய மழை இருக்கும்’ என்பீர்கள். வானத்தின் தோற்றத்தைப் பகுத்துணர நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்.” அதைத் தொடர்ந்து அவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் ஒரு குறிப்பை இயேசு சொன்னார்; அதாவது, “காலத்தின் அடையாளங்களை உங்களால் விளக்க முடியாது” (NW) என்று சொன்னார்.—மத்தேயு 16:2, 3, பொது மொழிபெயர்ப்பு.
இங்கு சொல்லப்பட்டுள்ள ‘காலத்தின் அடையாளங்கள்’ யாவை? இயேசுவே கடவுளால் அனுப்பப்பட்ட உண்மையான மேசியா என்பதை தெளிவாக எடுத்துக் காட்டிய அடையாளங்களே அவை. செவ்வானத்தைப் போல அவருடைய செயல்களும் அவரைப் பளிச்சென அடையாளங்காட்டின. இருந்தாலும், மேசியா வந்துவிட்டதற்கான அடையாளங்களை பெரும்பாலான யூதர்கள் அலட்சியம் செய்தார்கள். அவை வானிலையைப் பார்க்கிலும் முக்கியமானதாக இருந்தபோதிலும் அப்படிச் செய்தார்கள்.
இன்றும்கூட, நாம் புரிந்துகொள்ள வேண்டிய ஓர் அடையாளம் இருக்கிறது; வானத்தின் நிறத்தைவிட அதிமுக்கியமான ஓர் அடையாளம் அது. சிறந்ததோர் உலகம் தோன்ற இந்தப் பொல்லாத உலகம் முடிவுறும் என்று இயேசு முன்னறிவித்தார். இந்த மாற்றம் எப்போது நடைபெறும் என்பதைக் காட்ட அநேக சம்பவங்களைக் கொண்ட ஒரு கூட்டு அடையாளத்தை அவர் குறிப்பிட்டார். உலகப் போர்களும் பஞ்சங்களும் அவற்றில் அடங்கும். அச்சம்பவங்கள் நிகழ்வதைப் பார்க்கும்போது கடவுள் தலையிடுவதற்கான நேரம் நெருங்கிவிட்டது என்று இயேசு சொன்னார்.—மத்தேயு 24:3-21.
அப்படியானால், “காலத்தின் [இந்த] அடையாளங்களை” நீங்கள் காண்கிறீர்களா?