எதிர்காலத்தை நினைத்து பயப்படுகிறீர்களா?
ஜனங்கள் அநேக காரணங்களின் நிமித்தம் பயப்படுகிறார்கள். உதாரணத்திற்கு, பூமியின் சுற்றுச்சூழலுக்கு என்ன நேரிடுமோவென சிலர் பயப்படுகிறார்கள். “உஷ்ணம் மிகுந்த வானிலைமுதல், புயல் காற்று, வெள்ளப் பெருக்கு, தீப்பிடித்தல், பெரிய பெரிய பனிக்கட்டிகள் உருகி ஓடுதல்வரை கோளமெங்கும் தட்பவெப்பநிலை பெருமளவு பாதிக்கப்பட்டிருப்பதாய் தெரிகிறது” என ஏப்ரல் 3, 2006 தேதியிட்ட டைம் பத்திரிகை குறிப்பிடுகிறது.
மே, 2002-ல், ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்ட அமைப்பு “கோளத்தில் சுற்றுச்சூழல் பற்றிய கண்ணோட்டம்-3” என்ற தலைப்பில் ஓர் அறிக்கையை வெளியிட்டது. 1,000-க்கும் அதிகமான நிபுணர்களின் ஒத்துழைப்புடன் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டது. இதுபற்றி ஒரு செய்தித் தொகுப்பு இவ்வாறு குறிப்பிட்டது: “காடுகளையும் கடல்களையும் ஆறுகளையும் மலைகளையும் வனவாழ் உயிரிகளையும் உயிர் வாழ்வை ஆதரிக்கும் பிற வாழ்க்கைச் சூழல்களையும் இன்றைய தலைமுறையினரும் இனிவரும் தலைமுறையினரும் நம்பியிருக்கிறார்கள்; இவற்றையெல்லாம் பெருமளவு பாதிக்கும் விதத்தில் தற்போது தீர்மானங்கள் எடுக்கப்படுவதால் நம் கிரகம் மிகவும் இக்கட்டான நிலையில் இருக்கிறது.”
ஆக, பூமியின் தற்போதைய சுற்றுச்சூழல், மக்கள் பயப்படுவதற்கான ஒரு காரணம் மட்டுமே. இன்று உலகெங்குமுள்ள மக்கள் தீவிரவாதத் தாக்குதல்கள்பற்றிய பயத்தில் வாழ்வது மற்றொரு காரணமாகும். கனடாவின் தலைசிறந்த துப்பறியும் இலாகாவின் துணை இயக்குநர் இவ்வாறு சொன்னார்: “எப்போது, எங்கே, என்ன நடக்குமோவென நாங்கள் பயப்படுவதால் இரவில் கண்ணயர முடிவதில்லை.” சொல்லப்போனால், மாலை செய்திகளை டிவியில் பார்த்தாலே போதும் பயம் கவ்விக்கொள்கிறது!
பாடுபட்டு வேலை செய்கிற பெரியவர்கள் பலர் தங்கள் வேலை பறிபோய்விடுமோ என்று பயப்படுகிறார்கள். தற்காலிக வேலை நீக்கம், தொழிற்சாலைகள் மூடப்படுதல், வேலை செய்யுமிடத்தில் போட்டா போட்டி, தொழிலாளிகளைச் சக்கையாய் பிழிந்தெடுத்தல் ஆகியவை வேலையைப் பொறுத்தவரை பாதுகாப்பற்ற சூழலை உருவாக்கலாம். பருவ வயதினரோ, நண்பர்கள் தங்களை ஒதுக்கிவிடுவார்களோ என பயப்படுகிறார்கள். சிறுவர் சிறுமியரோ, பெற்றோருக்குத் தங்கள்மீது உண்மையிலேயே அன்பில்லை என கவலைப்படலாம். ஆனால், உலகில் தங்களைச் சுற்றி நடக்கிறவற்றைக் குறித்து அவர்கள் எப்படி உணருகிறார்கள்? “சின்னஞ்சிறுசுகளுக்கும் விவரம் தெரியாதவர்களுக்கும் சில சமயங்களில், வீட்டுக்கு வெளியே வந்தாலே பெரிய, பயங்கரமான ஓர் இடத்தில் காலெடுத்து வைத்ததுபோல் தெரிகிறது” என ஒரு தாய் கவலையோடு சொல்கிறார். உலகின் ஒழுக்க சீர்குலைவால் தங்கள் உயிருக்குயிரானவர்கள், முக்கியமாகத் தங்கள் பிள்ளைகள் பாதிக்கப்படுவார்களோ என நினைத்து அநேக பெற்றோர் பயப்படுகிறார்கள்.
மாடிப்படியில் தடுக்கி விழுந்துவிடுவோமோ, தெருவில் யாராவது தாக்கிவிடுவார்களோ என பெரியவர்கள் அடிக்கடி பயப்படுகிறார்கள். ஆம், அவர்கள் ‘மேட்டைக் கண்டு அச்சங்கொண்டு தெருவில் நடப்பதை நினைத்துத் திகில் கொள்கிறார்கள்.’ (பிரசங்கி [சபை உரையாளர்] 12:5, பொது மொழிபெயர்ப்பு) தீராத வியாதியைப்பற்றிய பயம் இருக்கிறது. உயிரைப் பறிக்கும் ஃப்ளூ வைரஸ்கள், புற்றுநோய்கள், தொற்று நோய்கள் ஆகியவற்றைப்பற்றிய அறிக்கைகளைக் கேட்கும்போது, படுக்கையில் தள்ளிவிடுகிற அல்லது உயிர்குடிக்கிற புதிதான, நூதனமான வியாதி நமக்கும் நம் குடும்பத்தாருக்கும் வந்துவிடுமோவென நாம் பயப்படலாம். ஆரோக்கியமான, திடகாத்திரமான ஆட்களே வியாதிப்பட்டு, எலும்பும் தோலுமாய் ஆவதைப் பார்க்கும்போது, நாளை நமக்கு அல்லது நம் அன்பானவர்களுக்கு அப்படியொரு கதி வந்துவிடுமோ என நாம் கலக்கம் அடைவது சகஜம்தான். வியாதிப்பட்ட நபரின் கண்கள் நம்பிக்கை ஒளி இழந்திருப்பதைக் காண்பது எவ்வளவாய் கவலை அளிக்கிறது!
அநேக காரணங்கள் நிமித்தம் மக்கள் பயப்படுகிற வேளையில், ஒளிமயமான எதிர்காலம் வருமென நம்புவதற்கு நியாயமான காரணம் ஏதேனும் நமக்கு இருக்கிறதா? எப்போதும் நம்பிக்கையான மனநிலையோடு இருக்க ஏதேனும் வழி உண்டா? இந்தக் கேள்விகளுக்கு அடுத்த கட்டுரை பதில் அளிக்கும்.
[பக்கம் 3-ன் படத்திற்கான நன்றி]
© Jeroen Oerlemans/Panos Pictures