“கடவுளுடைய பெயரை அறிந்திருக்கிறீர்களா?”
இந்தக் கேள்வி, ஜனவரி 22, 2004 தேதியிட்ட எமது துணைப் பத்திரிகையான விழித்தெழு! (ஆங்கிலம்) இதழின் அட்டையில் காணப்பட்டது. இது, மத்திய ஆசியாவின் தென்மேற்குப் பகுதியில் வசித்த ஒரு பெண்மணியின் ஆர்வத்தைத் தூண்டியது. இப்பத்திரிகையின் பிரசுரிப்பாளர்களுக்கு அவர் இவ்வாறு எழுதினார்: “இந்தக் கேள்வி என் கண்ணில் பட்டதுமே, உங்கள் பத்திரிகையைத் தவறாமல் வாசிக்க வேண்டுமென்ற ஆர்வம் எனக்கு ஏற்பட்டது. நன்னெறிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க அது எனக்கு உதவியது. இப்போது என் வாழ்க்கையில் நம்பிக்கை மலர்ந்திருக்கிறது, நான் சந்தோஷமாகவும் இருக்கிறேன். நம் கடவுளைப் பற்றி எல்லாருக்கும் சொல்லி வருகிறேன்; அதோடு, அவரைப் பற்றி நன்கு அறிந்துகொள்வதால் மன அமைதியைப் பெறலாமென்றும் சொல்லி வருகிறேன்.”
பல்வேறு இடங்களிலுள்ள மக்கள், சொல்லப்போனால், “பூமியின் கடைசிபரியந்தமும்” வசிக்கிற மக்கள், கடவுளுடைய பெயர் யெகோவா என்பதை அறிந்துகொண்டே வருகிறார்கள். (அப்போஸ்தலர் 1:8) உதாரணமாக, துர்க்மன் மொழியில் கடவுளின் பெயர் யெஹோவா; இந்தப் பெயர் பரிசுத்த வேதாகமத்தின் துர்க்மன் மொழிபெயர்ப்பு பைபிளில் நிறைய இடங்களில் காணப்படுகிறது. அந்த பைபிளில் சங்கீதம் 8:1 பின்வருமாறு சொல்கிறது: “எங்கள் ஆண்டவராகிய யெஹோவாவே, உமது பெயர் பூமியெங்கும் எவ்வளவு மாட்சிமை பொருந்தியதாயிருக்கிறது!”
யெகோவா தேவனைப்பற்றி கூடுதலான விஷயங்களைத் தெரிந்துகொள்ள, கடவுளுடைய பெயர் என்றென்றுமாக நிலைத்திருக்கும் என்ற 32 பக்க சிற்றேட்டை அனுப்பிவைக்கும்படி அந்தப் பெண்மணி எழுதினார். நீங்களுங்கூட இந்தச் சிற்றேட்டை யெகோவாவின் சாட்சிகளில் ஒருவரிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம்.