வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
பஸ்கா பண்டிகையின்போது “புளிப்பிடப்பட்ட யாதொன்றையும்” சாப்பிட வேண்டாமென யூதர்களுக்குக் கட்டளையிடப்பட்டிருந்தது. அப்படியிருக்கையில், இயேசு தம்முடைய மரண நினைவு ஆசரிப்பை ஆரம்பித்து வைத்தபோது ஏன் புளிப்புள்ள திராட்சை ரசத்தைப் பயன்படுத்தினார்?—யாத்திராகமம் 12:20; லூக்கா 22:7, 8, 14-20.
இஸ்ரவேல் புத்திரர்கள் எகிப்திலிருந்து புறப்பட்டதை அடையாளப்படுத்துவதற்காக பஸ்கா ஆசரிப்பு பொ.ச.மு. 1513-ல் ஆரம்பிக்கப்பட்டது. அதை ஆசரிக்க வேண்டிய விதத்தைக் குறித்து யெகோவா இவ்வாறு சொன்னார்: “புளிப்பிடப்பட்ட யாதொன்றையும் நீங்கள் புசிக்கவேண்டாம்; உங்கள் வாசஸ்தலங்களிலெல்லாம் புளிப்பில்லா அப்பம் புசிக்கக்கடவீர்கள்.” (யாத்திராகமம் 12:11, 20) ஆகவே, கடவுள் போட்ட அந்தத் தடை, பஸ்கா சமயத்தில் புசிக்க வேண்டிய அப்பத்திற்கு மட்டுமே பொருந்தியது. அதில் திராட்சை ரசத்தைப்பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.
இஸ்ரவேலரிடம் புளிப்பான அப்பத்தைச் சாப்பிட வேண்டாமென சொல்லப்பட்டதற்கு முக்கிய காரணம், அவர்கள் எகிப்திலிருந்து உடனடியாகப் புறப்பட வேண்டியிருந்தது. “பிசைந்தமா புளிக்குமுன் ஜனங்கள் அதைப் பாத்திரத்துடனே தங்கள் வஸ்திரங்களில் கட்டி, தங்கள் தோள்மேல் எடுத்துக்கொண்டு போனார்கள்” என்று யாத்திராகமம் 12:34 விளக்குகிறது. தொடர்ந்துவரும் பஸ்கா ஆசரிப்புகளிலும் புளிப்புச் சேர்க்காமல் இருப்பது எதிர்கால சந்ததிக்கு இந்த முக்கிய உண்மையை நினைப்பூட்டுவதாக இருக்கும்.
பிற்காலத்தில், புளிப்பைப் பெரும்பாலும் பாவத்திற்கு அல்லது கெடுக்கும் தன்மைக்கு அடையாளமாக மக்கள் கருத ஆரம்பித்தார்கள். உதாரணமாக, கிறிஸ்தவ சபையிலிருந்த ஒழுக்கக்கேடான ஒரு நபரைக் குறித்து அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு கேட்டார்: “கொஞ்சம் புளித்தமா பிசைந்தமா முழுவதையும் புளிப்பாக்குமென்று அறியீர்களா?” பிறகு அவர், “ஆகையால், நீங்கள் புளிப்பில்லாதவர்களாயிருக்கிறபடியே, புதிதாய்ப் பிசைந்த மாவாயிருக்கும்படிக்கு, பழைய புளித்த மாவைப் புறம்பே கழித்துப்போடுங்கள். ஏனெனில் நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து நமக்காக பலியிடப்பட்டிருக்கிறாரே. ஆதலால் பழைய புளித்தமாவோடே அல்ல, துர்க்குணம் பொல்லாப்பு என்னும் புளித்தமாவோடும் அல்ல, துப்புரவு உண்மை என்னும் புளிப்பில்லாத அப்பத்தோடே பண்டிகையை ஆசரிக்கக்கடவோம்” என்று கூறினார். (1 கொரிந்தியர் 5:6-8) எனவே, இயேசுவின் பாவமில்லாத மனித உடலுக்கு அடையாளமாக புளிப்பில்லாத அப்பத்தை மட்டுமே பயன்படுத்த முடியும்.—எபிரெயர் 7:26.
பஸ்கா ஆசரிப்பின்போது திராட்சை ரசத்தைப் பயன்படுத்தும் பழக்கத்தை யூதர்கள் பிற்காலத்தில் ஆரம்பித்து வைத்தனர். பெரும்பாலும், பாபிலோனிய சிறையிருப்பிலிருந்து திரும்பி வந்தபிறகு அதை அவர்கள் ஆரம்பித்து வைத்திருக்கலாம். இவர்கள் இப்படி புதிதாக ஆரம்பித்த இந்தப் பழக்கத்திற்கு எவ்வித ஆட்சேபணையும் இருந்ததாக பைபிளில் சொல்லப்படவில்லை; எனவேதான், இயேசு பஸ்கா உணவில் திராட்சை ரசத்தைச் சரியாகவே பயன்படுத்த முடிந்தது. பார்க்கப்போனால், பூர்வ காலங்களில் திராட்சை ரசம் அதாவது ஒயின் இயற்கையாகவே புளிப்பாக மாறியதுபோல் அப்பம் புளிப்பாகவில்லை. ஏனெனில், பிசைந்த மாவை புளிப்பாக்க ஈஸ்ட் அல்லது சிறிதளவு புளித்த மாவு சேர்க்க வேண்டியிருந்தது. ஆனால், திராட்சைப் பழங்களிலிருந்து செய்யப்பட்ட திராட்சை ரசத்திற்கு, அதாவது ஒயினுக்கு அதுபோன்றவை சேர்க்கப்பட வேண்டிய தேவையில்லை. காரணம், புளிக்க வைக்கும் மூலக்கூறுகள் திராட்சைப் பழங்களில் இயற்கையாகவே இருக்கின்றன. இலையுதிர் காலத்தில் திராட்சை அறுவடை செய்யப்படும் சமயத்திலிருந்து வசந்த காலத்தில் வரும் பஸ்காவரை திராட்சைப் பழச்சாறு புளிக்காமல் இருக்க வாய்ப்பில்லை. அதனால், பஸ்கா சமயத்தில் புளிப்பில்லாத திராட்சைப் பழச்சாறு கிடைத்திருக்காது.
பஸ்காவின்போது புளிப்பிடப்பட்ட எதையும் சாப்பிடக் கூடாதென்று கட்டளையிடப்பட்டது உண்மையே. ஆனால், இந்தக் கட்டளை திராட்சை ரசத்தை நினைவுநாள் அடையாளச் சின்னமாக இயேசு பயன்படுத்தியதற்கு எந்த விதத்திலும் முரண்பட்டதாக இல்லை. இனிப்போ, போதை தரும் பொருளோ, வேறு மூலிகைகளோ வாசனை பொருட்களோ சேர்க்கப்படாத எந்தச் சிவப்புத் திராட்சை ரசத்தையும், அதாவது ஒயினையும் கிறிஸ்துவின் ‘விலையேறப்பெற்ற இரத்தத்திற்கு’ அடையாளமாகப் பயன்படுத்துவது பொருத்தமானதே.—1 பேதுரு 1:19.