“அவருடைய அசாத்திய மனவுறுதியைக் கண்டு வியந்தேன்”
ஜெ ர்மன் நாட்டு நூலாசிரியரும் 1999-ல் இலக்கியத்திற்காக நோபல் பரிசு பெற்றவருமான குண்ட்டர் க்ராஸ் என்பவர் 2006-ல் தன் சுய சரிதையை வெளியிட்டார். ஜெர்மன் நாட்டுப் பாதுகாப்புப் படையில் தான் சேர்க்கப்பட்ட சமயத்தைப்பற்றி அதில் விவரித்திருந்தார். 60 வருடங்கள் கடந்த பிறகும், மறக்க முடியாதளவுக்கு தன்னிடம் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள ஒருவரைப்பற்றி அதே புத்தகத்தில் அவர் சொல்கிறார். அந்த நபர், துன்புறுத்தலின் மத்தியிலும் தன்னந்தனியாக தன் விசுவாசத்தை விட்டுக்கொடுக்காமல் உறுதியாக நின்றவர்.
ஃப்ராங்க்ஃபுர்டர் ஆல்கெமைன ஸைடுங் என்ற தினசரி செய்தித்தாளில் வெளிவந்த ஒரு பேட்டியில், ஆயுதம் தாங்க மறுத்த இந்த வித்தியாசமான நபரை க்ராஸ் நினைவுகூர்ந்தார். இந்த நபர் பிரபலமாக இருந்த எந்தக் கொள்கையையும் ஆதரிக்கவில்லை, அவர் நாசி கொள்கையினரும் இல்லை, கம்யூனிஸவாதியும் இல்லை, சமதருமவாதியும் இல்லை. அவர் யெகோவாவின் சாட்சிகளில் ஒருவராக இருந்தார்.” அந்தச் சாட்சியின் பெயர் க்ராஸுக்கு நினைவில்லை, ஆகவே, ‘அப்படியெல்லாம் நாங்கள் செய்ய மாட்டோம்’ என்ற பெயரில் அவரைக் குறிப்பிடுகிறார். யோயாக்கீம் ஆல்ஃபர்மேன் என்பவரே இந்த நபர் என்பதாக யெகோவாவின் சாட்சிகளுடைய ஆராய்ச்சியாளர்கள் அவரை அடையாளம் காண்கிறார்கள். இவர் பலமுறை அடிக்கப்பட்டார், கீழ்த்தரமாக நடத்தப்பட்டார், பின்னர் தனிச்சிறையில் அடைக்கப்பட்டார். ஆனாலும், உறுதியாக நிலைத்திருந்து ஆயுதம் தாங்க மறுத்தார்.
“அவருடைய அசாத்திய மனவுறுதியைக் கண்டு வியந்தேன்” என்று க்ராஸ் குறிப்பிட்டார். “அவரால் எப்படி இத்தனையையும் தாங்கிக்கொள்ள முடிகிறது? எப்படி அவர் சமாளிக்கிறார்? என என்னை நானே கேட்டுக்கொண்டேன்” என்றார் அவர். ஆல்ஃபர்மேன், கடவுளிடம் காத்துக்கொண்ட உத்தமத்தைக் கைவிடச் செய்வதற்காக பலநாள் துன்புறுத்தப்பட்டார். அத்தனையையும் சகித்த பிறகு, பிப்ரவரி 1944-ல் ஸ்டூட்ஹோஃப் சித்திரவதை முகாமுக்கு அனுப்பப்பட்டார். ஏப்ரல் 1945-ல் விடுதலை செய்யப்பட்ட அவர், போரிலிருந்து தப்பிப்பிழைத்ததோடு 1998-ல் மரிக்கும்வரை யெகோவாவுக்கு உண்மையுள்ள சாட்சியாக இருந்தார்.
ஜெர்மனியிலும் நாசிக்களால் ஆக்கிரமிக்கப்பட்ட வேறு நாடுகளிலும் தங்கள் விசுவாசத்திற்காகத் தண்டிக்கப்பட்ட சுமார் 13,400 சாட்சிகளில் ஆல்ஃபர்மேனும் ஒருவர். இவர்கள் அத்தனை பேரும் பைபிளின் வழிநடத்துதலைப் பின்பற்றி, அரசியல் விவகாரங்களில் நடுநிலை வகித்தனர், ஆயுதம் ஏந்த மறுத்தனர். (மத்தேயு 26:52; யோவான் 18:36) இவர்களில் சுமார் 4,200 சாட்சிகள் சித்திரவதை முகாம்களில் அடைக்கப்பட்டனர்; 1,490 பேர் உயிரிழந்தனர். இந்தச் சாட்சிகளுடைய விசுவாசத்தை ஏற்காவிட்டாலும் இவர்களுடைய உறுதியான நிலைநிற்கையைக் கண்டு இன்றும்கூட அநேகர் வியக்கிறார்கள்.
[பக்கம் 32-ன் படம்]
யோயாக்கீம் ஆல்ஃபர்மேன்