வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
இயேசு இஸ்ரவேல் தேசமெங்கும் பிரசங்கித்திருந்தார். அப்படியிருக்க, யூத ஜனங்களும் அவர்களுடைய தலைவர்களும் ‘அறியாமையால்’ அவரைக் கொலை செய்தார்களென அப்போஸ்தலன் பேதுரு ஏன் சொன்னார்?—அப். 3:17.
மேசியா கொலை செய்யப்பட்டதற்குக் காரணமாய் இருந்த சில யூதர்களிடம் அப்போஸ்தலன் பேதுரு, “உங்கள் தலைவர்களைப் போல் நீங்களும் அறியாமையால்தான் இப்படிச் செய்தீர்கள் என்று எனக்குத் தெரியும்” எனச் சொன்னார். (அப். 3:14-17) சில யூதர்கள் இயேசுவையும் அவருடைய போதனையையும் பற்றிப் புரிந்துகொள்ளாமல் இருந்திருக்கலாம். இன்னும் சிலர் கடவுளைப் பிரியப்படுத்த வேண்டும் என்ற விருப்பமில்லாததினாலும், தப்பெண்ணத்தினாலும், பொறாமையினாலும், வெறுப்பினாலும் இயேசுவை ஏற்றுக்கொள்ளாமல் இருந்தார்கள்.
யெகோவாவைப் பிரியப்படுத்த விரும்பாததால் சிலர் இயேசுவின் போதனைகளை எப்படிக் கருதினார்கள் எனப் பார்க்கலாம். இயேசு போதிக்கையில் அடிக்கடி உவமைகளைப் பயன்படுத்தினார்; இன்னும் அதிகமாகக் கற்றுக்கொள்ள விரும்பியவர்களுக்கு அவற்றை விளக்கினார். ஆனால் சிலர், அவற்றைப் புரிந்துகொள்ள கொஞ்சமும் முயற்சி எடுக்காமல் அங்கிருந்து போய்விட்டார்கள். ஒரு சமயம், இயேசு உருவக நடையில் பேசியதைக் கேட்டு அவரது சீடர்கள் சிலர் அவரைவிட்டு விலகினார்கள். (யோவா. 6:52-66) இயேசுவின் உவமைகள் அப்படிப்பட்டவர்களுடைய மனப்பான்மையைச் சோதித்தன; அதாவது, அவர்களுடைய எண்ணங்களையும் செயல்களையும் மாற்றிக்கொள்ள அவர்கள் எந்தளவுக்கு மனமுள்ளவர்களாக இருந்தார்களெனக் காட்டின; இதை அவர்கள் புரிந்துகொள்ளத் தவறிவிட்டார்கள். (ஏசா. 6:9, 10; 44:18; மத். 13:10-15) அதோடு, மேசியா தம்முடைய போதனையில் உவமைகளைப் பயன்படுத்துவார் என்ற தீர்க்கதரிசனத்தைப் பொருட்படுத்தாமல் விட்டுவிட்டார்கள்.—சங். 78:2.
சிலர் தப்பெண்ணத்தினாலும் இயேசுவின் போதனைகளை ஏற்க மறுத்தார்கள். அவர் தம்முடைய சொந்த ஊரான நாசரேத்திலிருந்த ஜெப ஆலயத்தில் கற்பித்துக்கொண்டு இருந்ததைப் பார்த்து அந்த ஊர் மக்கள் “பிரமித்துப்போனார்கள்.” இயேசுவை மேசியாவாக ஏற்றுக்கொள்வதற்குப் பதிலாக அவருடைய குடும்பப் பின்னணியைக் குறித்து இப்படியெல்லாம் கேள்வி கேட்டார்கள்: “இவனுக்கு இதெல்லாம் எங்கிருந்து வந்தது? . . . இவன் தச்சன் அல்லவா? இவன் மரியாளின் மகன் அல்லவா? யாக்கோபு, யோசே, யூதாஸ், சீமோன் என்பவர்களுடைய சகோதரன் அல்லவா? இவனுடைய சகோதரிகளும் நம்முடன் இருக்கிறார்கள் அல்லவா?” (மாற். 6:1-3) இயேசு சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்ததால் நாசரேத் ஊரார் அவருடைய போதனைகளை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை.
மதத் தலைவர்களைப் பற்றி என்ன? அவர்களில் பெரும்பாலானோர் அதேபோன்ற காரணங்களுக்காகத்தான் இயேசுவை ஏற்க மறுத்தார்கள். (யோவா. 7:47-52) அதோடு, மக்கள் எல்லாரும் இயேசுவின் பின்னால் சென்றதைக் கண்டு அவர்மீது பொறாமைகொண்டு அவரது போதனையை ஏற்க மறுத்தார்கள். (மாற். 15:10) பல முக்கிய பிரமுகர்களின் வெளிவேஷத்தையும் வஞ்சகத்தையும் இயேசு அம்பலப்படுத்தியதால் அவர்கள் அவரிடம் மோசமாக நடந்துகொண்டார்கள். (மத். 23:13-36) அவர்கள் வேண்டுமென்றே அறியாமையில் இருந்ததைக் குறித்து இயேசு இவ்வாறு சொன்னார்: “திருச்சட்ட வல்லுநர்களே, உங்களுக்கு ஐயோ! ஏனென்றால், அறிவின் சாவியை நீங்கள் எடுத்துக்கொண்டீர்கள்; நீங்களும் [அரசாங்கத்துக்கு] உள்ளே போனதில்லை, போகிறவர்களையும் போக விடுவதில்லை.”—லூக். 11:37-52.
இயேசு மூன்றரை வருடங்களாக அந்தத் தேசத்தில் நற்செய்தியைப் பிரசங்கித்தார். அந்த வேலையில் அநேகருக்கு அவர் பயிற்சியும் அளித்தார். (லூக். 9:1, 2; 10:1, 16, 17) இயேசுவும் அவருடைய சீடர்களும் அந்த வேலையை மிகத் திறமையாகச் செய்ததால் பரிசேயர்கள் முறுமுறுத்து, “பாருங்கள், . . . உலகமே அவன் பின்னால் போய்விட்டது” என்றார்கள். (யோவா. 12:19) எனவே, பெரும்பாலான யூதர்களுக்கு ஒன்றுமே தெரியவில்லை எனச் சொல்ல முடியாது. ஆனால், இயேசுதான் மேசியா என்ற உண்மையைப் பொறுத்தவரையில் அவர்கள் ‘அறியாமையிலேயே’ இருந்தார்கள். அவர்கள் மேசியாவைப் பற்றி அதிகம் கற்றுக்கொண்டு அவர்மீது அன்பை வளர்த்திருக்கலாம், ஆனால் அப்படிச் செய்யவில்லை. சொல்லப்போனால், அவர்களில் சிலர் பிற்பாடு அவருடைய கொலைக்கு உடந்தையாக ஆனார்கள். அதனால்தான், அப்போஸ்தலன் பேதுரு அவர்களில் பலருக்கு அறிவுரை வழங்கி, “மனந்திரும்பி உங்கள் வழியை மாற்றிக்கொள்ளுங்கள்; அப்போதுதான் உங்களுடைய பாவங்கள் துடைத்தழிக்கப்படும், யெகோவாவிடமிருந்து புத்துணர்ச்சி கிடைத்துகொண்டே இருக்கும். அதோடு, உங்களுக்கென்று நியமிக்கப்பட்ட கிறிஸ்துவாகிய இயேசுவை அவர் உங்களிடம் அனுப்புவார்” என்றார். (அப். 3:19, 20) குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், ‘ஆலயகுருமார்களில் ஏராளமானோர்’ உட்பட ஆயிரக்கணக்கான யூதர்கள் செவிசாய்க்க ஆரம்பித்தார்கள். அதற்கு மேலும் அவர்கள் அறியாமையில் இல்லை. மாறாக, அவர்கள் மனந்திரும்பி யெகோவாவின் அங்கீகாரத்தைப் பெற்றார்கள்.—அப். 2:41; 4:4; 5:14; 6:7.