வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
ஞானஸ்நானம் பெற்ற ஒருவர் எந்தச் சமயங்களில் மீண்டும் ஞானஸ்நானம் பெற வேண்டியிருக்கலாம்?
ஞானஸ்நானம் பெற்ற ஒருவர், ‘என்னுடைய ஞானஸ்நானம் செல்லுபடியாகுமா? நான் மீண்டும் ஞானஸ்நானம் பெற வேண்டியிருக்குமா?’ என்றெல்லாம் சில சமயங்களில் யோசிக்கக்கூடும். உதாரணத்திற்கு, ஞானஸ்நானம் பெற்ற சமயத்தில், ஒரு நபர் ரகசியமாக ஒழுக்கங்கெட்ட வாழ்க்கை வாழ்ந்து வந்திருக்கலாம் அல்லது ஏதாவது கெட்ட பழக்கத்தில் ஈடுபட்டு வந்திருக்கலாம். (ஒருவேளை ஞானஸ்நானம் பெற்ற பிறகு அவர் அப்படி நடந்திருந்தால் நிச்சயம் சபைநீக்கம் செய்யப்பட்டிருப்பார்.) இப்படிப்பட்ட நபரால் யெகோவாவுக்குத் தன்னை உண்மையிலேயே எப்படி அர்ப்பணித்திருக்க முடியும்? கடவுளுக்குத் தன்னை அர்ப்பணிக்கும் முன்பே கெட்ட நடத்தையை அவர் மாற்றியிருக்க வேண்டும்; அப்போதுதான், அவருடைய ஞானஸ்நானம் செல்லத்தக்கதாக இருக்கும். ஞானஸ்நானம் பெற்ற சமயத்தில் ஒரு நபர் அத்தகைய பாவ வாழ்க்கை வாழ்ந்து வந்திருந்தால், மீண்டும் ஞானஸ்நானம் எடுப்பது பற்றி அவர் சிந்தித்துப் பார்ப்பது சரியே.
என்றாலும், ஒரு நபர் ஞானஸ்நானம் பெற்ற சமயத்தில் மோசமான பாவம் எதுவும் செய்யாமல் இருந்திருக்கலாம்; ஆனால், அதன் பிறகு மோசமான பாவத்தைச் செய்துவந்திருக்கலாம்; அதனால், நீதிவிசாரணைக் குழுவுக்குமுன் நிறுத்தப்பட்டிருக்கலாம். அப்போது அந்த நபர், ‘ஞானஸ்நானத்தைப் பற்றி நான் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை, தெரியாமல் ஞானஸ்நானம் எடுத்துவிட்டேன், அதனால் அது செல்லுபடியாகாது’ என்று சொல்வதாக வைத்துக்கொள்ளுங்கள். நீதிவிசாரணைக் குழுவிலுள்ள மூப்பர்கள், அந்த நபருடைய ஞானஸ்நானத்தைப் பற்றிக் கேள்வி எழுப்பக் கூடாது; அவருடைய அர்ப்பணத்தைப் பற்றியும் ஞானஸ்நானத்தைப் பற்றியும் அவர் என்ன நினைக்கிறார் எனவும் கேட்கக் கூடாது. ஏனென்றால், அந்த நபர் ஞானஸ்நானம் எடுத்த சமயத்தில் ஞானஸ்நானப் பேச்சைக் கேட்டிருந்தார்; அச்சமயத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு “ஆம்” என்று பதிலும் அளித்திருந்தார். அதுமட்டுமா? ஞானஸ்நானம் கொடுக்கப்படும் இடத்திற்குச் சென்றிருந்தார், பின்பு தண்ணீருக்குள் அமிழ்த்தி எடுக்கப்பட்டிருந்தார். ஆகையால், ஞானஸ்நானத்தின் முக்கியத்துவத்தை நன்கு அறிந்துதான் அவர் ஞானஸ்நானம் பெற்றிருக்க வேண்டும். அதனால், மூப்பர்கள் அவரை ஞானஸ்நானம் பெற்ற ஒருவராகவே கருதி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஒருவேளை அந்த நபரே தன்னுடைய ஞானஸ்நானத்தைப் பற்றிக் கேள்வி எழுப்பினால், மார்ச் 1, 1960 தேதியிட்ட ஆங்கில காவற்கோபுரம், பக்கங்கள் 159-160-ஐயும், பிப்ரவரி 15, 1964 தேதியிட்ட காவற்கோபுரம், பக்கங்கள் 123-126-ஐயும் மூப்பர்கள் அவர்களிடம் எடுத்துக் காட்டலாம்; மீண்டும் ஞானஸ்நானம் பெறுவது பற்றிய விவரங்கள் அவற்றில் உள்ளன. சில சூழ்நிலைகளில் (ஞானஸ்நானம் பெற்ற சமயத்தில் பைபிளைப் பற்றித் தனக்குப் போதிய அறிவு இல்லை என்று ஒரு நபர் சொல்வது போன்ற சூழ்நிலைகளில்) மீண்டும் ஞானஸ்நானம் எடுப்பதா வேண்டாமா என்பது அவரவருடைய சொந்தத் தீர்மானம்.
ஒரே வீட்டில் மற்றவர்களோடு குடியிருக்க நேரிடும்போது, கிறிஸ்தவர்கள் என்ன விஷயங்களை மனதில் வைக்க வேண்டும்?
குடியிருக்க நம் எல்லாருக்குமே ஓர் இடம் தேவை. ஆனால், இன்று அநேகருக்குச் சொந்த வீடு இல்லை. பணம், ஆரோக்கியம் போன்ற பல காரணங்களால் பலர் கூட்டுக்குடும்பமாக வாழ வேண்டியிருக்கிறது. சில நாடுகளில், உறவினர்கள் ஒரே அறையில் வசிக்க வேண்டிய சூழ்நிலை இருக்கிறது; தனிமைக்கே வாய்ப்பில்லாமல் போய்விடுகிறது.
நாம் எங்கு குடியிருக்க வேண்டும், எப்படிக் குடியிருக்க வேண்டும் என்றெல்லாம் விலாவாரியான சட்டதிட்டங்களை யெகோவாவின் அமைப்பு ஏற்படுத்துவதில்லை; அது அவர்களுடைய வேலையும் இல்லை. குடியிருப்பு சம்பந்தப்பட்ட விஷயத்தில் யெகோவா எதை ஏற்றுக்கொள்கிறார், எதை ஏற்றுக்கொள்வதில்லை என்பதைத் தெரிந்துகொள்ள நாம் பைபிள் நியமங்களை மனதில் வைக்க வேண்டும். அந்த நியமங்களில் சில யாவை?
நாம் குடியிருக்கிற வீட்டிலுள்ள நபர்களால் நமக்கும் நம் ஆன்மீக நலனுக்கும் பாதிப்பு ஏற்படுமா என்பதை முதலாவது சிந்தித்துப் பார்க்க வேண்டும். அந்த நபர்கள் எப்படிப்பட்டவர்கள்? அவர்கள் யெகோவாவை வணங்குகிறவர்களா? பைபிள் நெறிகளின்படி வாழ்கிறவர்களா? அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு எச்சரித்து எழுதினார்: “ஏமாந்துவிடாதீர்கள்; கெட்ட சகவாசம் நல்ல பழக்கவழக்கங்களைக் கெடுத்துவிடும்.”—1 கொ. 15:33.
பாலியல் முறைகேட்டில் ஈடுபடுவதையும், மணத்துணைக்குத் துரோகம் செய்வதையும் யெகோவா கண்டனம் செய்கிறார் என பைபிள் சொல்கிறது. (எபி. 13:4) ஆகவே, மணமாகாத ஓர் ஆணும் பெண்ணும் ஒரே வீட்டில் கணவன் மனைவிபோல் வாழ்வதைக் கடவுள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார். ஒழுக்கக்கேடான காரியங்கள் கண்டுகொள்ளாமல் விடப்படுகிற இடத்தில் கிறிஸ்தவர்கள் தங்கவே கூடாது.
கடவுளுடைய தயவைப் பெற விரும்புகிறவர்கள் ‘பாலியல் முறைகேட்டிலிருந்து விலகி ஓட’ வேண்டுமென பைபிள் அறிவுறுத்துகிறது. (1 கொ. 6:18) ஆகையால், ஒழுக்கக்கேடான காரியங்களில் ஈடுபடுவதற்கான சபலத்தைத் தூண்டுகிற எந்தவொரு இடத்திலும் தங்குவதைக் கிறிஸ்தவர்கள் தவிர்த்துவிடுவது ஞானமானது. உதாரணத்திற்கு, ஒரே வீட்டில் கிறிஸ்தவர்கள் பலர் தூங்க வேண்டியிருக்கலாம். அத்தகைய சூழ்நிலை தப்புத்தண்டா ஏதாவது ஏற்பட வழிவகுத்துவிடுமா என யோசித்துப் பார்க்க வேண்டும். ஒரு வீட்டில், மணமாகாத இருவர் மட்டும் கொஞ்ச நேரத்திற்குத் தனியே இருக்க நேரிட்டால் என்ன செய்வது? அது ஒழுக்கக்கேடான நடத்தைக்கு வழிவகுத்துவிடும் என்பதால் அத்தகைய சூழ்நிலையைத் தவிர்ப்பது ஞானமானது. அவ்வாறே, காதலர்கள் ஒரே வீட்டில் தங்குவது, பஞ்சையும் நெருப்பையும் பக்கத்தில் வைப்பதுபோல் இருக்கும் என்பதால் இந்தச் சூழ்நிலையையும் தவிர்ப்பது ஞானமானது.
அதேபோல், விவாகரத்து செய்துகொண்டவர்களும் ஒரே வீட்டில் வசிப்பது சரியல்ல. முன்பு அவர்கள் ஒருவருக்கொருவர் நெருக்கமாக இருந்ததால், ஒழுக்கங்கெட்ட நடத்தையில் ஈடுபடுவதற்கான வாய்ப்பு எளிதில் ஏற்பட்டுவிடலாம்.—நீதி. 22:3.
மனதில் வைக்க வேண்டிய மற்றொரு முக்கியமான விஷயம், சமுதாயம் எப்படிப் பார்க்கிறது என்பதே. குடியிருப்பு சம்பந்தமாக, கிறிஸ்தவர் ஒருவருக்குச் சரியென்று படுகிற ஒரு விஷயத்தைப் பற்றி சமுதாயம் ஏடாகூடமாகப் பேசலாம். அதை நாம் அலட்சியமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. நம்முடைய நடத்தை யெகோவாவின் பெயருக்கு எந்தவொரு களங்கத்தையும் ஏற்படுத்திவிடாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும். பவுல் இவ்வாறு சொன்னார்: “யூதர்களுக்கோ கிரேக்கர்களுக்கோ கடவுளுடைய சபைக்கோ இடையூறாக இல்லாதபடி நடந்துகொள்ளுங்கள். நானும் அவ்வாறே எல்லாக் காரியங்களிலும் எல்லாருக்கும் பிரியமாக நடந்து வருகிறேன்; எனக்குப் பிரயோஜனமானதை நாடாமல், அநேகர் மீட்புப் பெறுவதற்காக அவர்களுக்குப் பிரயோஜனமானதையே நாடுகிறேன்.”—1 கொ. 10:32, 33.
யெகோவாவின் நீதியான நெறிகளுக்கு இசைவாக வாழ விரும்புகிறவர்கள் குடியிருப்பதற்குத் தகுந்த ஓர் இடத்தைக் கண்டுபிடிப்பது சவாலான விஷயம்தான். என்றாலும், கிறிஸ்தவர்கள் “நம் எஜமானருக்கு எது பிரியமானதென்று எப்போதும் நிச்சயப்படுத்திக்கொள்ள” வேண்டும். தாங்கள் தங்கியிருக்கிற வீட்டில் எந்தவொரு ஒழுக்கங்கெட்ட காரியமும் நடக்காததை அவர்கள் நிச்சயப்படுத்திக்கொள்ள வேண்டும். (எபே. 5:5, 10) எனவே, கிறிஸ்தவர்கள் கடவுளுடைய வழிநடத்துதலுக்காக ஜெபம் செய்ய வேண்டும்; உடல் ரீதியில், ஒழுக்க ரீதியில் தங்களுக்கும் மற்றவர்களுக்கும் பாதிப்பு ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதோடு, யெகோவாவின் பெயருக்குக் களங்கம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.