விழிப்புணர்வுக்குக் கிடைத்த நற்பலன்கள்
உங்களுடைய சபையின் பிராந்தியத்தில் நற்செய்தியை அறிவிப்பதற்கான வாய்ப்புகள் எதிர்பாராமல் கிடைக்கலாம். அத்தகைய வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ள நீங்கள் விழிப்புடன் இருக்கிறீர்களா? பின்லாந்தில், சரித்திரப் புகழ்பெற்ற துறைமுக நகரமான டுர்குவில் வசிக்கிற நம் கிறிஸ்தவச் சகோதரர்களுக்கு அப்படியொரு வாய்ப்பு கிடைத்தது. அவர்கள் விழிப்புடன் இருந்ததற்குக் கைமேல் பலனும் கிடைத்தது.
கொஞ்சக் காலத்திற்கு முன்பு, டுர்குவிலுள்ள கப்பல் கட்டும் இடத்தில் ஒரு பெரிய பயணக் கப்பலைக் கட்டி முடிப்பதற்கு ஆசியாவிலிருந்து நிறையப் பேர் வந்திருந்ததை அங்கிருந்த சகோதரர்கள் கவனித்தார்கள். பின்னர், அந்த அயல்நாட்டுப் பணியாளர்கள் எந்த ஹோட்டல்களில் தங்கியிருக்கிறார்கள் என்பதை ஒரு சகோதரர் கண்டுபிடித்தார். காலையில் பணியாளர்கள் அந்த ஹோட்டல்களிலிருந்து கப்பல் கட்டும் இடத்திற்கு பஸ்களில் அழைத்துச் செல்லப்படுவதையும் அவர் தெரிந்துகொண்டார். உடனடியாக அவர் அந்தத் தகவலை அங்குள்ள ஆங்கிலச் சபையைச் சேர்ந்த சகோதரர்களிடம் தெரிவித்தார்.
அயல்நாட்டிலிருந்து ஏராளமானோர் வந்திருந்ததால், அவர்களுக்கு நற்செய்தியை அறிவிப்பதற்கான வாய்ப்பு எதிர்பாராமல் கிடைத்திருந்ததை அந்தச் சபையிலிருந்த மூப்பர்கள் புரிந்துகொண்டார்கள்; அவர்களுக்கு நற்செய்தியை அறிவிக்க என்ன விசேஷ முயற்சிகளை எடுக்கலாமென இவர்கள் உடனடியாகத் தீர்மானித்தார்கள். அந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை பத்து பிரஸ்தாபிகள் பஸ் நிறுத்தத்திற்கு அருகே ஏழு மணிக்கு வந்து சேர்ந்தார்கள். ஆரம்பத்தில், ஒரு பணியாளர்கூட கண்ணில்படவில்லை. ‘தாமதமாக வந்துவிட்டோமோ? அவர்கள் டுர்குவைவிட்டே போய்விட்டார்களோ?’ என்றெல்லாம் சகோதரர்கள் நினைத்தார்கள். பிறகு, பணியாளருக்குரிய உடையை அணிந்த ஒருவர் அருகே வந்தார். அடுத்து, இன்னொருவர் வந்தார், பின்னர் ஒவ்வொருவராக வர ஆரம்பித்தார்கள். சீக்கிரத்திலேயே பஸ் நிறுத்தத்திற்கு அருகே ஏராளமான பணியாளர்கள் குவிந்துவிட்டார்கள். உடனடியாக, பிரஸ்தாபிகள் சாட்சிகொடுக்க ஆரம்பித்தார்கள்; அவர்களுக்கு ஆங்கிலப் பிரசுரங்களை விநியோகித்தார்கள். சந்தோஷமான விஷயம் என்னவென்றால், பணியாளர்கள் எல்லாரும் பஸ்களில் வந்து உட்காருவதற்குக் கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் எடுத்ததால், பெரும்பாலோருக்குச் சகோதரர்கள் சாட்சிகொடுக்க முடிந்தது. பணியாளர்கள் 126 சிறுபுத்தகங்களையும் 329 பத்திரிகைகளையும் பெற்றுக்கொள்ளவே, பஸ்களும் புறப்பட்டுச் சென்றன!
கைமேல் பலன் கிடைத்ததால் மறுவாரமும் இதேபோன்று விசேஷ ஊழியத்தில் ஈடுபட சகோதரர்கள் நினைத்தார்கள்; அது, வட்டாரக் கண்காணியின் சந்திப்பு வாரமாக இருந்தது. மழை கொட்டிக் கொண்டிருந்த அன்று காலை ஆறரை மணிக்கு வட்டாரக் கண்காணி வெளி ஊழியக் கூட்டத்தை நடத்தினார்; பிறகு, 24 பிரஸ்தாபிகள் அந்த பஸ் நிறுத்தத்தை நோக்கி விரைந்தார்கள். இந்தச் சமயம் அவர்கள் டாகலாக் மொழியில் பிரசுரங்களை எடுத்துச் சென்றார்கள்; ஏனென்றால், அந்தப் பணியாளர்களில் பெரும்பாலோர் பிலிப்பைன்ஸ் நாட்டிலிருந்து வந்திருந்ததை அவர்கள் அறிந்திருந்தார்கள். அன்றும்கூட அந்தப் பணியாளர்களுக்கு 7 புத்தகங்களையும், 69 சிறுபுத்தகங்களையும், 479 பத்திரிகைகளையும் சகோதரர்கள் விநியோகிக்கவே, பஸ்கள் துறைமுகத்தை நோக்கிப் புறப்பட்டன. இந்த விசேஷ ஊழியத்தில் கலந்துகொண்ட சகோதர சகோதரிகள் அனுபவித்த சந்தோஷத்தையும் உற்சாகத்தையும் சற்று எண்ணிப்பாருங்கள்!
அந்தப் பணியாளர்கள் தங்கள் சொந்த நாடுகளுக்குத் திரும்பிச் செல்வதற்கு முன்பாக, சகோதரர்கள் அவர்களில் பலரை அவர்கள் தங்கியிருந்த ஹோட்டல்களில் போய்ச் சந்திக்க முடிந்தது; கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய செய்தியை இன்னும் விளக்கமாக அவர்களுக்குச் சொல்ல முடிந்தது. அந்தப் பணியாளர்களில் சிலர் இதற்கு முன் வேறு நாடுகளுக்குச் சென்றிருந்தபோது யெகோவாவின் சாட்சிகளைச் சந்தித்திருந்ததாகச் சொன்னார்கள். பின்லாந்தில் அவர்கள் தங்கியிருந்த சமயத்தில் அவர்களைச் சந்திக்கச் சகோதரர்கள் எடுத்த முயற்சிக்கு நன்றி தெரிவித்தார்கள்.
உங்களுடைய சபையின் பிராந்தியத்தில் நற்செய்தியை அறிவிப்பதற்கான வாய்ப்புகள் எதிர்பாராமல் கிடைக்கையில் அவற்றைப் பயன்படுத்திக்கொள்ள விழிப்புடன் இருக்கிறீர்களா? பல்வேறு பின்னணிகளைச் சேர்ந்த மக்களுக்கு நற்செய்தியை அறிவிக்க நீங்கள் முயற்சி செய்கிறீர்களா? அப்படியென்றால், டுர்குவில் உள்ள இந்தச் சகோதரர்களைப் போலவே நீங்கள் புதுப் புது அனுபவங்களைப் பெறுவீர்கள்.
[பக்கம் 32-ன் தேசப்படம்/படம்]
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
பின்லாந்து
ஹெல்சிங்கி
டுர்கு
[படத்திற்கான நன்றி]
STX Europe