உங்களுக்கு நினைவிருக்கிறதா?
சமீபத்தில் வெளியான காவற்கோபுரம் பத்திரிகைகளை நீங்கள் வாசித்து மகிழ்ந்தீர்களா? பின்வரும் கேள்விகளுக்கு உங்களால் பதிலளிக்க முடியுமா என்று பாருங்கள்:
சாலொமோனின் கெட்ட உதாரணத்திலிருந்து நமக்கு என்ன பாடம்?
சாலொமோன் ராஜாவைக் கடவுள் ஆசீர்வதித்தார். தம்முடைய நோக்கத்தை நிறைவேற்ற அவரைப் பயன்படுத்திக்கொண்டார். ஒரு கட்டத்தில் அவர் கடவுளுடைய கட்டளையை மீறிநடந்தார். பார்வோனின் மகள் உட்பட பல புறதேசப் பெண்களை மணந்தார். அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக அவரை யெகோவாவிடமிருந்து பிரித்துவிட்டார்கள். நாமும் கவனமாய் இல்லாவிட்டால், கெட்ட குணங்களும் மனப்பான்மைகளும் படிப்படியாக நம் மனதில் வளர்ந்துவிடும். (உபா. 7:1-4; 17:17; 1 இரா. 11:4-8)—12/15, பக்கங்கள் 10-12.
பரலோக நம்பிக்கையுள்ள உண்மைக் கிறிஸ்தவர்களில் சிலர் முதல் நூற்றாண்டு முதற்கொண்டே இந்தப் பூமியில் இருந்துவந்திருக்கிறார்கள் என எப்படித் தெரிந்துகொள்கிறோம்?
‘களைகளையும்’ ‘கோதுமையையும்’ பற்றிய இயேசுவின் உவமையில் ‘நல்ல விதை’ என்பது “கடவுளுடைய அரசாங்கத்தின் பிள்ளைகள்.” (மத். 13:24-30, 38) அறுவடைக் காலம்வரை கோதுமையின் நடுவே களைகளும் வளரும். எனவே... யாரெல்லாம் கோதுமை வகுப்பாராய் இருந்தார்கள் என்று நம்மால் திட்டவட்டமாகச் சொல்ல முடியாவிட்டாலும் முதல் நூற்றாண்டு முதற்கொண்டே அவர்கள் இருந்துவந்திருக்கிறார்கள்.—1/15, பக்கம் 7.
வயிற்றெரிச்சல் எனும் விஷத்தை முறிப்பதற்கு என்ன மருந்து?
அன்பையும் சகோதர பாசத்தையும் வளர்த்துக்கொள்ளுங்கள், கடவுளுடைய மக்களோடு கூடி வாருங்கள், நன்மை செய்யுங்கள், “சந்தோஷப்படுகிறவர்களோடு சந்தோஷப்படுங்கள்.” (ரோ. 12:15)—2/15, பக்கங்கள் 16-17.
ஆலோசனை கொடுக்கும்போது என்ன நியமங்களை மனதில் வைக்க வேண்டும்?
சூழ்நிலையைப் புரிந்துகொள்ளுங்கள், அவசரப்பட்டு எதையும் சொல்லாதீர்கள், தாழ்மையுடன் பைபிளைப் பயன்படுத்துங்கள், அமைப்பின் உபகரணங்களைப் பயன்படுத்துங்கள், மற்றவர்களுக்காகத் தீர்மானம் செய்யாதீர்கள்.—3/15, பக்கங்கள் 7-9.