யெகோவாவின் செயல்தொடர்புகளை தெரியப்படுத்துங்கள்
1 “அவருடைய செய்கைகளை [செயல்தொடர்புகளை, NW] ஜனங்களுக்குள்ளே அறிவியுங்கள்; அவருடைய நாமம் உயர்ந்ததென்று பிரஸ்தாபம் பண்ணுங்கள் . . . , அவர் மகத்துவமான கிரியைகளைச் செய்தார்.” (ஏசா. 12:4, 5) இந்த ஊக்கமான தூண்டுதலுக்கு நீங்கள் எவ்வாறு பிரதிபலிக்கிறீர்கள்? ஒரு ஜனக்கூட்டமாகவும் தனிப்பட்ட நபர்களாகவும் யெகோவா நம்மோடு கொண்டிருந்த செயல்தொடர்புகளை நாம் மீண்டும் நினைவுக்குக் கொண்டு வருகையில், மற்றவர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் என்று நம்முடைய இருதயங்கள் உந்தப்படுகின்றன அல்லவா? 73 வருடங்களுக்கு முன்பு, யெகோவா தம்முடைய ஜனங்களை பாபிலோனிய சிறையிருப்பிலிருந்து விடுவித்தார். 1919 முதற்கொண்டு மெய் வணக்கம் உறுதியாக நிலைநாட்டப்பட்டிருக்கிறது, இப்போது பூமியின் எல்லா பாகங்களுக்கும் பரவியிருக்கிறது. இப்படிப்பட்ட காரியங்களை யெகோவா செய்திருக்கும் அளவு நம்முடைய எதிர்பார்ப்புகளை மிஞ்சிவிட்டிருக்கிறது. ஒரு தனிப்பட்ட நபராக, கடவுளின் வழிநடத்துதல், பாதுகாப்பு, ஆசீர்வாதம் ஆகியவற்றை நீங்கள் எவ்வளவு ஆழமாக போற்றுகிறீர்கள்? அவருடைய செயல்களை அறிவிப்பதிலும், அவருடைய பெயரை உயர்வான இடத்தில் வைப்பதிலும் நீங்கள் அதிகத்தைச் செய்ய முடியுமா?
2 நித்தியமாக நாம் நன்றியுள்ளவர்களாயிருக்க வேண்டிய ஒரு தெய்வீக செயலை ஞாபகார்த்த தின காலப்பகுதி மனதுக்கு கொண்டு வருகிறது. ஒரு துணைப் பயனியராக சேவிப்பதன் மூலம் யெகோவாவுக்கு நம்முடைய நன்றியையும், போற்றுதலையும் காண்பிப்பதற்கு விசேஷமாக ஏப்ரல் மாதம் பொருத்தமான காலமாயிருக்கிறது. மேலும், வட்டாரக் கண்காணியின் சந்திப்பின்போது நீங்கள் துணைப் பயனியர் ஊழியம் செய்தால், ஊழியத்தில் அவருடைய உதவியிலிருந்தும் உற்சாகத்திலிருந்தும் நீங்கள் அதிக நன்மையடைவீர்கள்.
3 பிரஸ்தாபிகள் ஒரு தொகுதியாக துணைப் பயனியர்களாக சேவிக்கும்போது ஏற்பாடுகள் நல்ல முறையில் செயல்படுகின்றன. வேலை செய்வதற்கு எல்லாருக்கும் யாராவது ஒருவர் உடன் இருக்கும்படி ஒரு நல்ல அட்டவணையை தயாரிக்கலாம், இளம் பிள்ளைகளையுடைய சகோதரிகள் ஒருவருக்கொருவர் உதவி செய்துகொள்ள ஏற்பாடு செய்யலாம். நல்ல திட்டமிடுதலோடு, 60 மணிநேரத் தேவையை பூர்த்தி செய்வது அதிக கடினமானது அல்ல என்று அநேகர் கண்டிருக்கின்றனர். ஒரு நாளைக்கு வெறும் 2 மணிநேரங்கள் அல்லது ஒரு வாரத்துக்கு 15 மணிநேரங்கள் ஊழியத்தில் செலவழிப்பதை இது அர்த்தப்படுத்துகிறது. சில துணைப் பயனியர்கள் தங்கள் உலகப்பிரகாரமான வேலைக்கு முன்போ அல்லது பின்போ ஒன்று அல்லது இரண்டு மணிநேரங்களும், வார இறுதி நாட்களில் நீண்ட நேரமும் சாட்சி கொடுக்கின்றனர்.
4 துணைப் பயனியர் ஊழியம் உங்களால் செய்ய முடியாவிட்டாலும், உங்களுடைய வெளி ஊழிய வேலையை நீங்கள் அதிகரிக்க முடியும். போக்குவரத்து காரியங்களில் உதவி செய்வதன் மூலமாகவோ அல்லது பயனியர் சேவை செய்யும் மற்றவர்களோடு வேலை செய்வதன் மூலமாகவோ, நீங்கள் அவர்களுக்கு உற்சாகமூட்டுபவர்களாய் இருப்பீர்கள். யெகோவாவின் நாமத்தையும் அவருடைய செயல்தொடர்புகளையும் அறிவிப்பதில் நம்மால் முடிந்ததை செய்யும்போது, அது நம்முடைய போற்றுதல் மிகுந்த கடவுளால் கவனிக்கப்படாமல் போகாது.—மல். 3:16.