இரத்தமேற்றுதலிலிருந்து உங்கள் பிள்ளைகளைப்பாதுகாத்தல்
1 “இதோ, பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்தரம்.” (சங். 127:3) நீங்கள் யெகோவாவிடமிருந்து அத்தகைய மதிப்புவாய்ந்த சுதந்தரத்தைக் கொண்டிருக்கிறீர்களென்றால், பெற்றோராக நீங்கள் உங்கள் பிள்ளைகளை பயிற்றுவிக்க, பராமரிக்க, மேலும் பாதுகாப்பதற்கான ஒரு மகிழ்ச்சியான, என்றாலும் முக்கியமான உத்தரவாதத்தைக் கொண்டிருக்கிறீர்கள். உதாரணமாக, உங்கள் இளம் பிள்ளைகளை இரத்தமேற்றுதலிலிருந்து பாதுகாப்பதற்கு எல்லா நியாயமான நடவடிக்கையையும் எடுத்திருக்கிறீர்களா? இரத்தமேற்றுவதற்கான வாய்ப்புகளை எதிர்ப்பட்டால் உங்கள் பிள்ளைகள் எவ்வாறு பிரதிபலிப்பார்கள்? இரத்தமேற்றுவதாக அச்சுறுத்தப்படும் ஓர் அவசர சூழ்நிலையை திறம்பட்ட விதத்தில் சமாளிக்க என்ன செய்யலாம் என்பது பற்றி குடும்பமாக கலந்தாலோசித்திருக்கிறீர்களா?
2 அவ்விதமான சூழ்நிலைகளுக்கு உங்கள் குடும்பத்தை ஆயத்தப்படுத்துவது கவலைக்கோ அளவுக்கதிக அழுத்தத்திற்கோ காரணமாக இருக்க வேண்டியதில்லை. நீங்கள் வாழ்க்கையில் நேரிடக்கூடிய ஒவ்வொரு சம்பவத்தையும் எதிர்நோக்கி தயாரிக்க முடியாது; ஆனால் இரத்தமேற்றுதலிலிருந்து உங்கள் பிள்ளைகளைப் பாதுகாப்பதற்கு, பெற்றோராக நீங்கள் முன்னதாகவே செய்யக்கூடிய பல காரியங்கள் இருக்கின்றன. இந்த உத்தரவாதங்களை அசட்டை செய்வது உங்கள் குழந்தை மருத்துவ கவனிப்பைப் பெறும்போது இரத்தமேற்றப்படுவதில் விளைவடையக்கூடும். என்ன செய்யப்படலாம்?
3 திடமான நம்பிக்கை முக்கியம்: இரத்தத்தைப் பற்றிய கடவுளின் சட்டத்தைக் குறித்து உங்களுடைய சொந்த நம்பிக்கைகள் எவ்வளவு திடமானது என்பதன்பேரில் முக்கியமாக சிந்திக்க வேண்டும். நேர்மை, ஒழுக்கம், நடுநிலைமை, மேலும் வாழ்க்கையின் மற்ற அம்சங்களைப்பற்றிய அவருடைய சட்டத்தை கற்பிப்பது போலவே, இந்த விஷயத்திலும் யெகோவாவுக்கு கீழ்ப்படிய உங்கள் பிள்ளைகளுக்குக் கற்பிக்கிறீர்களா? உபாகமம் 12:23-ல் “இரத்தத்தைமாத்திரம் புசியாதபடிக்கு எச்சரிக்கையாயிரு [மனதில் உறுதிகொண்டிரு, NW]” என்ற கடவுளின் கட்டளையின் பிரகாரமாகவே நாம் உணருகிறோமா? 25-ம் வசனம் சேர்க்கிறது: “நீ கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்வதினால், நீயும் உனக்குப் பின்வரும் உன் பிள்ளைகளும் நன்றாயிருக்கும்படி நீ அதைச் சாப்பிடலாகாது.” ஒரு மருத்துவர், இரத்தம் உங்கள் நோயுற்ற குழந்தைக்கு ‘காரியங்களை நன்றாக இருக்கும்படி செய்யும்’ என்று உரிமை பாராட்டலாம், ஆனால் உங்களுக்கும் உங்களுடைய பிள்ளைகளுக்கும் இரத்தத்தை மறுப்பதற்கான எந்த அவசரமான நிலைமையும் வருவதற்கு முன்னதாகவே, தெய்வீக சட்டத்தை மீறுவதை உட்படுத்துவதால் வரக்கூடியதாக சொல்லப்படும் எந்த வாழ்க்கை நீடிப்பையும்விட யெகோவாவோடுள்ள உங்கள் உறவை உயர்ந்ததாக மதித்துணர்ந்து நீங்கள் உறுதி பூண்டிருக்கவேண்டும். இப்போது கடவுளின் ஆதரவும் எதிர்காலத்தில் நித்திய ஜீவனும் உட்பட்டிருக்கிறது!
4 ஆம், யெகோவாவின் சாட்சிகள் ஜீவநோக்குள்ளவர்கள். அவர்களுக்கு மரிப்பதற்கான ஆசை இருக்கிறதில்லை. யெகோவாவை துதிப்பதற்காக மற்றும் அவருடைய சித்தத்தைச் செய்வதற்காக அவர்கள் வாழ விரும்புகிறார்கள். அதுவே அவர்கள் மருத்துவமனைகளுக்கு செல்வதற்கும் தங்கள் குழந்தைகளை சிகிச்சைக்காக அங்கு கொண்டுசெல்வதற்கும் ஒரு காரணமாக இருக்கிறது. அவர்களுக்கு சிகிச்சை அளிக்குமாறு மருத்துவரிடம் கேட்கின்றனர்; இரத்தம்தான் ஏற்கத்தக்க அல்லது சிகிச்சைக்காக மருத்துவத்தால் குறிப்பிடப்பட்ட முறை என்றால், அவர்கள் இரத்தமற்ற மாற்றுவகை மருத்துவ செயலாற்றலுக்காக கேட்கின்றனர். இரத்தத்திற்கு மாற்றுவகைகள் பல இருக்கின்றன. அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள் அவற்றை பயன்படுத்துகின்றனர். அவ்விதமான மாற்றுவகை செயல்முறைகள் போலி மருத்துவம் அல்ல, ஆனால் பிரபலமான மருத்துவ பத்திரிகைகளை ஆதாரமூலங்களாகக்கொண்ட மருத்துவப்பூர்வமாக ஏற்கத்தக்க சிகிச்கைகளையும் செயல்முறைகளையும் உடையதாகும். சாட்சி குழந்தைகளுக்கு இரத்தமில்லாமல் சிகிச்சையளிக்கும் மருத்துவர்களைக் கண்டுபிடிப்பது இன்னும் ஒரு பிரச்னையாக இருந்தாலும், உலக முழுவதிலும் ஆயிரக்கணக்கான மருத்துவர்கள் இரத்தமின்றி மருத்துவ கவனிப்பைக் கொடுப்பதில் நம்மோடு ஒத்துழைக்கின்றனர்.
5 ஓர் ஒத்துழைக்கும் மருத்துவரை கண்டுபிடித்தல்: மருத்துவர்கள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் பல அக்கறைகளைக் கொண்டிருக்கையில், நீங்கள் உங்கள் பிள்ளைக்கு இரத்தமின்றி சிகிச்சையளிக்கக் கேட்கும்போது, இது சவாலை அதிகரிக்கிறது. சில மருத்துவர்கள் ஏற்கத்தகுந்த விடுவிப்பு பூர்த்தி செய்யப்பட்டால், வயதுவந்த ஆட்களுக்கு இரத்தம் சம்பந்தமான அவர்களுடைய விருப்பத்தை மதித்து சிகிச்சையளிக்க ஒத்துக்கொள்கின்றனர். அதேவிதமாக சிலர் முதிர்ச்சிவாய்ந்த சிறுவர்களாக தங்களை நிரூபித்த சிறுவர்களுக்கு சிகிச்சையளிக்க ஒத்திருக்கின்றனர், ஏனென்றால் சில நீதிமன்றங்கள் முதிர்ச்சிவாய்ந்த சிறுவர்கள் தங்களுடைய சொந்த மருத்துவ தெரிவுகளை செய்ய உரிமை கொண்டிருப்பதாக அங்கீகரித்திருக்கின்றன. (முதிர்ச்சிவாய்ந்த சிறுவரை உண்டாக்குவது எது என்பது பற்றிய கலந்தாராய்ச்சியை தி உவாட்ச்டவர், ஜூன் 15, 1991, பக்கங்கள் 16,17-ல் பார்க்கவும்.) இருப்பினும், மருத்துவர்கள் இளம் பிள்ளைகளுக்கு, குறிப்பாக குழந்தைகளுக்கு, இரத்தமேற்றுவதற்கான அனுமதியின்றி சிகிச்சையளிக்க மறுக்கக்கூடும். உண்மையில், ஒரு பிள்ளைக்கு சிகிச்சையளிக்கும்போது எந்தச் சூழ்நிலையிலும் இரத்தத்தை பயன்படுத்தமாட்டார்கள் என்று 100 சதவீத உறுதியளிப்பை வெகு சில மருத்துவர்களே கொடுப்பர். மருத்துவ மற்றும் சட்டப்படியான காரணங்களுக்காக, அநேக மருத்துவர்கள் அப்படிப்பட்ட ஓர் உத்தரவாதத்தைக் கொடுக்க முடியாதென உணருகின்றனர். இருந்தபோதிலும், ஓர் அதிகரிக்கும் எண்ணிக்கையானோர், இரத்தத்தைக்குறித்த நமது விருப்பங்களை மதிப்பதில் தங்களால் இயன்றவரை சென்று யெகோவாவின் சாட்சிகளின் குழந்தைகளுக்கு கவனிப்பைத் தர விரும்புகின்றனர்.
6 இதை முன்னிட்டு, உங்கள் பிள்ளைக்காக தகுந்த ஒரு மருத்துவரை கண்டுபிடிப்பதற்கான தேடுதலில், யெகோவாவின் சாட்சிகளோடு நன்றாக ஒத்துழைத்திருக்கும் பதிவைக் கொண்டிருந்து, முன்பு இரத்தமில்லாத செயல்முறையில் மற்ற சாட்சிகளுக்கு செயலாற்றியிருந்தபோதிலும், இரத்தம் பயன்படுத்தப்படுவதில்லை என்பதாக முழுமையாக உறுதியளிக்க சட்டம் அவரை அனுமதிப்பதில்லை என்று உணரும் ஒருவரைக் கண்டுபிடித்தால் அப்போது என்ன? எனினும், இந்த முறையும் எந்தப் பிரச்னையும் இருக்காது என்று அவர் உணருவதாக உங்களிடம் உறுதி கூறுகிறார். ஒருவேளை நீங்கள் இதை சிறந்த தெரிவாக தீர்மானிக்கலாம். இவ்விதமான சூழ்நிலைமைகளின்கீழ் தொடருவதற்கு அனுமதி கொடுக்கலாம் என்று நீங்கள் முடிவு செய்யலாம். என்றபோதிலும், உங்கள் பிள்ளைக்கு மருத்துவ சிகிச்சையளிப்பதற்கு அனுமதி கொடுப்பதன்மூலம் இரத்தமேற்றுவதற்கு அனுமதி கொடுக்கவில்லை என்பதை தெளிவுபடுத்திவிடுங்கள். இந்த வழியைத் தேர்ந்தெடுத்தது, உங்களுடைய தீர்மானம் விட்டுக்கொடுத்தலாக நோக்கப்படாமல் நீங்கள் ஏற்கவேண்டிய ஓர் உத்தரவாதமாக இருக்கவேண்டும்.
7 நிச்சயமாகவே, இரத்தத்தை பயன்படுத்தும் பிரச்னையை மேலுமாக குறைக்கக்கூடிய அல்லது ஒருவேளை நீக்கிப்போடக்கூடிய ஒரு நியாயமான மாற்றுவகை சிகிச்சை தெரிவை கண்டடைந்தால், நீங்கள் குறைந்த அபாயத்தை உடைய வழியையே தெரிந்தெடுப்பீர்கள். வேறு எதையும்விட இரத்தமேற்றாதிருப்பதற்கு ஒத்துக்கொண்டு செல்லும் ஒரு மருத்துவரை அல்லது அறுவை மருத்துவரை கண்டுபிடிக்க நீங்கள் கடும் முயற்சியை எடுப்பீர்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சிறந்த தற்காப்பானது பிரச்னைகளை எதிர்பார்ப்பதாகும். முன்கூட்டியே ஓர் ஒத்துழைக்கும் மருத்துவரைக் கண்டுபிடிக்க எல்லா முயற்சியையும் எடுங்கள். கூடியவரை ஒத்துழைக்காத மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகளிலிருந்து விலகியிருக்க முயலுங்கள்.
8 சில தேசங்களில், இரத்தமேற்றப்படுகிறதில் வித்தியாசத்தை உண்டுபண்ணக்கூடிய மற்றொரு காரியம் மருத்துவமனை கவனிப்பிற்காக எவ்வாறு பணம் செலுத்தப்படும் என்பதாகும். பெற்றோர் தங்கள் விருப்பத்திற்குரிய மருத்துவரை தேட அனுமதிக்கும் சுகநல காப்புறுதி அல்லது மற்ற பாதுகாப்புறுதியைக் கொண்டிருந்தால், பிள்ளைகள் மிக எளிதாக ஒத்துழைக்காத மருத்துவர்கள் அல்லது மருத்துவமனை பணியாளர்களுடைய பிடிக்கு வெளியில் வைக்கப்பட முடியும். ஒரு குடும்பம், மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகளிலிருந்து பெறும் சேவையின் தரம் மற்றும் ஒத்துழைப்பை போதியளவு நிதி தொகையே தீர்மானிக்கிறது. மேலும், ஒரு மருத்துவமனை அல்லது மருத்துவர் ஒரு குழந்தையை இடமாற்றம் செய்வதற்கு சம்மதிப்பது பெரும்பாலும் அந்தக் கவனிப்பிற்கான பெற்றோரின் பணம் செலுத்தும் திறமையைச் சார்ந்தே இருக்கிறது. மேலும் எதிர்கால தாய்மார்களே, நீங்கள் கருவுற்றிருக்கும் சமயத்தில் உங்களுடைய ஆரோக்கியத்தை கவனித்துக்கொள்வது முக்கியம்! இது காலத்திற்குமுன்னான பிறப்புகளையும் அதோடு சம்பந்தப்பட்ட சிக்கல்களையும் தடுப்பதற்கு அதிகத்தைச் செய்யும், ஏனென்றால் காலத்திற்குமுன் பிறந்த குழந்தைகள் மற்றும் அவர்களுடைய பிரச்னைகளுக்கான நிலையான சிகிச்சை அநேக முறைகள் இரத்தத்தை உட்படுத்துகின்றன.
9 சில நேரங்களில் மருத்துவர்கள், யெகோவாவின் சாட்சிகள் இரத்தத்திற்கான அவர்களுடைய மறுப்புகளை கடைசி நிமிடம் வரையாக கலந்துபேசுவதில்லை என்பதாக குறைகூறுகின்றனர். இவ்வாறு ஒருபோதும் இருக்கக்கூடாது. மருத்துவமனைக்குச் செல்லும்போது அல்லது ஒரு மருத்துவரை சேவையில் அமர்த்தும்போது, இரத்தத்தைப்பற்றிய தங்களுடைய நிலைநிற்கையை கலந்துபேசுவதே சாட்சி பெற்றோர் செய்ய வேண்டிய முதலாவது காரியமாகும். அறுவை சிகிச்சை உட்பட்டால், மயக்கமருந்தளிப்பவரை முன்னதாக சந்தித்துப்பேச கோருங்கள். இதை செய்வதற்காக அறுவைசிகிச்சை மருத்துவர் உதவி செய்யக்கூடும். நுழைவு படிவங்களைக் கவனமாக பார்க்கவேண்டும். ஒவ்வாத எதையும் அடித்துவிட உங்களுக்கு உரிமை இருக்கிறது. எவ்வித சந்தேகத்தையும் எடுத்துப்போட, மதசார்பான மற்றும் மருத்துவ காரணங்களுக்காக, எவ்விதமான சூழ்நிலைமைகளின்கீழும் இரத்தம் தேவைப்படவோ அனுமதிக்கப்படவோ இல்லை என்று நுழைவு படிவத்தில் தெளிவாக எழுதுங்கள்.
10 யெகோவாவின் அமைப்பிலிருந்து உதவி: உங்களுடைய பிள்ளைகளை இரத்தத்திலிருந்து பாதுகாப்பதற்கு உதவிசெய்ய யெகோவாவின் அமைப்பு என்ன முன்னேற்பாடுகளைச் செய்திருக்கிறது? நிறைய இருக்கின்றன. நமக்கு இரத்தம் மற்றும் இரத்தமின்றி மாற்றுவகை செயலாற்றலைப்பற்றி அறிவூட்டுவதற்காக சங்கம் அநேகத்தை பிரசுரித்திருக்கின்றது. உங்கள் உயிரை இரத்தம் எப்படிக் காப்பாற்ற முடியும்? என்ற புரொஷூரையும் இந்தப் பொருளில் மற்றுமநேக பிரசுரங்களையும் நீங்கள் படித்திருக்கிறீர்கள். மேலும் அதிக உதவியையும் ஆதரவையும் அளிக்கக்கூடிய சதோதர சகோதரிகளை உங்கள் உள்ளூர் சபையில் கொண்டிருக்கிறீர்கள். ஓர் ஆபத்தான நிலைமை ஏற்படும்போது, விரும்பத்தக்கவிதமாக, ஒரு மூப்பருடன் நோயாளியின் பெற்றோரில் ஒருவர் அல்லது மற்றொரு நெருங்கிய குடும்ப அங்கத்தினரை மருத்துவமனையில் ஒரு 24-மணிநேர காவலுக்காக வைப்பதை தகுதியானதாக மூப்பர்கள் கருதலாம். பெரும்பாலும் இரத்தமேற்றுதல்கள், எல்லா உறவினர்களும் நண்பர்களும் இரவு வீட்டிற்குச் சென்ற பிறகு கொடுக்கப்படுகின்றன.
11 இந்தியாவில் சீக்கிரத்தில், மருத்துவமனை தொடர்பு குழுக்கள் பெரிய நகரங்களில் நிறுவப்படும். நாட்டிலுள்ள ஒவ்வொரு சபையும் உதவிசெய்வதற்காகவிருக்கும் பயிற்றுவிக்கப்பட்ட சகோதரர்களாலான குழுவிற்கு வகுத்தளிக்கப்படும். தேவைப்படும்போது உங்கள் மூப்பர்கள் மூலமாக அவர்களை அழையுங்கள். சிறிய பிரச்னைகளுக்கு அவர்கள் அழைக்கப்படக்கூடாது, ஆனால் ஒரு முக்கியமான பிரச்னை வளருவதாக நீங்கள் உணர்ந்தால் அவர்களை அழைப்பதற்கு அதிக நேரம் தாமதிக்காதீர்கள். மாற்றுவகைதேர்வுகளில், ஒத்துழைக்கக்கூடிய மருத்துவர்கள் மற்றும் ஆலோசனைகளை பெரும்பாலும் அவர்கள் கொடுக்கமுடியும். கூடுமானால், தேவைப்படும்போது அந்த இடத்தில் இந்தச் சகோதரர்கள் இருந்து பிரச்னையை சமாளிக்கும்படி ஏற்பாடு செய்கின்றனர்.
12 நீதிமன்ற உட்புகுதலை எதிர்பார்த்து சமாளித்தல்: உங்கள் பிள்ளைக்கு இரத்தமேற்றுவதற்காக ஒரு மருத்துவர் அல்லது ஒரு மருத்துவமனை ஒரு நீதிமன்ற ஆணையை வாங்க உத்தேசித்தால் என்ன? அதிகமாக எதுவும் செய்யமுடியாதென்று நினைத்துக்கொண்டு விட்டுக்கொடுப்பதற்கு இது சமயமா? எவ்விதத்திலும் இல்லை! இரத்தமேற்றுதலைத் தடுக்க இன்னும் சாத்தியமிருக்கக்கூடும். அத்தகைய சாத்தியத்திற்கான தயாரிப்பு முன்கூட்டியே செய்யப்பட வேண்டும். என்ன செய்யப்படலாம்?
13 இந்தக் காரியங்களில் மருத்துவமனைகளையும் நீதிபதிகளையும் வழிநடத்தும் அல்லது செல்வாக்கு செலுத்தும் சட்டப்பூர்வமான நியமங்கள் சிலவற்றை புரிந்துகொள்வது தற்காப்பிற்கு பெரிதும் உதவும். அத்தகைய முக்கியத்துவமுள்ள ஓர் அடிப்படை நியமமானது, தங்களுடைய பிள்ளைகளுக்கு மருத்துவ சிகிச்சையை ஏற்க அல்லது மறுக்க பெற்றோருக்கு வரையறையற்ற அதிகாரத்தை சட்டம் கொடுப்பதில்லை என்ற உண்மையாகும். பொதுவாக பெரியவர்கள் தங்கள் விருப்பப்படி மருத்துவ சிகிச்சையை ஏற்க அல்லது மறுக்க உரிமை கொண்டிருந்தாலும், பிள்ளையின் நலனுக்கு தேவையாக கருதப்பட்ட சிகிச்சையை, அந்த மறுப்பு உண்மையாக வைத்துள்ள மதநம்பிக்கைகளின் அடிப்படையிலாக இருப்பினும் மறுப்பதற்கு பெற்றோர், விடுதலையாயில்லை.
14 இந்த அடிப்படை நியமம் 1944 ஐ. மா. உயர் நீதிமன்ற தீர்ப்பில் பிரதிபலித்தது; அது கூறியது: “பெற்றோர் தாங்கள் உயிர் தியாகிகளாவதற்கு உரிமை கொண்டிருக்கலாம். ஆனால் அதேவிதமான சூழ்நிலைமைகளில் அவர்கள் தாங்களாகவே தெரிவுசெய்யும் முழு சட்டப்படியான பகுத்தறியும் வயதை அடையுமுன், தங்கள் பிள்ளைகளை உயிர் தியாகிகளாகச் செய்யும் உரிமையைக் கொண்டிருக்கிறார்கள் என்று பொருள்படுவதில்லை.” பிள்ளையின் சரீர சுகநலத்திற்கான இதே முக்கியமான அக்கறை இன்றைய குழந்தை நல சட்டங்களிலும் உள்ளடங்கியிருக்கிறது. இந்தச் சட்டங்கள் குழந்தை துர்ப்பிரயோகத்தைக் குறியாகக் கொண்டிருந்தாலும், குழந்தைகளை மருத்துவ கவனிப்பின்மையிலிருந்து பாதுகாப்பதற்காகவும் இவை உருவமைக்கப்பட்டிருக்கின்றன.
15 பெற்றோரால் துர்ப்பிரயோகிக்கப்படுதல் மற்றும் கவனிப்பின்மையிலிருந்து பிள்ளைகளைப் பாதுகாத்தல் கிறிஸ்தவ பெற்றோருக்கு மறுப்புக்கிடமானதாயில்லை. ஆனால் குழந்தை புறக்கணிப்புச் சட்டங்களும், மேலே உயர்நீதிமன்றத்தால் மேற்கோள் காட்டப்பட்ட கூற்றும் பெரும்பாலும் யெகோவாவின் சாட்சிகளின் குழந்தைகளை உட்படுத்தும் வழக்குகளில் தவறாக பொருத்தப்பட்டிருக்கிறது. ஏன்? ஒரு காரணம், சாட்சி பெற்றோருக்கு தங்கள் பிள்ளைகளை “உயிர் தியாகிகளாக்க” வேண்டும் என்ற எந்த உத்தேசமும் இல்லை. அவ்வாறிருந்தால், முதலாவதாக அவர்கள் ஏன் தங்கள் பிள்ளைகளை மருத்துவமனைக்கு கொண்டுசெல்கிறார்கள்? மாறாக, சாட்சி பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு மனப்பூர்வமாக மருத்துவ சிகிச்சையை நாடுகின்றனர். அவர்கள் தங்கள் பிள்ளைகளை நேசிக்கின்றனர்; அவர்கள் நல்லாரோக்கியம் கொண்டிருக்கவேண்டுமென்று விரும்புகின்றனர். ஆனால் தங்களுடைய பிள்ளைகளுக்கு சிறந்த மருத்துவ சிகிச்சை முறையை பொறுப்பாக தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற கடவுளால் கொடுக்கப்பட்ட கடமையைக் கொண்டிருப்பதாக நம்புகிறார்கள். அவர்களுடைய பிள்ளைகளின் சுகநல பிரச்னைகள் இரத்தமின்றி சமாளிக்கப்பட விரும்புகின்றனர். அவ்விதமான இரத்தமற்ற மாற்றுவகை கவனிப்பானது இரத்தத்தைவிட சிறந்ததும் பாதுகாப்பானதும் மட்டுமல்ல, ஆனால் அது தங்கள் பிள்ளைகளை மகத்தான ஜீவனளிப்பவராகிய யெகோவா தேவனின் தயவிலும் வைக்கிறது.
16 இரத்தமற்ற மருத்துவ செயலாற்றுமுறைக்கு பயன்கள் இருந்தபோதிலும், பல மருத்துவர்களும் குழந்தைநல அலுவலர்களும் இரத்தமேற்றும் முறைதான் அடிப்படையான மருத்துவ பழக்கம் என்றும் குறிப்பிட்ட சூழ்நிலைகளில் தேவையானதாகவும் உயிரைப் பாதுகாப்பதாகவும் இருக்கக்கூடுமெனக் கருதுகின்றனர். இவ்வாறாக, சாட்சி பெற்றோர் சிபாரிசு செய்யப்பட்ட இரத்தமேற்றுதல்களை மறுக்கும்போது பிரச்னைகள் எழும்பக்கூடும். பொதுவாக சொன்னால், மருத்துவர்கள் பெற்றோரின் சம்மதமின்றி சட்டப்பூர்வமாக குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கமுடியாது. இரத்தத்தைப் பயன்படுத்த பெற்றோரின் சம்மதம் இல்லாதிருப்பதை மேற்கொள்ள, மருத்துவர்கள் அல்லது மற்ற மருத்துவமனை பணியாளர்கள் ஒரு நீதிமன்ற ஆணையின்வாயிலாக ஒரு நீதிபதியின் சம்மதத்தை நாடுகிறார்கள். அத்தகைய நீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட சம்மதம் குழந்தை-நல அலுவலர்கள் அல்லது மருத்துவர்கள் அல்லது மருத்துவமனை பணியாளர்களால் குழந்தை மருத்துவ கவனிப்பின்மையிலிருந்து பாதுகாப்பதற்காக என்று சொல்லி பெறக்கூடும்.a
17 அநேக முறைகள் இரத்தத்தைப் பயன்படுத்துவதற்கான நீதிமன்ற ஆணைகள் பெற்றோருக்கு குறுகியகால அல்லது எந்த அறிவிப்புமில்லாமல் சீக்கிரமாக பெறப்படுகின்றது. அவ்விதமான துரிதப்படுத்தப்பட்ட ஆணைகளை பெறுவது, பெற்றோருக்கு என்ன நடக்கிறது என்பதைத் தெரியப்படுத்துவதற்கு நேரம் அனுமதிக்காதபடி ஓர் அவசரநிலை மருத்துவத்தில் ஏற்பட்டுவிடுகிறதென உரிமைபாராட்டி மருத்துவர்கள், மருத்துவமனை நிர்வாகத்தார் அல்லது குழந்தை-நல அலுவலர்கள் நியாயநிரூபணம் செய்கின்றனர். என்றபோதிலும், கேள்விகேட்கப்படும்போது, பெரும்பான்மையான மருத்துவர்கள், உண்மையான ஓர் அவசரநிலைமை ஏற்படவில்லை, எதிர்காலத்தில் அவர்களுடைய எண்ணத்தில் இரத்தமேற்றுதல் “ஒருவேளை” தேவைப்படலாம் என்பதற்காக ஒரு நீதிமன்ற ஆணையை கொள்கிறார்கள் என ஒத்துக்கொண்டிருக்கின்றனர். உங்கள் குழந்தையின் இயற்கையான காப்பாளராக இருக்கும் நீங்கள், மருத்துவர்கள், மருத்துவமனை நிர்வாகத்தார் அல்லது குழந்தை-நல அலுவலர்கள் உங்கள் குழந்தையின் சம்பந்தமாக என்ன செய்கிறார்கள் என்பதை எல்லா நேரங்களிலும் தெரிந்து கொள்ளும் உரிமையைக் கொண்டிருக்கிறீர்கள். கூடியவரை, ஒரு நீதிமன்ற ஆணையை பெறுவதற்கான முயற்சிகள் உங்களுக்கு அறிவிக்கப்படவும் வாதத்தில் உங்களுடைய பாகத்தை நீதிமன்றத்தில் வழங்கவும் நீங்கள் அனுமதிக்கப்படுவதையும் சட்டம் தேவைப்படுத்துகிறது.
18 இந்தச் சட்டப்பூர்வ உண்மைகள் ஓர் ஒத்துழைக்கும் மருத்துவரைக் கண்டுபிடிப்பதன் முக்கியத்துவத்தை உயர்த்திக் காட்டுகிறது. அவருடன் உழையுங்கள்; மேலும் மருத்துவமனை தொடர்பு குழு அங்கத்தினரின் உதவியுடன் அவர் உங்கள் குழந்தையின் மருத்துவ பிரச்னைக்கு இரத்தமில்லா செயலாற்றலைத் தொடர உதவுங்கள் அல்லது அத்தகைய சிகிச்சை அளிக்கும் ஒரு மருத்துவர் அல்லது மருத்துவமனைக்கு உங்கள் குழந்தையை இடமாற்றம் செய்யுங்கள். ஆனால் அந்த மருத்துவர், மருத்துவமனை நிர்வாகி அல்லது குழந்தை-நல அலுவலர் ஒரு நீதிமன்ற ஆணையை பெறப்போவதாக குறிப்புகள் தெரிந்தால், இதுதான் திட்டமிடப்படுகிறதா என்பதை கேட்க விழிப்புள்ளவர்களாய் இருங்கள். சிலவேளைகளில் இது இரகசியமாய் தொலைபேசி மூலம் செய்யப்படுகிறது. நீதிமன்றத்திற்கு போவதற்கான ஒரு திட்டமிருந்தால், நீங்களும் உங்களுடைய பாகத்தை நீதிபதியின்முன் வழங்குவதற்காக அதைப்பற்றி உங்களுக்கு தெரிய வேண்டும் என்பதை அழுத்திக் கூறுங்கள். (நீதி. 18:17) சமயமிருந்தால், ஒரு வழக்கறிஞரின் உதவியை நாடுவது பெரும்பாலும் தகுதியானதாக இருக்கும். சில சந்தர்ப்பங்களில் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தால் நியமிக்கப்படுகின்றனர். நீங்கள் உங்கள் தனிப்பட்ட அல்லது நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட வழக்கறிஞரைக் கொண்டிருந்தால், இந்தச் சந்தர்ப்பங்களின் கீழ் மிகச் சிறந்த தற்காப்பைச் சாத்தியமாக்குவதற்காக அவருக்கு உதவும் விஷயங்களை சங்கத்தின் சட்ட இலாகா அவருடன் பகிர்ந்துகொள்ளக்கூடும்.
19 நீங்கள் இரத்தத்தை மறுப்பது நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டால், இரத்தம் உங்கள் பிள்ளையின் உயிரை அல்லது ஆரோக்கியத்தைக் காப்பாற்ற தேவை என்ற மருத்துவரின் கருத்து அதிக தூண்டுதலளிப்பதாய் இருக்கலாம். நீதிபதி, பொதுவாக மருத்துவத் துறையில் பயிற்சி பெறாதவர், பொதுவாக மருத்துவரின் மருத்துவ தொழில் திறன் காரணமாக இணங்கிப்போவார். இது குறிப்பாக, பெற்றோருக்கு வழக்கில் தங்கள் பாகத்தை வழங்குவதற்கு குறைந்த அல்லது எந்த வாய்ப்பும் அளிக்கப்படாதபோது, மருத்துவர் சவாலெதுவுமில்லாமல் இரத்தத்திற்கான “அவசரத்” தேவையைக்குறித்து தன்னுடைய கோரிக்கைகளை வெளிப்படுத்த அனுமதிக்கப்படும்போது உண்மையாக இருக்கிறது. அத்தகைய ஒருபக்க நடவடிக்கைகள் உண்மையை தீர்மானிக்க சாதகமாக இல்லை. உண்மை என்னவெனில், எப்பொழுது மற்றும் ஏன் மருத்துவர்கள் இரத்தம் தேவை என்று நினைக்கிறார்கள் என்பது மிகவும் முரணுக்குரியதும் உறுதியற்றதுமாய் இருக்கிறது. அடிக்கடி, ஒரு மருத்துவர் ஒரு பிள்ளையின் உயிரைக் காக்க இரத்தம் நிச்சயமாக தேவை என்று கூறும்போது, இரத்தமின்றி அதே மருத்துவ பிரச்னையை சமாளிப்பதில் அனுபவமுள்ள மற்றொரு மருத்துவர், அந்த நோயாளிக்கு சிகிச்சையளிக்க இரத்தம் தேவையில்லை என்று கூறுவார்.
20 ஒரு வழக்கறிஞர் அல்லது ஒரு நீதிபதி, உங்களுடைய பிள்ளைக்கு ஏன் “உயிர்காக்கும்” இரத்தமேற்றுதலை மறுக்கிறீர்கள் என்று கேட்டால் என்ன செய்வீர்கள்? முதலாவதாக உங்களுக்கிருக்கும் உயிர்த்தெழுதல் நம்பிக்கையையும் அவன் மரித்தாலும் கடவுள் உங்கள் பிள்ளையைத் திரும்பக் கொண்டுவருவார் என்பதன்பேரிலுள்ள பலமான விசுவாசத்தையும் விவரிப்பதற்கான மனச்சாய்வை நீங்கள் கொண்டிருந்தாலும் அத்தகைய பதில், பிள்ளையின் சரீர நலனை பிரதான அக்கறையாகக் கொண்டிருக்கும் நீதிபதி உங்களை ஒரு மதவெறியர் என்றும் அதனால் பிள்ளையைப் பாதுகாக்க அவர் முயற்சி எடுக்கவேண்டும் என்றும் நினைக்கவே செய்யும்.
21 நீதிமன்றத்திற்குத் தெரிய வேண்டியதென்னவென்றால், ஆழ்ந்த மதசார்பான காரணங்களுக்காக இரத்தத்தை மறுக்கிறீர்கள், என்றாலும் மருத்துவ கவனிப்பை நீங்கள் மறுக்கவில்லை என்பதாகும். நீங்கள் புறக்கணிக்கும் துர்ப்பிரயோகிக்கும் பெற்றோரல்ல, ஆனால் மாறாக, பிள்ளைக்கு சிகிச்சையளிக்கப்பட விரும்பும் அன்பான பெற்றோர் என்பதை நீதிபதி காணவேண்டும். குறிப்பாக, இதே அபாய விளைவுகளைக் கொண்டில்லாத மாற்றுவகை மருத்துவ முறைகள் இருக்கும்போது, இரத்தத்தின் பயன்களாக சொல்லப்பட்டவை அதன் சாத்தியமான அபாயகரமான விளைவுகளையும் சிக்கல்களையும்விட மேம்பட்டவை என்பதை நீங்கள் வெறுமென ஒத்துக்கொள்வதில்லை.
22 இரத்தம் தேவை என்பது ஒரு மருத்துவரின் கருத்து, ஆனால் மருத்துவர்கள் தங்களுடைய அணுகுமுறையில் வித்தியாசப்படுகின்றனர், ஆகவே பரவலாயுள்ள இரத்தமின்றி செயலாற்றும் முறைகளைக்கொண்டு உங்கள் பிள்ளையை கவனிக்கக்கூடிய ஒரு மருத்துவரைக் கண்டுபிடிக்கும் வாய்ப்பை நீங்கள் விரும்புகிறீர்கள் என்பதை சூழ்நிலையைப் பொருத்து அந்த நீதிபதியிடம் தெரியப்படுத்தலாம். இரத்தமின்றி உங்கள் பிள்ளைக்கு சிகிச்சையளித்து, ஒருவேளை தொலைபேசி மூலம் ஒரு பிரயோஜனமுள்ள உறுதிமொழியைக் கொடுக்கக்கூடிய ஒரு மருத்துவரை, மருத்துவ தொடர்பு குழுவின் உதவியால் ஏற்கெனவே நீங்கள் கண்டுபிடித்திருக்கலாம். பெரும்பாலும், தொடர்பு குழுவானது நீதிபதியோடும்—நீதிமன்ற ஆணைக்காக கேட்கும் மருத்துவரோடும்கூட—உங்கள் பிள்ளையின் பிரச்னையை இரத்தமின்றி திறம்பட சமாளிப்பது எவ்வாறு என்பதைக் காண்பிக்கும் மருத்துவக் கட்டுரைகளைப் பகிர்ந்துகொள்ளக்கூடும்.
23 நீதிபதிகள் வழக்காணைகளை அவசரமாக பிறப்பிக்கும்படி கேட்கப்படும்போது, அவர்கள் அடிக்கடி, எய்ட்ஸ், கல்லீரல் வீக்கம் இவை உட்பட மற்றும் அநேக அபாய விளைவுகளைக்குறித்து சிந்திக்க அல்லது நினைவுபடுத்திக் கொண்டிருக்கவில்லை. இவற்றை நீங்கள் நீதிபதிக்கு சுட்டிக்காட்டலாம்; மேலும் நீங்கள் ஒரு கிறிஸ்தவ பெற்றோராக, உயிரைத் தொடர்ந்திருக்கச் செய்வதற்காக மற்றொருவருடைய இரத்தத்தைப் பயன்படுத்தப்படுவதை கடவுளுடைய சட்டத்தின் ஒரு கடுமையான மீறுதலாகவும் உங்கள் பிள்ளையின்மேல் இரத்தத்தை வற்புறுத்துதல் கற்பழிப்பிற்கு சமானமாக கருதப்படும் என்றும் அவரிடம் தெரியப்படுத்தலாம். நீங்களும் உங்கள் பிள்ளையும் (தன் சொந்த நம்பிக்கைகளைக் கொண்டிருப்பதற்கான வயதுடையவராய் இருந்தால்) அத்தகைய சரீர ஆக்ரமிப்பிற்கான உங்கள் வெறுப்பை விவரித்து, நீதிபதி ஓர் ஆணையைப் பிறப்பிக்காமல் இருப்பதற்காகவும், உங்கள் பிள்ளைக்கு மாற்றுவகை மருத்துவ செயலாற்றலைத் தொடரும்படி அனுமதிக்குமாறு வேண்டுகோள் விடுக்கலாம்.
24 சரியான தற்காப்பு செய்யப்பட்டால், நீதிபதிகளால் அடுத்த பக்கத்தை, பெற்றோராக—உங்கள் பக்கத்தை, தெளிவாக காணமுடிகிறது. அப்போது அவர்கள் ஓர் இரத்தமேற்றுதலுக்கு அதிகாரமளிக்க அத்தனை வேகமாக செயல்படுகிறதில்லை. சில சம்பவங்களில், மாற்றுவகை முறைகளை முதலாவதாக கருதும்படி அல்லது இரத்தமின்றி சிகிச்சையளிக்கும் மருத்துவர்களைக் கண்டுபிடிக்கும் வாய்ப்பை பெற்றோருக்கு அளிக்கும்படியும்கூட கூறி, இரத்தத்தை பயன்படுத்துவதற்கான மருத்துவரின் சுதந்திரத்தை நீதிபதிகள் கடுமையாக கட்டுப்படுத்தியிருக்கின்றனர்.
25 இரத்தமேற்றுதலை வற்புறுத்துவோரை சமாளிக்கையில், நம்முடைய நம்பிக்கையில் எவ்வித தடுமாற்றத்தையும் காட்டாமல் இருக்கவேண்டியது அவசியமாயிருக்கிறது. அவர்களுடைய மனச்சாட்சியோடு வாழ்வதை இது எளிதாக்கும் என்பதாக நினைத்து, சிலநேரங்களில், இரத்தமேற்றுதலுக்கான தீர்மானத்தை செய்யும் உத்தரவாதத்தை தங்களிடம் “மாற்றீடு” செய்வதில் பெற்றோருக்கு ஏதாவது கஷ்டம் இருக்குமா என நீதிபதிகள் (மற்றும் மருத்துவர்கள்) கேட்கிறார்கள். ஆனால், பெற்றோராக நீங்கள் இரத்தமேற்றுதலைத் தவிர்க்க உங்களால் முடிந்த எல்லாவற்றையும் தொடர்ந்து செய்ய கடமையுள்ளவர்களாய் இருக்கிறீர்கள் என்பது சம்பந்தப்பட்ட எல்லாருக்கும் தெளிவாக்கப்பட்டிருக்க வேண்டும். இது உங்களுடைய கடவுளால் கொடுக்கப்பட்டுள்ள உத்தரவாதம். இது மாற்றீடு செய்யத்தக்கதல்ல.
26 எனவே, நீங்கள் மருத்துவர்களோடும் நீதிபதிகளோடும் பேசும்போது, உங்களுடைய நிலைநிற்கையை தெளிவாக மேலும் ஏற்கத்தகுந்த விதத்தில் எடுத்துக்கூற தயாராயிருங்கள். உங்களுடைய சிறந்த முயற்சிகள் மத்தியிலும் ஒரு நீதிமன்ற ஆணை வழங்கப்பட்டாலும், தொடர்ந்து அந்த மருத்துவரை இரத்தமேற்றாதிருக்கவேண்டும் என்று மன்றாடி, மாற்றுவகை சிகிச்சைக்காக வருந்திக் கேளுங்கள். மருத்துவக் கட்டுரைகளை மற்றும் இரத்தத்தை தவிர்ப்பதன் சம்பந்தமான மருத்துவப் பிரச்னையைக் குறித்து கலந்தாலோசிக்க சம்மதிக்கும் மருத்துவர்களின் ஆலோசனைகளையும் கருதுவதற்கான அவருடைய விருப்பார்வத்தைத் தொடர்ந்து நாடுங்கள். ஒன்றிற்கும் மேற்பட்ட சமயங்களில், இணங்காதவர்போல் காட்சியளித்த ஒரு மருத்துவர், அறுவை சிகிச்சை அறையிலிருந்து வெளியே வந்து பெருமையாக அவர் இரத்தத்தை பயன்படுத்தவில்லை என்று அறிவித்திருக்கிறார். ஆகவே, ஒரு நீதிமன்ற ஆணை பிறப்பிக்கப்பட்ட பின்னர்கூட, ஒருபோதும் விட்டுக்கொடுக்காதீர்!—ஜூன் 15, 1991, தி உவாட்ச்டவர் பிரதியில், “வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்”-ஐ பார்க்கவும்.
27 இயேசு சொன்னதை நினைவில் வையுங்கள்: “மனுஷரைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்; அவர்கள் உங்களை ஆலோசனை சங்கங்களுக்கு ஒப்புக்கொடுத்து, . . . அவர்களுக்கும் புறஜாதியாருக்கும் சாட்சியாக என்னிமித்தம் அதிபதிகளுக்கு முன்பாகவும், ராஜாக்களுக்கு முன்பாகவும் கொண்டுபோகப்படுவீர்கள்.” அவ்வித சூழ்நிலைமைகளின் கீழ் நம்முடைய ஆறுதலுக்காக, அம்மாதிரியான நேரங்களில் சொல்வதற்கு தகுதியான மேலும் பிரயோஜனமானவற்றை நம் ஞாபகத்திற்குக் கொண்டுவர பரிசுத்த ஆவி உதவி செய்யும் என்பதாகவும் இயேசு மேலும் கூறினார்.—மத். 10:16-20.
28 “விவேகத்துடன் காரியத்தை நடப்பிக்கிறவன் நன்மைபெறுவான்; கர்த்தரை நம்புகிறவன் பாக்கியவான்.” (நீதி. 16:20) பெற்றோர்களே, ஆவிக்குரிய விதத்தில் கறைப்படுத்தக்கூடிய இரத்தமேற்றுதலிலிருந்து உங்கள் பிள்ளையை பாதுகாக்க தேவையான தயாரிப்புகளை முன்னதாகவே செய்யுங்கள். (நீதி. 22:3) பிள்ளைகளே, உங்களுடைய பெற்றோர் இந்தத் தயாரிப்புகளைச் செய்வதற்காக அளிக்கும் பயிற்றுவிப்பிற்குத் தக்கவாறு பிரதிபலித்து, அவற்றை உங்கள் இருதயத்தில் பொருத்தியமையுங்கள். ஒரு குடும்பமாக, “இரத்தத்தைமாத்திரம் புசிக்காதபடி எச்சரிக்கையாயிரு . . . நன்றாயிருக்கும்படி நீ அதைச் சாப்பிடலாகாது,” ஏனென்றால் யெகோவாவின் ஆசீர்வாதத்தையும் அங்கீகாரத்தின் புன்முறுவலையும் கொண்டிருப்போம்.—உபா. 12:23-25.
[அடிக்குறிப்புகள்]
a மருத்துவரின் அபிப்பிராயத்தின்படி, அப்போதைய அவசர நிலைமைக்கு உடனடியான கவனம் தேவைப்படுவதாக இருந்தால் மட்டுமே குழந்தையின் உயிருக்கு அல்லது ஆரோக்கியத்திற்கு தேவையானதாக எண்ணப்படும் சிகிச்சைகள் (இரத்தமேற்றுதல் உட்பட) சட்டப்படி பெற்றோர் அல்லது நீதிபதியின் சம்மதமின்றி கொடுக்கப்படலாம். சந்தேகமின்றி, ஒரு மருத்துவர் சட்டத்தின் இந்த அவசர நிலை செயலாற்றலின்பேரில் சார்ந்திருக்கையில் அவர் கணக்கொப்புவிக்கவேண்டியவராய் இருக்கிறார்.