தொடர்ந்த விஸ்தரிப்பு ராஜ்ய மன்றங்களுக்கான தேவையை அதிகரிக்கிறது
1 ‘சகல ஜாதிகளாலும் விரும்பப்பட்டவர்கள் வருவார்கள்,’ என்பதாக வெகுநாட்களுக்கு முன்பே யெகோவாவின் தீர்க்கதரிசி முன்னறிவித்தார். (ஆகா. 2:7) சத்தியத்தைக் கற்றுக்கொள்ளவும் யெகோவாவின் வணக்கத்தாராய் ஆகவும் திரளான ஜனங்களுக்கு எவ்வாறு தெய்வீக போதனை உதவிசெய்கிறது என்பதற்கான அத்தாட்சியை நிச்சயமாகவே நாம் பார்க்கிறோம். 1994 ஊழிய ஆண்டில் இந்தியாவில் மட்டுமே 1,312 பேர் முழுக்காட்டப்பட்டார்கள் என்பதைக் காண்பது எவ்வளவு கிளர்ச்சியூட்டுவதாய் இருக்கிறது! இந்தப் புதியவர்கள் அனைவருக்கும் தொடர்ந்து உதவிசெய்வதற்காக, நாம் முடிந்தளவு முழுமையாக கடவுளுடைய வேலையை ஆதரித்துவருகிறோம் என்பதை நிச்சயப்படுத்திக்கொள்ள ‘நம்முடைய இருதயங்களை நம் வழிகளில் ஊன்றவைக்க’ வேண்டும். (ஆகாய் 1:5-ஐ ஒத்துப்பாருங்கள்.) ஆம், புதிதாக யெகோவாவை துதிக்கும் திரளான ஆட்களுக்காக வழிபாட்டிற்கான தகுந்த மன்றங்களைக் கொடுப்பதற்கு உதவிசெய்வதே நாம் கடவுளுடைய வேலையை ஆதரிப்பதில் ஓர் முக்கியமான பாகமாகத் தொடர்ந்திருக்கிறது.
2 1994-ம் ஆண்டின்போது, புதிய ராஜ்ய மன்றங்கள் சில பிரதிஷ்டை செய்யப்பட்டன, இன்னும் அதிகமானவை கட்டப்படும் நிலையில் இருக்கின்றன. யெகோவாவின் வேலை உண்மையிலேயே “மலைகளுக்கு மேலாய்” உயர்த்தப்படுகிறது. (ஏசா. 2:2) 52 சபைகள் புதிய ராஜ்ய மன்ற கட்டடங்களை வாங்குவதற்கு சொஸையிட்டி சாத்தியமாக்கியிருக்கிறது. சபைகளுக்குக் கொடுக்கப்பட்ட பண உதவி திரும்ப செலுத்தப்பட்டு வருகிறது, இதனால் அதிகமான சபைகள் புதிய ராஜ்ய மன்றங்களைக் கட்டுவதற்கு உதவியளிக்கப்படுகின்றன. ஆகவே, ராஜ்ய மன்ற பணவுதவியால் உதவியளிக்கப்பட்டிருக்கிற சபைகள், ஒவ்வொரு மாத ஆரம்பித்திலும் அதை உடனடியாக உண்மையுடன் திரும்பச் செலுத்துவதன்மூலம் தங்களுடைய போற்றுதலைக் காண்பிக்கின்றன. அதிக ஊக்கமளிக்கும் மற்றொரு முன்னேற்றமானது, பிரதிஷ்டை செய்யப்பட்ட சில ராஜ்ய மன்றங்கள் முழுவதுமாக சபையினராலேயே நிதியுதவியளிக்கப்பட்டன என்ற உண்மையாகும். இந்தச் சபைகளில் சில பொருள்சம்பந்தமாக செழிப்பானவை அல்ல என்பது கவனிக்கத்தக்கதாகும், ஆனால் உண்மை வணக்கம் தங்களுடைய சமுதாயத்தில் உயர்த்தப்படுவதைக் காண்பதற்கு அவர்கள் தீர்மானமுள்ளவர்களாய் இருந்தார்கள்.
3 பார்வையாளர் மனங்கவரப்படுகின்றனர்: இராஜ்ய மன்ற கட்டுமான திட்டங்களில் வேலைசெய்யும் சகோதரர்களின்மீது யெகோவாவினுடைய பரிசுத்த ஆவியின் தெளிவான செயல்பாடு மற்றவர்களுக்குச் சாட்சியாக சேவித்திருக்கிறது. உலகப்பிரகாரமான ஒரு பெண், நாட்டிலுள்ள சண்டையின் மத்தியிலும் யெகோவாவின் சாட்சிகளுடைய சாதனைகளுக்கான அவருடைய போற்றுதலைத் தெரியப்படுத்த உள்ளூர் வானொலி நிலையத்தினரை அழைக்குமளவுக்கு, ஜோஹன்ஸ்பர்க்கில் உள்ள வாஸ்லூரஸில் துரிதமாக கட்டப்பட்ட ராஜ்ய மன்றத்தின்மீதான விளைவுகளினால் மனங்கவரப்பட்டார். மற்றொரு உதாரணத்தில், வடக்கத்திய டிரான்ஸ்வாலைச் சேர்ந்த மூப்பர் குழு இவ்வாறு எழுதியது: “இந்த மன்றத்தைக் கட்டியது பார்வையாளர்கள்மீது நேரடியான பாதிப்பை கொண்டிருக்கிறது. பயணிகள் பார்த்த காரியம் சம்பவித்தது உண்மைதான் என்பதை உறுதிப்படுத்த பேருந்துகள், டாக்ஸிகள், கார்கள் ஆகியவை நிற்கும். ஒரு வியாபாரி இவ்வாறு சொன்னார்: ‘மதிப்புக்குரியவர்களே, பைபிளிலிருந்து நான் படித்த அன்பையும் ஐக்கியத்தையும் நீங்கள் இப்பொழுது வெளிப்படையாக காண்பிக்கிறீர்கள். மெய்க் கிறிஸ்தவத்தைப் பிரதிபலிக்கும் உண்மையான ஒரே தொகுதியினர் நீங்களே.’ . . . கிராமத் தலைவர் சொன்னார்: ‘இந்த வேலை சாதிக்கப்பட்ட ஊக்கத்தை நான் மெச்சுகிறேன். . . . உண்மையிலேயே, உங்களைப்போல அரசியல்வாதிகள் வேலைசெய்தார்களென்றால், நாம் இன்று காண்கிற கொலைகள் இருக்காது. ஆகவே, உங்களுக்கு எந்த நேரம் பொருத்தமாயிருக்கிறதோ அந்த நேரத்தில் செயல்படுவதற்கும் கூட்டங்களை நடத்துவதற்கும் உங்களுடைய மதத்திற்கு அனுமதியளிக்கப்படுகிறது என்பதை நான் உறுதிப்படுத்த விரும்புகிறேன். எந்தத் தடையும் இல்லை.’”
4 “பல்வேறுபட்ட இனத் தொகுதிகளிலிருந்து வந்திருந்த 300-க்கும் மேற்பட்ட வாலண்டியர் வேலையாட்கள் மலுஷியில் செய்யப்பட்ட குறிப்பிடத்தக்க ஒரு கட்டுமானத் திட்டத்தில் பங்குகொள்கையில், ஒரு பார்வையாளருடைய குறிப்பானது ‘நம்பவே முடியவில்லை!’” என்பதே, என உள்ளூர் செய்தித்தாள் அறிக்கைசெய்தது. மற்றொரு பகுதியிலுள்ள சபை ஊழியக் குழு இவ்வாறு எழுதியது: “ராஜ்ய மன்றம் இரண்டே நாட்களில் கட்டப்படுவதை உள்ளூர் மக்கள் பார்த்தபோது மிகவும் ஆச்சரியப்பட்டார்கள். நாங்கள் பயன்படுத்தியது உண்மையான செங்கற்களா என்பதை அறிந்துகொள்வதற்கு அவர்கள் அங்கு வந்தார்கள். சிலர் தாங்கள் எதைப் பார்த்துக்கொண்டிருந்தார்களோ அதன் விளைவாக ஒரு பைபிள் படிப்புக்காக கேட்க வந்தார்கள்.”
5 அதிகமான வாலண்டியர்கள் தேவைப்படுகின்றனர்: கட்டடக் குழுவினர் புதிய அல்லது புதுப்பிக்கப்பட்ட ராஜ்ய மன்றத்தில் கூடும் சபையிலேயே கிடைக்கக்கூடிய திறமையானவர்களைப் பயன்படுத்திக்கொள்ள முயலுகிறார்கள். மேலும் கைவசமுள்ள வேலைகளைச் செய்துமுடிப்பதில் மற்ற உள்ளூர் மூப்பர்களையும் உதவி ஊழியர்களையும் பயிற்றுவிப்பதற்கு, குழுவானது அவர்களோடு வேலைசெய்கிறது. இராஜ்ய மன்ற கட்டுமானத்தில் பயனுள்ளதாக இருக்கும் தேவையான திறமைகளை அபிவிருத்தி செய்த பிறகு, ஆவிக்குரிய விதமாக முதிர்ச்சியுள்ள இந்தச் சகோதரர்கள், அந்தப் பகுதியிலேயே திட்டமிடப்படுகிற மற்ற ராஜ்ய மன்ற திட்டங்களில் உதவிசெய்யலாம். ஆகவே, ராஜ்ய மன்ற கட்டுமானத் திட்டத்தில் ஈடுபட்டுள்ள சபைகளுடன் தொடர்புகொண்டுள்ளவர்கள், கட்டட குழுவும் அதோடு வேலைசெய்கிறவர்களும் தங்களுடைய ராஜ்ய மன்றத்திலுள்ள எல்லா வேலைகளையும் கவனித்துக்கொள்வார்கள் என்று எதிர்பார்க்காமல், மனமுவந்து செய்கிற, ஒத்துழைக்கிற மனப்பான்மையை வெளிப்படுத்திக் காட்டுவது அவசியம். (நெ. 4:6ஆ) பயிற்சியைப் பெற்றுக்கொண்ட பிறகு, புதிய அல்லது முன்னேற்றுவிக்கப்பட்ட வசதிகளுக்காக அவசரத் தேவையைக் கொண்டிருக்கிற மற்ற சபைகளுக்காகவும் ராஜ்ய மன்றங்களைக் கட்ட உதவிசெய்வதற்கு சகோதரர்கள் அன்பால் தூண்டுவிக்கப்பட வேண்டும். (நெ. 5:19; பிலி. 2:3, 4) தகுதிவாய்ந்த திறமைகளுள்ள முழுக்காட்டப்பட்ட பிரஸ்தாபிகளும் சபையில் நல்ல நிலைநிற்கையிலுள்ளவர்களும் இந்தப் பிரமாண்டமான வேலை நியமனத்துடன் உதவ மனமுவந்து சேவைசெய்வதற்கு உற்சாகப்படுத்தப்படுகிறார்கள்.
6 வாலண்டியர் உதவி போற்றப்படுகிறது: இராஜ்ய மன்ற கட்டுமானத் திட்டத்தில் ஈடுபடுகிறவர்களாக ஆகும்வரை, இப்படிப்பட்ட ஒரு திட்டத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு அது எவ்வளவு பெரிய வேலையாக இருக்கிறது என்பதை அநேகர் உணருவதில்லை. இராஜ்ய மன்ற திட்டம் ஒன்று முடிந்த பிறகு, அந்த மூப்பர்கள் எழுதினர்: “கட்டடக் குழுவிலுள்ள சகோதரர்களிடமிருந்து பெற்ற அந்தப் பொறுமையான வழிநடத்துதல் எங்களுக்கு மிகப் பெரிய ஆசீர்வாதமாக இருந்தது . . . அந்தத் திட்டத்தின் காலப்பகுதி முழுவதிலும், எண்ணுவதற்கு எண்ணிலடங்கா அளவுக்கு சந்தர்ப்பங்கள் இருந்தன—சகோதரர்கள் தொலைதூர இடங்களிலிருந்து பயணம் செய்தது, அதிக மணிநேரங்கள் செலவழித்தது, தங்களுடைய சாதனங்கள் மற்றும் கருவிகளை பயன்படுத்தும்படி அளித்தது, பொருட்களையும்கூட நன்கொடையாக கொடுத்தது—இவையனைத்தும் நம்முடைய புதிய ராஜ்ய மன்ற கட்டுமானத்தில் நமக்கு உதவிசெய்வதற்காகும். இப்படிப்பட்ட சகோதரர்களின் தாராள குணம் ‘சகோதரர்களின் முழு கூட்டுறவிலும் அன்புகொண்டிருக்கிறார்கள்’ என்பதற்கு மகத்தான வெளிக்காட்டாக இருக்கிறது. நமக்கும் அது என்னே ஓர் உற்சாகமூட்டுதலாக இருந்திருக்கிறது!—1 பே. 2:17, NW.”
7 மனமுவந்து செய்யும் மனப்பான்மையும் சகோதரர்களின் ஆர்வமும் தெளிவாக காணப்படுகிறது. ஒரு சபை இவ்வாறு எழுதியபடி: “கவனித்துக்கொண்டிருக்கிற எல்லாரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் அளவுக்கு மிகவும் கடினமாக வேலைசெய்த மனப்பூர்வமான சகோதர சகோதரிகளுக்கு நன்றி.” நிஜமாகவே, சங்கீதம் 133:1, 3-ன் வார்த்தைகள் உண்மையாக இருக்கின்றன: “இதோ, சகோதரர் ஒருமித்து வாசம்பண்ணுகிறது எத்தனை நன்மையும் எத்தனை இன்பமுமானது?” இராஜ்ய மன்ற கட்டுமான வேலையாட்கள் சிலர், சபையின் அருகிலுள்ள ராஜ்ய மன்ற திட்டத்திற்கு உதவிசெய்வதற்காக வேலையிலிருந்து விடுப்பு எடுக்கிறார்கள். அதற்குப் பிரதிபலிக்கும் விதத்தில், மன்றம் கட்டுகிற சபையைச் சேர்ந்த அங்கத்தினர்கள் திட்டத்திற்கு தங்களுடைய முழு ஆதரவையும் கொடுப்பதன் மூலம் உண்மையான போற்றுதலைக் காட்டுகிறார்கள். குழுவோடு வேலைசெய்கிற ஒரு மூப்பர், தன்னுடைய சகோதரர்களுக்கு உதவிசெய்வது ஓர் சிலாக்கியம் என்பதை தெரிவித்து எழுதினார். அவர் சொன்னார், “யெகோவாவுக்கான தங்களுடைய ஒப்புக்கொடுத்தலை . . . நிறைவேற்றுவதில் அவர்களுக்கு உதவிசெய்வதற்கு நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் பயணம்செய்கிற சகோதரர்களால் சபைகள் மிகவும் உற்சாகப்படுத்தப்படுகின்றன. உண்மையில், நாம் அன்பான சகோதரத்துவத்தை உண்டுபண்ணுகிறோம்!” ஒரு சகோதரி தன்னுடைய உணர்ச்சிகளை இவ்வாறு விளக்கினார்கள்: “இராஜ்ய மன்ற கட்டட இடத்தில் நான் அனுபவித்த சந்தோஷத்திற்கான என்னுடைய நன்றியை வெளிப்படுத்துவதிலிருந்து என்னை நான் கட்டுப்படுத்த முடியாது. இது, கட்டுவதில் நான் இப்பொழுது பங்குகொள்ளும் மூன்றாவது மன்றமாகும்.”
8 ஒரு சபை தங்களுடைய திட்டத்தை முடித்தப் பிறகு (இராஜ்ய மன்ற கட்டுமானப் பணிகள் அதிகம் இருப்பதால் உதவிக்காக பெரிய கிளை அலுவலகங்களில் உள்ளூர் கட்டக்குழுக்கள் உருவாக்கப்படுகின்றன. எனினும், இப்படிப்பட்ட குழுக்கள் இந்தியாவில் இதுவரை உருவாக்கப்படவில்லை) பின்வருவனவற்றை தங்களுடைய உள்ளூர் கட்டடக் குழுவினருக்கு எழுதிய கடிதம் ஒன்றில் சொன்னது: “உங்களுக்கு மிக்க நன்றி தெரிவிக்க இந்தக் கடிதத்தை நாங்கள் எழுதுகிறோம்! எங்களுக்காக வந்து ஒரு மன்றத்தைக் கட்டுவதற்காக உங்களுடைய சபைக் கூட்டங்களை, உங்களுடைய தூக்கத்தை, உங்களுடைய குடும்பத்தினரோடு சேர்ந்திருக்கும் இன்பத்தை, உங்களுடைய பொழுதுபோக்கை, உங்களுடைய வெளி ஊழியத்தை, மேலும் இன்னும் பலவற்றை நீங்கள் தவறவிட்டீர்கள். நீங்கள் எங்களுக்காக செய்திருக்கிற காரியத்திற்கு நாங்கள் தகுதியானவர்களேயல்ல. உங்களைப்போன்ற நல்ல, அர்ப்பணித்த மனிதர்களோடு கூட்டுறவுகொள்வதைக் குறித்து நாங்கள் பெருமைப்படுகிறோம், கெளரவிக்கப்பட்டவர்களாக உணருகிறோம். காற்றையும் வெப்பத்தையும் குளிரையும் எதிர்த்து, எப்பொழுதும் சிரித்த முகத்தோடுகூட உங்களுடன் சேர்ந்து குறைவில்லாமல் வேலைசெய்த உங்களுடைய குடும்பத்தினருக்கும் நாங்கள் நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மீண்டும் உங்களுக்கு மிக்க நன்றி. ‘நன்மையுண்டாக யெகோவா உங்களை நினைத்தருளுவாராக.’—நெ. 13:31, NW.”
9 இராஜ்ய மன்ற பாதுகாப்பு: இராஜ்ய மன்றங்களில் திருட்டுப்போவதில் படிப்படியான அதிகரிப்பு இருந்திருக்கிறது. பெரும்பாலான சந்தர்ப்பங்களில், ஒலிபெருக்கி கருவிகள் திருடப்பட்டிருக்கின்றன. இந்தப் பிரச்சினையைக் கட்டுப்படுத்துவதில் பின்வரும் ஆலோசனைகள் ஓரளவிற்கு உதவிசெய்யும்: (1) விலையுயர்ந்த அனைத்து ஒலிபெருக்கி சாதனங்களையும் (கடைகளில் கிடைக்கிற) ஓர் உறுதியான இரும்பு பெட்டியில் வைத்து, அதிலுள்ளவற்றைப் பாதுகாப்பதற்கு நல்ல பூட்டு பயன்படுத்தப்படுவதை நிச்சயப்படுத்திக்கொள்ளுங்கள்; (2) அந்தப் பெட்டியை நிறுத்தி, தரை அல்லது சுவற்றில் போல்ட் போட்டுவிடுங்கள், பார்வையில் படாமலிருப்பது விரும்பத்தக்கது; (3) அனைத்து பொருட்களிலும் சபையின் பெயரை பதித்துவிடுங்கள், இதனால் திருடப்பட்ட பொருட்களை அடையாளங்கண்டு கொள்ளவும் திருப்பித்தரவும் போலீஸாருக்கு உதவும்.
10 சில சபைகள் பாதுகாப்பு நோக்கங்களுக்காக ராஜ்ய மன்றத்துடன் ஓர் அறையை சேர்த்திருக்கிறார்கள். இந்தக் காரியத்தில், சபையானது ஒரு தொலைபேசியை ஏற்பாடு செய்து அதை அவர்களுடைய பெயரில் பதிவுசெய்யும்படி நாங்கள் சிபாரிசு செய்கிறோம். எதிர்பாரா சம்பவம் ஏற்படும்பட்சத்தில் கவனித்துக்கொள்பவர் உதவிக்காக அழைக்க முடியும். கவனித்துக்கொள்பவர் தனிப்பட்ட விதமாக செய்கிற ஃபோன்களுக்குப் பணம்செலுத்துவது அவருடைய பொறுப்பாகும். அதோடுகூட, வாடகை, குடியிருக்கும் எல்லைகள், வேலைகள், குடியிருப்பை ரத்துசெய்வதற்காக தேவைப்படுகிற அறிவிப்பு ஆகியவற்றை குறிப்பிட்டு, மூப்பர் குழுவினர் கவனித்துக்கொள்பவரிடமிருந்து ஒரு எளிய எழுத்து வாக்குமூலத்தை வாங்குவது அவசியம்.
11 பண நன்கொடைகள் தொடர்ந்து உதவிவருகின்றன: சொஸையிட்டிக்கு அளிக்கப்பட்ட தாராள நன்கொடைகள் கடந்த காலத்தில் சபைகளுக்கு உதவியிருந்திருக்கின்றன, எதிர்காலத்திலும் அவ்வாறே உதவும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. தன்னலமின்றி அள்ளி கொடுப்பதில் யெகோவா தேவன்தாமே முன்மாதிரி வைக்கவில்லையா? (யாக். 1:17) கொடுப்பதற்கான நம்முடைய திறமைகளும் வாய்ப்புகளும் வித்தியாசப்படுகின்றன என்பது உண்மையே. இருப்பினும், தனிப்பட்டவிதத்தில் நாம் செய்யும் செலவுகளில் சிறிது மாற்றங்களை ஏற்படுத்துவதன்மூலம் கட்டுமான வேலையை ஆதரிப்பதில் நம்முடைய முழு பங்கை வகிக்கமுடியும் என்பதை நாம் காணலாம். அத்தகைய தாராள மனப்பான்மை நிச்சயமாக யெகோவாவின் இருதயத்திற்கு சந்தோஷத்தைக் கொண்டுவருவதாயும் நம்முடைய சகோதரர்களுக்குப் பேரளவு ஊக்கமளிப்பதாயுமிருக்கிறது.
12 இன்று ராஜ்ய செய்திக்கு ‘திரள் கூட்டத்தினர்’ அதிகமதிகமாக பிரதிபலிக்கின்றனர். ‘விரும்பப்பட்டவர்கள்’ யெகோவாவின் ஆவிக்குரிய ஆலயத்திற்குள் திரண்டவண்ணம் இருக்கின்றனர். அவரும் தம்முடைய “ஆலயத்தை மகிமையினால் நிறையப்பண்ணு”கிறார். (வெளி. 7:9; ஆகா. 2:7) ஆகாயின் நாளில் இருந்த உண்மைத்தன்மையுள்ள யூதர்களைப் போலவே, நாமும் கூடுதல் ராஜ்ய மன்றங்களுக்கான அவசர தேவையைப் பூர்த்திசெய்வதை முழுமையாக ஆதரித்து, நம் இருதயங்களை கடவுளின் வேலையில் ஊன்றியிருக்கச் செய்வோமாக. சமீப ஆண்டுகளில் அழகிய ராஜ்ய மன்றங்கள் பல கட்டப்பட்டிருந்தபோதிலும், வளர்ச்சி அதிகரித்த வேகத்தில் தொடர்ந்திருக்கிறது. அதுமட்டுமின்றி அநேக சபைகள் இன்னும் மோசமான நிலைகளில் கூட்டங்களை நடத்திவருகின்றன. கடவுளுடைய வேலைக்கு நம்மால் முடிந்த அதிகபட்ச அளவு ஆதரவைத் தொடர்ந்து தருவதானது, நம்மிடம் அவர் ஒப்படைத்துள்ள வேலையில் பங்குகொள்வதற்கான மிகச் சிறந்த வழியாக இருக்கிறது.
[பக்கம் 6-ன் பெட்டி]
ஒரு ராஜ்ய மன்றத்தை எவ்வாறு வாங்குவது
இந்த ஆரம்ப படிகளை ஒன்றன்பின் ஒன்றாக பின்பற்றுங்கள்:
உங்களுடைய வட்டாரக் கண்காணியைச் சந்தியுங்கள்
திட்டத்தின் சம்பந்தமான முக்கிய விஷயங்களைக் கலந்துபேசுங்கள்.
ட்ரஸ்ட் ஒன்றை நிறுவுங்கள்
ஒரு தீர்மானம் போட்டு ட்ரஸ்ட் உறுப்பினர்களை நியமிப்பதன்மூலம் ஒரு ட்ரஸ்ட்டை நிறுவுங்கள். விதிமுறைகளின் மாதிரிக்காக சொஸையிட்டிக்கு எழுதுங்கள். சொஸையிட்டியிடமிருந்து நமூனாக்களைக் கேட்டுப் பெறுங்கள். சட்டப்பூர்வமாக ட்ரஸ்ட்டை பதிவுசெய்யுங்கள். ட்ரஸ்டின் பெயரில் கட்டட நிதிக்காக ஒரு சேமிப்புக் கணக்கை ஆரம்பியுங்கள்.
கட்டட குழு ஒன்றை நியமியுங்கள்
மூன்று அல்லது நான்கு மூப்பர்கள் அடங்கிய ஒரு கட்டட குழு. வியாபாரம்/கட்டட அனுபவமிருந்தால் விரும்பத்தக்கது.
பெரும்பாலான பிரஸ்தாபிகளுக்கு மையமாக இருக்கிற சாத்தியமான இடத்தை/இடங்களைக் கண்டுபிடியுங்கள்
சமப்படுத்தப்பட்ட நிலம் விரும்பத்தக்கது; மதசம்பந்தமான எல்லைக்குட்பட்டிருத்தல்; களிமண், பாறை மற்றும் அதிக சத்தமுள்ள இடங்களைத் தவிருங்கள்.
உங்களுடைய ட்ரஸ்டின் பெயரில் இடத்தை வாங்கி அதை பதிவுசெய்யுங்கள்
உதாரணம்: யெகோவாவின் சாட்சிகளுடைய புதிய உலக சபை ட்ரஸ்ட். சொஸையிட்டியின் பெயரில் பதிவுசெய்யாதீர்கள்.
உங்களுடைய மனைக்கான பத்திரத்தின் (அல்லது பட்டாவின்) நகல் ஒன்றை சொஸையிட்டிக்கு அனுப்புங்கள்.
கிடைத்திருக்கிற நிதித் தொகையை தீர்மானியுங்கள்
கட்டுவதற்கு மட்டுமே உங்களுக்கு பணசம்பந்தமான உதவி தேவைப்படுமானால் சொஸையிட்டிக்கு எழுதுங்கள்.
மனையில் எந்த வேலையையும் ஆரம்பிப்பதற்கு முன்பாக காப்புறுதி பெறுங்கள்
காப்புறுதி சம்பந்தமாக சொஸையிட்டிக்கு எழுதுங்கள்.
சொஸையிட்டியிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்
நீங்கள் கையாளமுடியாத பிரச்சினைகள் எழும்பினால், சொஸையிட்டியிடம் கேட்டுத்தெரிந்துகொள்ளுங்கள்.