கேள்விப் பெட்டி
◼ ஆபத்தான பிராந்தியத்தில் ஊழியம் செய்கையில் என்ன எச்சரிக்கை தேவைப்படுகிறது?
1 வன்முறை, கொள்ளையடித்தல், சமூகக் கலவரங்கள் ஆகியவற்றைப் பற்றிய அறிக்கைகளை நாம் பெருமளவில் கேள்விப்படுகிறோம்; விசேஷமாக நகர்ப்புறங்களில் அவ்விதமாக இருக்கின்றன. நாம் கவலைகொள்கிறபோதிலும், ராஜ்ய செய்திக்குப் பிரதிபலிக்கிற உண்மை மனமுள்ள ஆட்கள் கலவரமுள்ள பகுதிகளிலும்கூட இருக்கிறார்கள் என்பதை நாம் அறிந்திருக்கிறோம். ஆகவே பொருத்தமாக இருக்கும்பட்சத்தில், யெகோவாவின் கண்காணிப்பில் நம்பிக்கையுள்ளவர்களாய், தொடர்ந்து ஊழியத்தில் முன்னேறிச்செல்ல தைரியத்தை நாம் வரவழைத்துக்கொள்ள வேண்டும்.—நீதி. 29:25; 1 தெ. 2:2.
2 ஆபத்துக்கான சாத்தியமுள்ள பகுதிக்குள் நாம் செல்கையில், எச்சரிக்கையுள்ளவர்களாக இருக்கும்படியும் நல்நிதானிப்பைப் பயன்படுத்தும்படியும் யெகோவா நம்மிடம் எதிர்பார்க்கிறார். விழிப்புடனிருங்கள். “விவேகி ஆபத்தைக் கண்டு மறைந்து கொள்ளுகிறான்; பேதைகள் நெடுகப்போய்த் தண்டிக்கப்படுகிறார்கள்.” (நீதி. 22:3) அனுபவமுள்ள பிரஸ்தாபிகள், இருவராக ஒன்றுசேர்ந்து அல்லது அவசியமானால் அநேக பிரஸ்தாபிகளடங்கிய தொகுதிகளாகவும்கூட ஊழியம் செய்வதன் ஞானத்தை மதித்துணருகிறார்கள். பிரசங்கி 4:9, 12 இவ்வாறு குறிப்பிடுகிறது: “ஒண்டியாயிருப்பதிலும் இருவர் கூடியிருப்பது நலம்; . . . ஒருவனை யாதாமொருவன் மேற்கொள்ள வந்தால் இருவரும் அவனுக்கு எதிர்த்துநிற்கலாம்.” தனியாக இருப்பதால் சுலபமாக பலியாகக்கூடியவர்களையே பெரும்பாலும் குற்றவாளிகள் நோட்டமிடுகிறார்கள்.
3 இருண்டுகிடக்கும் நடைக்கூடங்களையும் பாழடைந்த படிக்கட்டுகளையும் கொண்ட அடுக்கக குடியிருப்புகளுக்குள் செல்வதைக் குறித்ததில் அதிக கவனமுள்ளவர்களாக இருங்கள். ஒரு வீட்டிற்குள்ளோ அடுக்கக கட்டடங்களுக்குள்ளோ செல்வதற்கான அழைப்பை ஏற்றுக்கொள்வதைக் குறித்து எச்சரிக்கையாய் இருங்கள். பயமுறுத்துவதாக அல்லது சவால்விடுவதாக தோன்றுகிறவர்களுடன் வாக்குவாதம் செய்யாதிருங்கள். யெகோவாவின் சாட்சிகளில் ஒருவராக உங்களை உடனடியாக அடையாளங்காட்டுங்கள். பிரஸ்தாபிகளில் சிலர், அடையாளங்காட்டுவதற்காக ஒரு பைபிளையோ ஒரு காவற்கோபுரம் அல்லது விழித்தெழு! பத்திரிகையையோ எப்பொழுதும் தங்களுடன் கொண்டுசெல்கிறார்கள்.
4 அந்தப் பகுதியில் சுற்றிக்கொண்டிருக்கிற தனிப்பட்ட ஆட்களைக்குறித்து விழிப்புடனிருங்கள். அந்தக் கட்டடத்தில் வசிப்பவர்களாகத் தோன்றாத மற்றவர்களுடன் லிஃப்டில் செல்வதைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள். விலைமதிப்பு வாய்ந்த ஆபரணங்களை அணியாதிருங்கள். இருட்டிய பிறகு நீங்கள் வெளியே செல்ல வேண்டியிருந்தால், போக்குவரத்தற்ற இருண்ட தெருக்களில் நடந்துசெல்வதைத் தவிருங்கள். கொள்ளையடிப்பவர்களுக்குப் பலியானால், அவர்களுக்குத் தேவையானது உங்களுடைய பணம் அல்லது உடைமைகளாக மட்டுமே இருந்தால் எதிர்த்துநிற்காதிருங்கள். உங்களிடம் இருக்கிற எந்தவொரு பொருள்சம்பந்தமான காரியத்தைக் காட்டிலும் உங்களுடைய ஜீவனே மதிப்புவாய்ந்தது.—மாற். 8:36.
5 முன்நின்று நடத்துகிற சகோதரர்கள், பிராந்தியத்திலுள்ள பிரஸ்தாபிகள் ஊழியம் செய்யுமிடத்தை அறிந்தவர்களாய் விழிப்புடனிருப்பது அவசியம். பொதுவாக தொகுதியை ஒரே பகுதியில் கூடி வேலை செய்யவைப்பது மிகவும் நல்லது, இதனால் மற்றவர்கள் எப்பொழுதும் அருகிலிருப்பார்கள். அக்கம்பக்கத்தில் எந்த வகையான வன்முறையோ கலவரமோ ஏற்படுமானால், அந்தத் தொகுதி உடனடியாக அந்தப் பிராந்தியத்தை விட்டுச்செல்ல வேண்டும்.
6 நாம் விழிப்புள்ளவர்களாகவும் எச்சரிக்கையுள்ளவர்களாகவும் இருந்தால், குற்றச்செயல் நிறைந்த பகுதியில் உள்ள, “செய்யப்படுகிற சகல அருவருப்புகளினிமித்தமும் பெருமூச்சுவிட்டழுகிற”வர்களை நாம் தொடர்ந்து சென்றெட்ட முடியும்.—எசே. 9:4.