விசுவாசம் இல்லாதவர்களுக்கு உதவுங்கள்
1 படித்தவராகவும் முற்போக்கு சிந்தனையுள்ளவராகவும் பிறரால் கருதப்படவேண்டும் என்ற விருப்பம் நவீன காலங்களில் பிரபலமாக உள்ளது. மனித தத்துவங்களும் கற்பனைக் கொள்கைகளும் புகழப்படுகின்றன, ஆனால் ஆவிக்குரிய மதிப்புள்ளவை அலட்சியப்படுத்தப்படுகின்றன. எளிய உண்மைகளிலும் புரிந்துகொள்ளத்தக்க சத்தியங்களிலும் ஆர்வமுள்ள உண்மை மனதுள்ள நபர்கள் உயிர்—அது எவ்வாறு வந்தது? பரிணாமத்தினாலா படைப்பினாலா? புத்தகத்தை ஆராய்வதற்கான வாய்ப்பை வரவேற்பர். விசுவாசம் இல்லாதோருக்கு இப்புத்தகம் உதவக்கூடும். (ரோ. 1:19, 20) ஆர்வம்காட்டும் அனைவரையும் நிச்சயமாய் திரும்ப சந்தியுங்கள்.
2 உங்கள் கலந்தாலோசிப்பை இவ்விதம் நீங்கள் ஆரம்பிக்கலாம்:
◼ “மனிதக் குடும்பம் பரிணாமத்தின் மூலமே வந்தது என்ற நம்பிக்கையை பல பேராசிரியர்கள் ஆதரிக்கின்றனர் என்பதை நிச்சயமாகவே அறிந்திருப்பீர்கள். அனைத்தும் தற்செயலின் விளைவாக உண்டாகி இருக்கின்றன என்று அது கற்பிக்கிறது. அதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? [பதில் சொல்ல அனுமதியுங்கள்.] இக்கருத்து இன்னும் ஒரு கோட்பாடு என்றே அழைக்கப்படுகிறது. கோட்பாடு என்பது ‘ஒரு புனைக் கருத்து’ அல்லது ‘நிரூபிக்கப்படாத ஒரு ஊகம்’ ஆகும். பூமி தட்டையானதென பல நூற்றாண்டுகளாக மனிதர் நம்பினர்; அது உண்மையின் பேரில் சார்ந்திராத ஒரு மடத்தனமான ஊகம் என்று இப்போது நாம் அறிவோம். பரிணாமக் கோட்பாடும் இது போன்றே இருக்கக்கூடுமா?” பக்கம் 4-லுள்ள முன்னுரைக் குறிப்புகளை வாசித்து, பிறகு ஏசாயா 42:5-ஐ கலந்தாலோசியுங்கள்.
3 அல்லது மறுசந்திப்பு செய்யும்போது இந்த அணுகுமுறையை நீங்கள் உபயோகிக்கக்கூடும்:
◼ “கடவுளை நம்பாத ஆட்களை சந்திப்பது சர்வ சாதாரணமாகிவிட்டது. சில வருடங்களுக்கு முன் இது வெகு அபூர்வம். ஏன் அநேகர் கடவுளில் விசுவாசம் இழந்துவிட்டிருக்கின்றனர் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? [பதில் சொல்ல அனுமதியுங்கள்.] நம் உலகில் வன்முறையும் இன்னலும் பயங்கரமாக அதிகரித்திருப்பதே தங்கள் விசுவாச இழப்பிற்குக் காரணம் என அநேகர் சொல்கின்றனர். சர்வ வல்லமையுள்ள கடவுள் ஒருவர் இருந்தால், அவர் ஏன் இந்தத் துயரை நீக்கக்கூடாது என அவர்கள் யோசிக்கின்றனர். இக்கேள்விக்குத் திருப்திகரமான பதிலைப் பெற முடியாதவர்கள் பொதுவாக நாத்திகர்களாக ஆகிவிடுகின்றனர். ஆனால் கடவுள் இருக்கிறார் என்பதற்கும், சீக்கிரத்தில் அவர் பூமியை மகிழ்ச்சியும் சமாதானமுமுள்ள இடமாக ஆக்குவார் என்பதற்கும் திரளான அத்தாட்சிகள் உள்ளன.” பக்கம் 196, பத்தி 19-லுள்ள வேதாகம கருத்துக்களைப் பயன்படுத்தி கலந்தாலோசிப்பை தொடருங்கள்.
4 பொருத்தமானால், பைபிளைக் கையில் வைத்தவாறே நீங்கள் பின்வருமாறு உரையாடலை ஆரம்பிக்கலாம்:
◼ “பைபிளைப் படிப்பது ஏன் நம் காலத்திற்கு நடைமுறையானது என்பதை சுட்டிக்காட்ட நாங்கள் மறுபடியும் சந்திக்கிறோம். அநேகர் பைபிளை வைத்திருக்கின்றனர், ஆனால் வெகு சிலரே அதை வாசிக்க நேரம் செலவிடுகின்றனர். இனியும் மதத்தில் தங்களுக்கு அதிக நம்பிக்கையில்லை என சிலர் வெளிப்படையாக நம்மிடம் சொல்கின்றனர். அதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? [பதில் சொல்ல அனுமதியுங்கள்.] பைபிள் கடவுளுடைய ஏவப்பட்டெழுதப்பட்ட வார்த்தை என்று நம்மை நம்பவைக்கும் காரியங்களில் ஒன்று அதன் தீர்க்கதரிசனங்களின் நிறைவேற்றமாகும்.” பக்கம் 234, பத்தி 6-லுள்ள வேத வசனங்களுக்குக் கவனத்தைத் திருப்புங்கள்.
5 இந்தக் கருத்து சாதகமான பிரதிபலிப்பை ஏற்படுத்தக்கூடும்:
◼ “இப்பூமியில் நம்மைச் சுற்றியுள்ள பொருட்களில் அழகையும் ஞானத்தின் வியப்பூட்டும் அத்தாட்சியையும் நாம் காண முடிகிறது. இந்த அழகிய சூரிய அஸ்தமன படம் ஒரு பொருத்தமான உதாரணம்.” பக்கங்கள் 12, 13-லுள்ள படத்தைக் காட்டுங்கள். “சிந்திப்பதற்குரிய சில விஷயங்கள்” என்ற பகுதியிலிருந்து குறிப்புகளைச் சொல்லி நம் உலகத்தைப் பற்றிய முக்கிய கேள்விகளுக்கு எப்படி இந்தப் புத்தகம் திருப்திகரமான பதில்களை அளிக்கிறது என்று விளக்குங்கள்.
6 தங்கள் படைப்பாளரில் விசுவாசம் வைப்பதற்கு உறுதியான அடிப்படையைக் கண்டுபிடிக்க மற்றவர்களுக்கு உதவுவதற்கு இப்புத்தகத்தைப் பயன்படுத்துவதன் மூலம் நாம் அவர்களுக்கு ஓர் ஆசீர்வாதமாக இருக்கக்கூடும்.