சகலவித ஜனங்களும் இரட்சிக்கப்படுவார்கள்
1 “எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற [“திருத்தமான,” NW] அறிவை அடையவும்” யெகோவா சித்தமுள்ளவராயிருக்கிறார். (1 தீ. 2:4) மரபு, பின்னணி, சூழ்நிலை ஆகியவற்றால் மக்கள் ஓரளவு செல்வாக்கு செலுத்தப்படுகிறபோதிலும், அவர்களுக்கு சுயாதீனம் இருக்கிறது, இதனால் தங்களுடைய வாழ்க்கையை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை தனிப்பட்டவர்களாக தெரிவுசெய்ய முடியும். அவர்கள் நல்ல காரியம் எதுவோ அதைச் செய்து வாழலாம், அல்லது தீய காரியம் எதுவோ அதைச் செய்து அழிந்துபோகலாம். (மத். 7:13, 14) இந்தப் புரிந்துகொள்ளுதல், ராஜ்ய நற்செய்தியைக் கொண்டு நாம் அணுகுகிற மக்களைப் பற்றிய நம்முடைய நோக்குநிலையை எவ்வாறு பாதிக்கிறது?
2 சத்தியத்தின் மீது ஒரு நபருடைய அக்கறை, தேசிய அல்லது பண்பாட்டு பின்னணி, அல்லது சமூக அந்தஸ்து போன்ற காரணிகளால் வழிநடத்தப்படுகிறது என நாம் எண்ணிக்கொள்ளக் கூடாது. மட்டுப்பட்ட அல்லது உயர்தர கல்வி கற்றவர்களை, அரசியல் நாட்டமுள்ளவர்களை, தொழில்துறை சார்ந்தவர்களை, நாத்திகர்களை, அறியொணாமைக் கொள்கையுடையவர்களையும், தவறுசெய்வதில் பேர்போனவர்களையும்கூட சத்தியம் கவரலாம். அனைத்து பின்னணியிலிருந்தும் சமுதாய மட்டங்களிலிருந்தும் வருகிற மக்கள் தங்களுடைய முந்திய நடத்தைப் போக்கிலிருந்து மாறி, இப்பொழுது கடவுளுடைய புதிய உலகில் வாழ்க்கையைப் பெற்றுக்கொள்வதை எதிர்நோக்கி இருக்கிறார்கள். (நீதி. 11:19) ஆகையால், பலதரப்பட்ட வாழ்க்கை சூழ்நிலையிலுள்ள மக்களை நற்செய்தியைக் கொண்டு அணுகுவதற்கு நாம் தயங்கக்கூடாது.
3 பின்வரும் உதாரணங்களை கவனியுங்கள்: ஒரு மனிதன் தன்னுடைய மாற்றான் தகப்பனை கொலைசெய்வதற்கு திட்டமிட்டிருந்தான், ஆனால் கொலைசெய்யவில்லை. பின்பு தற்கொலை செய்துகொள்வதற்குத் தீர்மானித்தான், ஆனால் முடியவில்லை. திருடியதற்காகவும் போதைப் பொருளை கடத்தியதற்காகவும் அவன் சிறையிலிடப்பட்ட பிறகு, அவனுடைய திருமணம் தோல்வியடைந்துவிட்டது. இன்று அந்த மனிதன் நேர்மையான வாழ்க்கை வாழ்ந்துவருகிறான், மகிழ்ச்சியான திருமண வாழ்வையும் தன்னுடைய மாற்றான் தகப்பனுடன் ஒரு நல்ல உறவையும் அனுபவித்து வருகிறான். எது வித்தியாசத்தை உண்டுபண்ணியது? அவன் யெகோவாவின் சாட்சிகளுடன் பைபிளைப் படித்து, தான் கற்றுக்கொண்டதை பொருத்திப் பயன்படுத்தினான். மீட்டுக்கொள்ளப்படுவதற்கும் அப்பால் இருப்பதாக யெகோவா அவனைக் கருதவில்லை.
4 டிவி நடிகையாக ஒரு இளம் பெண் பெற்ற புகழ் அவளுக்கு மகிழ்ச்சியைக் கொண்டுவரவில்லை. ஆனால் சாட்சிகளுடைய சிறந்த நடத்தையினால் மனங்கவரப்பட்டு, ஒரு பைபிள் படிப்பை அவள் ஏற்றுக்கொண்டாள், பின்பு விரைவிலேயே ராஜ்ய நற்செய்தியைப் பற்றி மற்றவர்கள் கற்றுக்கொள்ள உதவிசெய்து வந்தாள். வீட்டுக்கு வீடு ஊழியத்தில் அவள் சென்ற இடத்திலெல்லாம் அவளை அடையாளம் கண்டுகொண்டார்கள், ஒரு நடிகையாக அறியப்படுவதற்குப் பதிலாக யெகோவாவின் சாட்சிகளில் ஒருத்தியாக அறியப்படுவதற்கு விரும்பியதை அவள் மகிழ்ச்சியுடன் விளக்கினாள்.
5 காவற்கோபுர சந்தாதாரர் ஒருவருடன் பைபிள் படிப்பு ஒன்றை நடத்துவதற்கு ஒரு சாட்சி ஏற்பாடு செய்தபோது, அண்டை வீட்டுக்காரர் ஒருவர் அதைப் பற்றி கேள்விப்பட்டு அந்தப் படிப்புக்கு ஆஜரானார். அந்த அண்டை வீட்டுக்கார பெண், தான் தேடிக்கொண்டிருந்த சத்தியத்தை உடனடியாக அடையாளம் கண்டுகொண்டாள்! அவளும் அவளுடைய கணவரும் தங்களுக்கு அளிக்கப்பட்டிருந்த ஒரு விவாகரத்து தீர்ப்பாணையை ரத்துசெய்துவிட்டு, சமாதானம் ஆகிவிட்டார்கள். அவள் ஜோதிடத்தில் ஆழமான ஈடுபாடுகொண்டிருந்தாள், மேலும் ஆவிக் கொள்கையைக் கடைப்பிடிக்கும் தொகுதியுடன் ஈடுபாடுகொண்டிருந்தாள், ஆனால் தனக்கு சொந்தமான அதிக விலையுயர்ந்த புத்தகங்களையும் பேய்க்கொள்கையோடு தொடர்புடைய மற்ற எல்லாவற்றையும் உடனடியாக தூக்கி எறிந்துவிட்டாள். அவள் விரைவிலேயே கூட்டங்களுக்கு ஆஜராகவும் அவளுடைய புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட மதத்தைப் பற்றி உறவினர்களிடமும் நண்பர்களிடமும் பேசவும் ஆரம்பித்தாள். இப்பொழுது அவள் மற்றவர்களுக்கு ஆர்வத்துடன் சாட்சிகொடுக்கிறாள்.
6 நாம் யாரையும் முன்னதாகவே தீர்மானிக்கக் கூடாது. அதற்குப் பதிலாக, எங்குமுள்ள மக்களிடம் நற்செய்தியைப் பகிர்ந்துகொள்வதற்கு நாம் வைராக்கியமாய் பங்குகொள்வோமாக. ‘இருதயத்தைப் பார்க்கிறவராகிய’ யெகோவா, ‘எல்லா மனுஷருக்கும் இரட்சகராக’ ஆவார் என்று நம்பிக்கையுடன் இருப்பதற்கு நம்மிடம் எல்லா காரணமும் இருக்கிறது.—1 சா. 16:7; 1 தீ. 4:10.