கேள்விப் பெட்டி
தேவராஜ்ய ஊழியப் பள்ளி நூலகத்தில் என்ன பிரசுரங்கள் வைக்கப்பட வேண்டும்?
கடவுளுடைய மக்களின் நன்மைக்காகவே ஏராளமான ஆவிக்குரிய பிரசுரங்கள் அளிக்கப்பட்டிருக்கின்றன. அநேக பிரஸ்தாபிகள் இவை எல்லாவற்றையும் சொந்தமாக வைத்திராத காரணத்தால், மற்றபடி கிடைக்காத பிரசுரங்களில் ஆராய்ச்சி செய்வதற்கான ஓர் உதவியை ராஜ்ய மன்றத்திலுள்ள தேவராஜ்ய ஊழியப் பள்ளி நூலகம் அளிக்கிறது. எனவே, பலதரப்பட்ட பைபிள் மொழிபெயர்ப்புகள், சங்கத்தின் தற்போதைய பிரசுரங்கள், நம் ராஜ்ய ஊழிய பிரதிகள், காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! பவுண்ட் தொகுப்புகள், காவற்கோபுர பிரசுரங்களின் அட்டவணை (ஆங்கிலம்) ஆகியவை அனைத்தும் வைக்கப்பட வேண்டும். கூடுதலாக, ஒரு நல்ல நவீன அகராதியும் வைக்கப்பட வேண்டும். கிடைக்குமானால், என்ஸைக்ளோப்பீடியாக்கள், அட்லஸ்கள், அல்லது இலக்கணம், வரலாறு பற்றிய நோக்கீட்டுப் புத்தகங்கள் ஆகியவை பயனுள்ளவையாய் இருக்கலாம். இருப்பினும், நம்முடைய பிரதான அக்கறை, “உண்மையும் விவேகமுமுள்ள அடிமை”யால் கொடுக்கப்படும் பிரசுரங்களின் மீதே இருக்கவேண்டும்.—மத். 24:45, NW.
சில சந்தர்ப்பத்தில், பொருத்தமற்ற புத்தகங்கள் தேவராஜ்ய ஊழியப் பள்ளி நூலகத்தில் வைக்கப்பட்டிருந்ததாக அறிக்கை செய்யப்பட்டிருக்கிறது. நாவல்கள், பைபிள் திறனாய்வை (higher criticism) சிறப்பித்துக்காட்டுகிற பைபிள் குறிப்புரைகள், அல்லது தத்துவம் அல்லது ஆவிக்கொள்கை பற்றிய புத்தகங்கள் ஆகியவற்றை வைப்பது பொருத்தமாக இருக்காது. தேவராஜ்ய ஊழியப் பள்ளி நூலகத்தைப் பயன்படுத்துகிறவர்கள் தொடர்ந்து ஆவிக்குரிய முன்னேற்றம் செய்வதற்கு உதவும் விஷயங்களை மட்டுமே அதில் வைக்க வேண்டும்.—1 தீ. 4:15.
நூலகத்திற்கு பள்ளி கண்காணியே பொறுப்புள்ளவர், இருந்தபோதிலும் அதை கவனித்துக்கொள்வதில் வேறு சகோதரரும் உதவிக்காக நியமிக்கப்படலாம். புதிய பிரசுரங்கள் கிடைத்தவுடனேயே அவற்றை நூலகத்தில் வைப்பதை அவர் கவனித்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு புத்தகமும் அதன் உட்புற அட்டையில் அதற்குரிய சபையின் பெயருடன் தெளிவாக குறிக்கப்பட்டிருக்க வேண்டும். எந்தப் புத்தகமாவது சரிசெய்யப்பட வேண்டுமா அல்லது மாற்றீடு செய்யப்பட வேண்டுமா என்பதைப் பார்ப்பதற்கு வருடத்திற்கு ஒரு முறை சரிபார்க்கப்பட வேண்டும்.
நூலகத்தை கவனித்துக்கொள்வதில் எல்லாரும் ஒத்துழைக்கலாம். புத்தகங்களைக் கையாளுவதிலும் பயன்படுத்துவதிலும் கவனமெடுத்துக்கொள்ள வேண்டும். பிள்ளைகள் அவற்றை வைத்து விளையாடும்படி அனுமதிக்கக் கூடாது, ஒருவரும் அதில் குறிக்கவும் கூடாது. புத்தகங்கள் ராஜ்ய மன்றத்திலிருந்து எடுத்துச் செல்லப்படக் கூடாது என்பதை நினைப்பூட்டும் ஒரு தெளிவான அடையாளக் குறிப்பை நூலகத்தில் வைக்கலாம்.
தொடர்ந்து புதிய சபைகள் உருவாகி வருவதால், அநேக நூலகங்கள் அளவில் சிறியவையாய் இருக்கக்கூடும். நம்முடைய பழைய பிரசுரங்களை வைத்திருக்கும் பிரஸ்தாபிகள் சிலர் அவற்றை சபைக்கு நன்கொடையாக கொடுத்துவிடுவதைக் குறித்து யோசிக்கலாம். சங்கம் மறு-அச்சு செய்யும் காவற்கோபுர பவுண்ட் தொகுப்புகள் கிடைக்கும் சமயத்தில், மூப்பர்கள் அவற்றை ஆர்டர் செய்ய விரும்பலாம். இந்த முறையில், அறிவு, ஞானம், புரிந்துகொள்ளுதலை கொடுக்கிற கடவுளுடைய வார்த்தையின் மறைவான பொக்கிஷங்களை வெளிக்கொணருவதற்கு அனைவருக்கும் உதவிசெய்வதில் தேவராஜ்ய ஊழியப் பள்ளி நூலகம் அதிக நன்மை பயக்கும்.—நீதி. 2:4-6.