துண்டுப் பிரதிகளை உபயோகிப்பதன்மூலம் உங்கள் வெளிச்சத்தை பிரகாசிக்கச் செய்யுங்கள்
1 ஒப்பிட முடியாததும் குழப்பமானதுமான காலப்பகுதியை மனிதர்களாகிய நாமும், நாம் வாழும் இந்த பூமியும் அனுபவிப்பதை பெரும்பாலான ஆட்கள் இப்போது ஒப்புக்கொள்கின்றனர். ஏதேனும் ஒரு சமயத்தில் பெரும்பாலான ஆட்கள் கேட்கும் கேள்வியானது, நிலைமைகளை சரிசெய்வதற்கான மனித முயற்சிகள் உண்மையில் வெற்றிபெறுமா என்பதே. (எரே. 10:23) எதிர்காலத்தைப் பொருத்தவரை, மனிதவர்க்கம் எதிர்ப்படும் பல்வேறு விதமான சூழ்நிலைகள் நம்பிக்கையற்ற ஓர் எண்ணத்தையே அளிக்கின்றன. இந்த உலகத்தின் மதங்கள், அரசியல், வர்த்தக அமைப்புகள் ஆகியவை எந்த நம்பிக்கையையும் அளிப்பதில்லை. இந்த உலகம் தப்பிப்பிழைக்குமா?, சமாதானமான புதிய உலகம் வருமா? ஆகிய கேள்விகளுக்கு பதில்கள் தேவைப்படுகின்றன.
2 பூமி, அதன் இயற்கையான ஆற்றலின் மூலம் தன்னைத் தானே பேணி, சீர்செய்து கொள்வதினாலும், அதன் சிருஷ்டிகர் அவருடைய வார்த்தையாகிய பைபிளில் கொடுத்திருக்கிற நிச்சயமான வாக்குறுதிகளினாலும், யெகோவாவின் சாட்சிகள் பூமியின் எதிர்காலத்தைக் குறித்து நம்பிக்கையோடு இருக்கிறார்கள். “நீதிமான்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொண்டு, என்றைக்கும் அதிலே வாசமாயிருப்பார்கள்” என்று சங்கீதம் 37:29 அறிவிக்கிறது. இன்று நாம் காணும் குழப்பமான பின்னணியின் மத்தியில், இந்த வாக்குறுதி பெரும்பாலானோருக்கு மகிழ்ச்சி கலந்த ஆச்சரியமாகவும் வரவேற்புக்குரிய செய்தியாகவும் இருக்கும். அப்படி இல்லையென்றாலும், நல்ல சம்பாஷணைக்கான பேச்சுப் பொருளாவாவது இது இருக்கும். அக்கறைக்குரிய விதமாக, இந்த உலகம் தப்பிப்பிழைக்குமா? என்ற துண்டுப் பிரதியின் பொருளாக அது இருக்கிறது. இந்த எளிய, கவர்ந்திழுக்கும் துண்டுப் பிரதியை பலன்தரத்தக்க விதத்தில் நம்முடைய ஊழியத்தில் நாம் உபயோகிக்கலாம் என்பதையே பயணக் கண்காணிகளிடமிருந்து வரும் அனுபவங்கள் காட்டுகின்றன. மற்ற துண்டுப் பிரதிகளும்கூட சம்பாஷணைகளைத் தொடங்குவதற்கு சிறந்த வாய்ப்பளித்து, அடிக்கடி சுவாரசியமான பைபிள் கலந்தாலோசிப்புகளுக்கு வழிநடத்தி இருக்கின்றன.
3 ஒருமுறை முழு பூகோள பிரளயம் ஏற்பட்டு, தேவ பக்தியற்றவர்களை அழித்ததைப்பற்றி பல்வேறு சமுதாயத்திலுள்ள பெரும்பாலான ஆட்கள் அறிந்திருக்கின்றனர். இந்த உலகம் தப்பிப்பிழைக்குமா? என்ற துண்டுப் பிரதி அந்தச் சம்பவத்தைப் பற்றிய பைபிள் பதிவைக் குறிப்பிடுகிறது; இது சம்பாஷணையை ஆரம்பிப்பதற்கான குறிப்பாக இருக்கலாம். நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்தக் கொடிய காலத்தில் இந்தப் பொருள் அதிக முக்கியமானதாக ஆகியிருக்கிறது. (2 தீ. 3:1) வெற்றிகரமாக துண்டுப் பிரதிகளை அளித்து, சத்தியத்தை கற்றுக்கொள்ள ஆட்களுக்கு உதவும் சகோதரர்களின் உற்சாகமான அறிக்கைகளை நாம் அடிக்கடி கேள்விப்படுகிறோம்.
4 “ஒளி கொண்டுச்செல்வோர்” மாவட்ட மாநாட்டில், “உங்கள் வெளிச்சம் பிரகாசிக்கக்கடவது” என்ற தொடர்பேச்சில் இந்த முக்கியமான கருவிகளின் உபயோகத்தை அழுத்திக்காட்டிய ஒரு பேச்சு கொடுக்கப்பட்டதை நீங்கள் நினைவுகூரக்கூடும். “துண்டுப் பிரதிகளிலுள்ள சுருக்கமான, நேரடியான, எளிதாக புரிந்துகொள்ளத்தக்க செய்தி, பெரும்பாலும் கவனத்தை ஈர்த்து பயனளிக்கும் விளைவுகளை உண்டுபண்ணுகிறது” என்று அது குறிப்பிட்டது. (w81 3/1, பக். 32; w83 11/1 பக். 27) இந்த உலகம் தப்பிப்பிழைக்குமா? என்ற துண்டுப் பிரதியும் இந்த மாநாட்டில்தான் வெளியிடப்பட்டது. சமாதானமான புதிய உலகத்தில் வாழ்க்கை, பரதீஸூக்கான வழியை எப்படிக் கண்டடைவது, (ஆங்கிலம்) நிஜமாக உலகத்தை ஆளுவது யார்?, குடும்ப வாழ்க்கையை மகிழ்ந்து அனுபவியுங்கள், மனச்சோர்வடைந்தோருக்கு ஆறுதல் போன்ற மற்ற துண்டுப் பிரதிகளும் பெருமளவு அக்கறையைத் தூண்டுபவையாயும் சம்பாஷணையைத் தொடங்குவதற்கு பயனுள்ளவையாயும் இருக்கின்றன. உவாட்ச் டவர் சங்கத்தின் ஆரம்ப நாட்களைப் போலவே, இன்றும், எளிதாகவும் சந்தர்ப்பம் கிடைக்கையிலும் கடவுளுடைய ராஜ்யத்தின் செய்தியை பரப்புவதற்கு அநேக ராஜ்ய அறிவிப்பாளர்கள் பயன்தரத்தக்க விதத்தில் இந்தத் துண்டுப் பிரதிகளை உபயோகிக்கின்றனர்.
5 முதல் சந்திப்பிலேயே பைபிள் படிப்புகளை ஆரம்பிக்க முயற்சி செய்யுங்கள்: முதல் சந்திப்பிலேயே பைபிள் படிப்புகளை ஆரம்பிப்பதற்கு ஏற்றவிதமாகவே இந்தத் துண்டுப் பிரதிகள் தயாரிக்கப்பட்டிருக்கின்றன. ஒரு வட்டாரக் கண்காணியின் சந்திப்பின்போது, அவர் சந்தித்த அந்த வாரத்தில் சபையின் அங்கத்தினர்கள், வீட்டுக்காரர்களிடம் பேசுகையில் முதல் சந்திப்பிலேயே துண்டுப் பிரதிகளை உபயோகித்ததன்மூலம், 64 வீட்டு பைபிள் படிப்புகளை தொடங்கியதாக அறிக்கை செய்தார். “பெரும்பாலான என் கலந்தாலோசிப்புகளை துண்டுப் பிரதியுடன் தொடங்கி, பின்பு அளிப்பினிடம் வழிநடத்துவதில் எனக்கு சிறந்த வெற்றி கிடைத்திருக்கிறது” என்பதாக மற்றொருவர் எழுதுகிறார். முதல் சந்திப்பிலேயே பைபிள் படிப்பை தொடங்க முயற்சி செய்யும்படி நாங்கள் உங்களை உற்சாகப்படுத்துகிறோம். இதைச் செய்வதற்கு, ஒரு துண்டுப் பிரதியிலுள்ள சில பாராக்களை முதல் சந்திப்பிலும், இன்னும் சிலவற்றை அடுத்த சந்திப்பிலும், இறுதியில் துண்டுப் பிரதியை முழுமையாகவும் கலந்தாலோசித்தால், அதற்குள்ளாக வீட்டுக்காரர் அறிவு புத்தகத்திலிருந்தோ அல்லது தேவைப்படுத்துகிறார் சிற்றேட்டிலிருந்தோ ஒரு படிப்பை படிக்க ஒத்துக்கொள்ளும் மனச்சாய்வுள்ளவராவார். அல்லது, சமாதானமான புதிய உலகத்தில் வாழ்க்கை போன்ற மற்றொரு துண்டுப் பிரதியின் அடிப்படையில் இதுபோன்ற கலந்தாலோசிப்புகளைத் தொடர வீட்டுக்காரர் விருப்பமுள்ளவராக ஆகலாம்.
6 துண்டுப் பிரதியை முழுமையாக ஆராயுங்கள். நம்முடைய துண்டுப் பிரதிகளிலுள்ள, அழகாக தேர்ந்தெடுக்கப்பட்ட அட்டை படங்களாலும் மனதைத் தொடும் தலைப்புகளாலும் எவரும் கவரப்படுவர். உங்கள் ஷர்ட் பாக்கெட் அல்லது கோட் பாக்கெட்டிலோ, பர்ஸ் அல்லது பிரீஃப் கேஸிலோ நீங்கள் சிரமமின்றி, இலகுவாக எளிதில் சில துண்டுப் பிரதிகளை உடன் கொண்டு செல்லலாம்; எனவே ஆட்களிடம் கொடுக்க அவை வசதியாக இருப்பதால் நம்முடைய வெளி ஊழியத்தின் போது மட்டுமல்லாமல் ஆட்களைச் சந்திக்கும்போதெல்லாம் கொடுக்கலாம். (yb89 பக்கம் 59) எல்லா விதமான ஆட்களிடமும், எல்லா சமயத்திலும், எல்லா இடங்களிலும் சிந்தனையைத் தூண்டும் சம்பாஷணைகளைத் தொடங்குவதற்கு அவை சரியாகவே பொருத்தமானவையாய் இருக்கின்றன. அக்கறையைத் தூண்டும் பொருளில் ஒரு சம்பாஷணையை தொடங்கி, அதைப் பைபிள் படிப்பாக தொடருவதே நம்முடைய இலக்காக இருக்கவேண்டும். இதுபோன்ற ஒன்றைச் சொல்வதன்மூலம் முதல் சந்திப்பிலோ அல்லது மறுசந்திப்பிலோ பைபிள் படிப்புகளை ஆரம்பிக்கலாம்:
பிரஸ்தாபி: வணக்கம். வாழ்க்கையின் தரத்தைப் பற்றி இன்று நாங்கள் ஆட்களிடம் பேசி வருகிறோம். அந்த விஷயத்தில் உங்களுக்கு திருப்தி இருக்கிறதா?
வீட்டுக்காரர்: திருப்தி இருக்கிறதென்று சொல்லமுடியாது.
பிரஸ்தாபி: (இந்த உலகம் தப்பிப்பிழைக்குமா? என்ற துண்டுப் பிரதியைக் கொடுத்துவிட்டு) சம்பவிக்கிற இக்காரியங்கள் பைபிள் தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றம் என்றும் உலகத்தின் முடிவு சமீபத்திலிருக்கிறது என்றும் சிலர் நினைக்கின்றனர். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
வீட்டுக்காரர்: என்ன சொல்வதென்று தெரியவில்லை. ஒருவேளை உண்மையாய் இருக்கலாம்.
இப்போது நீங்கள் துண்டுப் பிரதியை உபயோகித்து, இதற்கு முன் இருந்த உலகம் முடிவுக்கு வந்தது என்பதையும் இந்த உலகமும் முடிவுக்கு வரும் என்பதையும் காட்டலாம். இது சமாதானமுள்ள புதிய உலகத்திற்கு வழிநடத்தும் என்பதை விளக்கவும். துண்டுப் பிரதியை உபயோகித்து, உலகத்திற்கு முடிவு என்பது சொல்லர்த்தமான வானமும் பூமியும் அழிந்து போவதையல்ல ஆனால், நாம் இப்போது எதிர்ப்படும் எல்லா பிரச்சினைகளுக்கும் முடிவைக் குறிக்கும் என்பதை விளக்கி ஒரு சம்பாஷணையை வைத்துக்கொள்ள உற்சாகமூட்டவும். உலகத்தின் முடிவு சமீபமாயிருக்கிறது என்பதற்கான பைபிள் ஆதாரத்தை கலந்தாலோசிக்க, மற்றொரு சந்திப்புக்காக ஏற்பாடு செய்ய முயலுங்கள்.
7 பொருளை அறிமுகப்படுத்துவதற்கு இருக்கும் மற்றொரு வழி:
“இந்த உலகத்தின் எதிர்காலத்தைக் குறித்து எங்களுடைய அயலாரிடமும் நண்பர்களிடமும் நாங்கள் பேசிக்கொண்டிருக்கிறோம். வெகு நாட்களுக்கு இனி இந்த உலகம் இருக்காது, சீக்கிரத்தில் முடிவுக்கு வரும் என்பதாக அநேக ஆட்கள் சிந்திப்பதை நாங்கள் காண்கிறோம்! நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ எனக்குத் தெரியவில்லை; ஆனால், அதிகமான ஆட்கள் இந்த உலகம் தப்பிப்பிழைக்கும் என நம்புகின்றனர். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” (பதிலளிக்க நிறுத்துங்கள்.)
“அக்கறையைத்தூண்டும் இந்தப் பொருளை கலந்தாலோசிக்கும் இந்தத் துண்டுப் பிரதியை உங்களுக்குக் கொடுப்பதில் எனக்கு சந்தோஷம். இந்தத் தலைப்பு என்ன கேள்வியைக் கேட்கிறது என்று பாருங்கள்: ‘இந்த உலகம் தப்பிப்பிழைக்குமா?’ ஆம் என்ற பதில் உண்மையில் திருப்தியளிக்கும் என்பதை நீங்கள் ஒத்துக்கொள்வீர்கள். நீங்கள் கொஞ்சம் இந்த முதல் பாராவை வாசித்தால் நன்றாக இருக்கும்.”
8 துண்டுப் பிரதிகளின் எளிய நடையினாலும் அவற்றில் கலந்தாலோசிக்கப்பட்டிருக்கும் பொருள்களில் பெரும்பாலானோருக்கு அக்கறை இருப்பதனாலும், துண்டுப் பிரதி விநியோகிப்பை எளிதானதாகவும் உயிர்ப்பூட்டுவதாகவும் பிரஸ்தாபிகளிலுள்ள இளைஞர்களும் முதியவர்களும், புதியவர்களும் வெகு காலமாக சத்தியத்திலிருப்பவர்களும் கண்டிருக்கின்றனர். கூடுதலான பலன் என்னவென்றால் இதற்கு நன்கொடை தொகை இல்லை. பணச்செலவை உட்படுத்தாத காரியங்களுக்கு பெரும்பாலான ஆட்கள் சாதகமாக பிரதிபலிக்கின்றனர். “ஊழியத்தில், அநேக ஆட்கள், மேலுமான விளக்கங்களைக் கேட்பதற்காக மீண்டும் வரும்படி பிரஸ்தாபிகளை கேட்டுக்கொண்டதே பலன்களாக இருந்தன. பிரஸ்தாபிகள், சாதாரணமாக இருப்பதையும்விட சராசரிக்கு அதிகமான மறுசந்திப்புகளை தங்கள் வீட்டுக்கு வீடு பதிவுச் சீட்டில் குறித்து வைத்திருப்பதாக தோன்றுகிறது” என ஒரு வட்டாரக் கண்காணி சொல்கிறார். நீங்கள் துண்டுப் பிரதிகளை அளிக்க முயன்றிருக்கிறீர்களா? இல்லையென்றால், எவ்வளவு சீக்கிரத்தில் முடியுமோ அவ்வளவு சீக்கிரத்தில் அளிக்க ஏன் முயற்சி செய்யக்கூடாது?
9 துண்டுப் பிரதியைப் பெற்றுக் கொண்டவரை நீங்கள் மறுசந்திப்பு செய்கையில், நியாயங்காட்டி பேசுதல் புத்தகத்திலிருந்து அதை ஆதரிக்கும் குறிப்புகளோடுகூட அந்தப் பொருளைப் பற்றிய வெகு அதிகமான தகவலோடும், அறிவு புத்தகத்தின் ஒரு பிரதியோடும், சமாதானமான புதிய உலகத்தில் வாழ்க்கை என்ற தலைப்பையுடைய துண்டுப் பிரதியோடும் நிச்சயமாகவே ஒரு பைபிளோடும் ஆயத்தமாயிருங்கள். உலகம், தப்பிப்பிழைப்பது மட்டுமல்லாமல் எல்லா ஜனங்களிலும், இனத்தாரிலும் பாஷைக்காரரிலும் இருந்து வந்த நேர்மையும் மனத்தாழ்மையும் உள்ள ஆட்களால் நிரப்பப்பட்ட பரதீஸாகவும் இருக்கும் என்பதை இந்த முறை நீங்கள் விவரிக்கலாம். (வெளி. 7:9) பூமியை திரும்பவும் நிலைநாட்டி, அதன் ஆரம்ப அழகிற்கு கொண்டுவரவிருக்கும் யெகோவாவின் மகத்தான நோக்கத்திடம் கவனத்தை ஒருமுகப்படுத்துங்கள். அறிவு புத்தகத்தில் 4-ம் 5-ம் பக்கங்களிலுள்ள படத்துடனும் “நீங்கள் மகிழ்ச்சியான எதிர்காலத்தை கொண்டிருக்க முடியும்” என்ற முதல் அதிகாரத்தின் தலைப்புடனும் இணைத்துப் பேசுங்கள். முடிந்தால், முதல் 3 பாராக்களைக் கலந்தாலோசிப்பதன்மூலம் ஒரு படிப்பை தொடங்குங்கள். மறுபடியும் சந்திப்பதாக உறுதியளியுங்கள்.
10 நாம் பிரசுரங்களை அளிப்பதில் மட்டுமே அக்கறையுள்ளவர்களாக இருக்கிறோம் என்று சிலசமயங்களில் நம்மை தவறாக புரிந்துகொண்டிருக்கும் ஆட்களுள்ள நன்கு ஊழியம் செய்யப்பட்ட பிராந்தியங்களிலும்கூட இந்த உலகம் தப்பிப்பிழைக்குமா? என்ற இந்தத் துண்டுப் பிரதி ஆச்சரியமானவற்றை சாதித்திருக்கிறது என ஒரு வட்டாரக் கண்காணி சொல்கிறார். எனவே, நம்பிக்கையான மனநிலையோடும் யெகோவாவை பெருமளவு சார்ந்திருப்பதன்மூலமும், நம்பிக்கையுடன் இந்தத் துண்டுப் பிரதியை உபயோகித்து சத்தியத்தின் விதைகளை விதைக்கலாம். இதையும் மற்ற துண்டுப் பிரதிகளையும் பெருமளவில் கைவசம் வைத்திருப்பதன்மூலம், நீங்கள் ஆட்களை சந்திக்கும்போதெல்லாம் சம்பாஷணையை ஆரம்பிப்பதற்கு இவற்றைப் பயன்படுத்துங்கள்.
11 ஒரு சம்பாஷணையை தொடங்குவது வெகு கடினம் என ஒருபோதும் நினைக்காதீர்கள். “நாங்கள் எங்களாலே தகுதியானவர்கள் அல்ல; எங்களுடைய தகுதி தேவனால் உண்டாயிருக்கிறது” என்று அப்போஸ்தலனாகிய பவுல் சொன்னதை நினைத்துக் கொள்ளுங்கள். (2 கொ. 3:5) ஆட்களின் உயிர்கள் ஆபத்திலிருக்கின்றன. தேவனுடைய அறிவு என்னும் திறவுகோலை உபயோகித்து நித்திய ஜீவனுக்கு போகிற வழியை அவர்களுக்குத் திறந்துவைப்பது நம்முடைய கடவுள் கொடுத்த கட்டளையாய் இருக்கிறது. எல்லா விதமான ஆட்களுக்கும், கடவுளையும் அவருடைய நோக்கத்தையும் பற்றிய திருத்தமான அறிவை அளிப்பதற்கு நம்பிக்கையான மனநிலையோடு சிறந்த விதத்தில் துண்டுப் பிரதிகளை உபயோகிப்போமாக.