முழுமையாக சாட்சி பகருவதில் பெருமகிழ்ச்சி அடையுங்கள்
1 நன்கு செய்ய முடிந்த வேலைகளைச் செய்வதில் நாம் எல்லாருமே மகிழ்ச்சியடைகிறோம். பெருங்கூட்டத்தினர் பின்வருமாறு இயேசுவைக் குறித்து அறிவித்ததாக மாற்கு 7:37 சொல்கிறது: “எல்லாவற்றையும் நன்றாய்ச் செய்தார்.” யெகோவாவின் சித்தத்தைச் செய்ததில் இயேசு பெருமகிழ்ச்சி அடைந்ததில் ஆச்சரியமேதுமில்லையே! (சங்கீதம் 40:8, NW-ஐ ஒப்பிடுக.) பின்வரும் ஆலோசனைகளுக்கு கவனம் செலுத்துவதன் மூலம், “மக்களுக்குப் பிரசங்கிக்கவும், முழுமையாக சாட்சி கொடுக்கவும்” இயேசு கொடுத்த கட்டளைக்குக் கீழ்ப்படிகையில் நாமும் மகிழ்ச்சியைக் கண்டடைவோம். (அப். 10:42, NW) பாதி விலைக்கோ விசேஷ விலைக்கோ அளிக்கும்படி பட்டியலிடப்பட்டிருக்கும் பழைய 192 பக்க புத்தகங்களில் எதையேனும் நாம் ஜனவரியில் அளிக்கிறோம். உள்ளூர் மொழியில் இத்தகைய புத்தகங்கள் இல்லையென்றால் அறிவு அல்லது குடும்ப மகிழ்ச்சி புத்தகங்கள் ஒவ்வொன்றையும் 20.00 ரூபாய்க்கு அளிப்போம். இந்தப் பிரசுரங்களை உபயோகித்து எவ்வாறு நாம் முழுமையாக சாட்சி பகரலாம்?
2 ஆட்கள் பெரும்பாலும் உடல்நலப் பிரச்சினைகளைக் குறித்து கவலைப்படுவதால், இவ்வாறு நீங்கள் கேட்கலாம்:
◼ “மருத்துவ துறையில் குறிப்பிடத்தக்க சாதனைகள் நிகழ்ந்திருக்கிற போதிலும், வியாதிகளின் காரணமாக வரும் துன்பங்கள் பெருகியிருக்கின்றன. இதன் சம்பந்தமாக உங்கள் அபிப்பிராயம் என்ன? [பதிலளிக்க அனுமதியுங்கள்.] கடைசி நாட்களின் ஓர் அடையாளமாக கொள்ளை நோய்கள் இருக்கும் என இயேசு கிறிஸ்து சொன்னார். (லூக். 21:11) இருந்தபோதிலும், வியாதியே இல்லாத ஒரு காலத்தைப் பற்றியும் பைபிள் விவரிக்கிறது. [ஏசாயா 33:24-ஐ வாசிக்கவும்.] இந்தக் கையடக்கமான புத்தகம், அடிப்படை பைபிள் போதனைகளில் எவ்வாறு நம்பிக்கையைத் தூண்டுவிக்கிறது என்பதைக் கவனியுங்கள்.” நீங்கள் காட்டும் புத்தகத்திலிருந்து பொருத்தமான குறிப்புகளை எடுத்துக் காட்டி, அதை அளியுங்கள்.
3 கடைகள் நிறைந்த பகுதிகளில் சந்தர்ப்ப சாட்சி கொடுக்கையில், வணக்கம் சொன்ன பிறகு இவ்வாறு கேட்கலாம்:
◼ “விலைவாசி இப்போதெல்லாம் எக்கச்சக்கமாக உயர்ந்துகொண்டே போவதால், வாழ்க்கை நடத்துவதே கஷ்டம் என்பதுபோல் உங்களுக்குத் தோன்றுகிறதா? [பதிலளிக்க அனுமதியுங்கள்.] உண்மையான பொருளாதாரப் பாதுகாப்பளிக்கும் காலம் எப்போதாவது வரும் என நீங்கள் நினைக்கிறீர்களா?” பதிலளிக்க அனுமதியுங்கள். நீங்கள் அளிக்கும் புத்தகத்தில் மேற்கோள் காட்டப்பட்டிருக்கும் பொருத்தமான பைபிள் வசனங்களில் ஏதேனும் ஒன்றைக் காட்டுங்கள். தொடர்ந்து இவ்வாறு சொல்லுங்கள்: “கடவுள், தம்முடைய ராஜ்யத்தின் மூலம், இன்று வாழ்க்கையை அதிக கடினமாக்குகிற பிரச்சினைகளை எப்படித் தீர்த்து வைப்பார் என்பதை இந்தப் புத்தகம் காட்டுகிறது.” புத்தகத்தை கொடுங்கள். அந்தச் சம்பாஷணையை நீங்கள் எந்தளவுக்கு மகிழ்ந்தனுபவித்தீர்கள் என்பதைக் குறிப்பிட்டு, பின்பு இவ்வாறு கேட்கலாம்: “மற்றொரு சந்தர்ப்பத்தில் நாம் இந்தச் சம்பாஷணையைத் தொடர ஏதேனும் வாய்ப்பிருக்கிறதா?” இவ்விதமாக நீங்கள் அவருடைய தொலைபேசி எண்ணையோ வீட்டு விலாசத்தையோ பெற்றுக் கொள்ளலாம்.
4 “அறிவு” புத்தகத்தை உபயோகிப்பதன் மூலம் உலக சமாதானம் சம்பந்தமான இந்தப் பிரசங்கத்தை முயற்சிசெய்ய உங்களுக்கு வாய்ப்பிருக்கலாம்:
◼ “உலக சமாதானம் எட்டாத உயரத்தில் இருப்பது சம்பந்தமாக உங்கள் அபிப்பிராயம் என்ன? [பதிலளிக்க அனுமதியுங்கள், பின்பு பக்கங்கள் 188-9-லுள்ள படத்தைக் காட்டுங்கள்.] இதைப் போன்ற [ஏசாயா 65:21-ஐ வாசிக்கவும்.] பல்வேறு பைபிள் விவரிப்புகளின் அடிப்படையில் அமைந்தது தான் இந்தப் படம். கடவுளையும் அவருடைய நோக்கங்களையும் பற்றிய உண்மையான அறிவில்லாததே இன்றைய உலகம் சமாதானமில்லாமல் இருப்பதற்கான காரணம். அந்த அறிவால் சீக்கிரத்தில் இந்தப் பூமி நிரப்பப்படும். [ஏசாயா 11:9-ஐ வாசிக்கவும்.] இப்போதே அந்த அறிவைப் பெற ஆரம்பிப்பதற்கு இந்தப் புத்தகம் உங்களுக்கு உதவும். எனவே, இதை வாங்கிக்கொள்ளும்படி உங்களை உற்சாகப்படுத்த விரும்புகிறேன்.” புத்தகத்தை அளியுங்கள்.
அறிவு மற்றும் குடும்ப மகிழ்ச்சி புத்தகங்களை இன்னும் திறம்பட்ட முறையில் அளிக்கும் வழிகளைக் காண, செப்டம்பர் 1997, ஜூன் 1997, மார்ச் 1997, நவம்பர் 1996, ஜூன் 1996 ஆகிய நம் ராஜ்ய ஊழிய பிரதிகளில் கடைசி பக்கத்தைக் காண்க.
5 அக்கறை காண்பித்தோரை மீண்டும் சென்று சந்திக்கையில், இந்த அணுகுமுறையை உபயோகிப்பதன்மூலம் நீங்கள் ஒரு பைபிள் படிப்பை ஆரம்பிக்க முயற்சி செய்யலாம்:
◼ “போன முறை நாம் பேசுகையில், நீங்கள் அக்கறையைத் தூண்டும் ஒரு குறிப்பைச் சொன்னீர்கள். [அவர் சொன்ன குறிப்பைச் சொல்லுங்கள்.] அதைக் குறித்து சிந்தித்துப் பார்த்தேன்; அந்தப் பொருளின்பேரில் நான் ஆராய்ந்த குறிப்புகளை உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். [பொருத்தமான வசனத்தைக் காட்டுங்கள்.] குறைந்த காலப்பகுதியில் அடிப்படை பைபிள் போதனைகளை ஆராய லட்சக்கணக்கான ஆட்களுக்கு வாய்ப்பளிக்கும் இலவச படிப்பு திட்டத்தை நாங்கள் நடத்துகிறோம். கடவுளுடைய வாக்குறுதிகள் நிச்சயமாக நிறைவேறும் என்பதில் உங்கள் நம்பிக்கையை இத்தகைய ஆராய்ச்சி கட்டியமைக்கும்.” பதிலளிக்கப்படப் போகும் சில கேள்விகளை எடுத்துக் காண்பியுங்கள். பைபிள் படிப்புக்கு ஒத்துக்கொள்ளவில்லை என்றால் வாரத்திற்கு 15 நிமிடம் என்ற கணக்கில் 16 வாரங்கள் நடத்தப்படும் விசேஷ கால படிப்பு திட்டமும் உண்டு என்பதை விவரியுங்கள். தேவைப்படுத்துகிறார் சிற்றேட்டை காட்டி, பாடம் 1-
க்குத் திருப்பி, முதல் பாடத்தை படிக்கும் முறையை நீங்கள் செய்துகாட்ட அவர் விரும்புகிறாரா என கேளுங்கள்.
6 கைப்பிரதிகளை உபயோகிக்க கவனமாயிருங்கள்: ஆவிக்குரிய காரியங்களில் அக்கறையைத் தூண்டுவதற்கு உங்கள் அறிமுகத்தில் அவற்றை பலன்தரத்தக்க விதத்தில் பயன்படுத்தலாம் அல்லது எந்தப் பிரசுரமும் ஏற்றுக்கொள்ளப்படாத போது அவற்றை அளிக்கலாம். அக்கறை காட்டினால், கைப்பிரதியின் பின்பக்கத்திலுள்ள அச்சடிக்கப்பட்ட செய்தியை உபயோகித்து, வீட்டு பைபிள் படிப்பை ஏற்றுக்கொள்ளும்படியும் நம்முடைய கூட்டங்களுக்கு வரும்படியும் அவரை உற்சாகப்படுத்தவும்.
7 உங்கள் சேவையில் திறமையை வளர்த்துக் கொள்ளுங்கள், அப்பொழுது அதில் நீங்கள் மகிழ்ச்சியைக் காண்பீர்கள். முழுமையாக சாட்சி பகருவதற்குத் தொடர்ந்து கவனம் செலுத்துங்கள், ஊழியத்தின் எல்லா அம்சங்களையும் திறம்பட நிறைவேற்றுவதில் பெருமகிழ்ச்சி அடையுங்கள். 1 தீ. 4:16.