வழிகாட்டும் கண்காணிகள்—நடத்தும் கண்காணி
1 சபையில் நடத்தும் கண்காணியாக சேவிப்பது மிகவும் பொறுப்புள்ள வேலை. (அப். 20:28; 1 தீ. 3:1) கிறிஸ்தவ மூப்பர்களுடைய பல்வேறு வேலைகளை விளக்கும் தொடர் கட்டுரைகளில் இது முதலாவதாகும். இதன் வாயிலாக நம் சார்பாக அவர்கள் செய்யும் முக்கியமான வேலையை நாமனைவரும் புரிந்துகொள்ள முடியும்.
2 வரையறையற்ற காலம் சேவிப்பதற்கு நடத்தும் கண்காணியை சங்கம் நியமனம் செய்கிறது. நடத்தும் கண்காணி காரியங்களை ஒருங்கிணைப்பதால், மூப்பர்கள் தங்களுக்கு நியமிக்கப்பட்ட வேலைகளுக்கு தகுந்த கவனம் செலுத்த இது உதவுகிறது. (நம் ஊழியத்தை நிறைவேற்ற ஒழுங்கமைக்கப்பட்டிருத்தல், பக். 42) இது எவற்றையெல்லாம் உட்படுத்துகிறது?
3 நடத்தும் கண்காணி சபைக்குரிய கடிதங்களைப் பெற்று, செயலர் அவற்றை கையாளுவதற்காக உடனடியாக அவருக்கு அனுப்புகிறார். மூப்பர் கூட்டங்களுக்காக நடத்தும் கண்காணி தயார்செய்கையில், கலந்தாலோசிக்க வேண்டிய விஷயங்களைப் பற்றி மூப்பர்களிடமிருந்து ஆலோசனைகள் பெற்று அஜண்டா தயாரிக்கிறார். மூப்பர் கூட்டங்களில் சேர்மேனாகவும் இருக்கிறார். தீர்மானங்கள் செய்யப்படும்போது, அவை நிறைவேற்றப்படுவதை உறுதிப்படுத்திக்கொள்கிறார். ஊழியக் கூட்டத்திற்கு தயாரிப்பதையும் பொதுப் பேச்சுகளுக்காக அட்டவணை போடுவதையும் கண்காணிக்கிறார். சபைக்கு அறிவிக்கப்படும் எல்லா அறிவிப்புகளுக்கும் அங்கீகாரம் வழங்குகிறார்; வழக்கமான எல்லா செலவுகளுக்கும் பணம் செலுத்துவதற்கும் அதிகாரம் கொடுக்கிறார்; சபை கணக்குகள் மூன்று மாதத்திற்கு ஒருமுறை ஆடிட் செய்யப்படுவதையும் நிச்சயப்படுத்திக்கொள்கிறார்.
4 நடத்தும் கண்காணி சேர்மேனாக சபை ஊழியக் குழுவின் வேலையை ஒருங்கிணைக்கிறார். பைபிள் மாணாக்கர் ஒருவர் முழுக்காட்டப்படாத பிரஸ்தாபியாக அங்கீகரிக்கப்படும்படி கேட்டுக்கொள்ளும்போது அல்லது முழுக்காட்டப்படாத பிரஸ்தாபி முழுக்காட்டுதல் பெற விரும்பும்போது, மூப்பர்கள் அவரை சந்தித்துப் பேசுவதற்கு நடத்தும் கண்காணி ஏற்பாடு செய்கிறார். வட்டாரக் கண்காணியின் விஜயத்திற்காக தயாரிப்பதிலும் நடத்தும் கண்காணி முன்நின்று வழிநடத்துகிறார்; இதன்மூலம் அந்த விசேஷ வாரத்திற்கான ஊழிய நடவடிக்கையிலிருந்து சபை முழுப் பயனை பெறமுடியும்.
5 நடத்தும் கண்காணிக்கு பல வேலைகள் உள்ளன, அவை பலவகையாகவும் உள்ளன. அவருடைய பொறுப்புகளை ‘உண்மையான ஊக்கத்தோடு’ மனத்தாழ்மையுடன் செய்கையில், மூப்பர்களுடன் ஒத்துழைப்பதன் மூலம் நாம் அனைவரும் நம்முடைய பாகத்தைச் செய்யலாம். (ரோ. 12:8, NW) நம்மை வழிநடத்திச் செல்கிறவர்களுக்கு ‘கீழ்ப்படிந்து அடங்கியிருந்தால்,’ அவர்கள் தங்களுடைய வேலையை உண்மையான சந்தோஷத்தோடு பேரளவில் செய்ய முடியும்.—எபி. 13:17.