உங்கள் வாழ்க்கை யெகோவாவுடைய சேவையை மையமாக கொண்டிருப்பதாக
1 தமது போதகத்திற்கு செவிகொடுப்பவர்களை இயேசு வித்தியாசமான இரண்டு வகையினருக்கு ஒப்பிட்டார். இயேசுவுக்கு கீழ்ப்படிந்து கன்மலையின்மேல் தன் வீட்டைக் கட்டினவன் புத்தியுள்ள மனுஷன். இவனால் பெரும்புயலான எதிர்ப்புகளையும் இன்னல்களையும் வெற்றிகரமாக சமாளிக்க முடிந்தது. தன் வீட்டை சுயநலமான கீழ்ப்படியாமையென்னும் மணலின்மேல் கட்டினவன் புத்தியில்லாத மனுஷன்; இவனால் வாழ்க்கையில் அழுத்தங்களை எதிர்த்து நிற்க முடியவில்லை. (மத். 7:24-27) இக்காரிய ஒழுங்கு முறையின் முடிவில் வாழும் நாம், பெரும்புயல் போன்ற அனேக இன்னல்களை எதிர்ப்படுகிறோம். அதிவேகமாக நெருங்கி வரும் பெரிய ஆபத்தே மிகுந்த உபத்திரவம். நம்முடைய விசுவாசத்தில் இறுதிவரையாக கொஞ்சம்கூட குறைவுபடாமல் நாம் நிலைத்திருப்போமா? (மத். 24:3, 13, 21) இன்று நமது வாழ்க்கையை அமைக்கும் விதத்திலேயே இது முழுவதுமாக சார்ந்திருக்கிறது. ஆகவே ‘கடவுளுக்கு கீழ்ப்படிதலுள்ள சேவையை மையமாக வைத்து எனது கிறிஸ்தவ வாழ்க்கையை நான் பலமாக அமைக்கிறேனா?’ என நாம் கேட்டுக்கொள்வது மிகவும் அவசியம்.
2 யெகோவாவுடைய சேவையை மையமாக வைத்து உங்கள் வாழ்க்கையை அமைப்பது என்றால் என்ன? இது யெகோவாவை நம்முடைய வாழ்க்கையில் அச்சாணியாக வைப்பதைக் குறிக்கிறது. மேலும் ராஜ்யத்துக்கு முதலிடம் கொடுப்பதையும் இது உட்படுத்துகிறது. நம்முடைய அன்றாட வாழ்க்கையின் எல்லா நடவடிக்கைகளிலும் கடவுளுக்குக் கீழ்ப்படிய வேண்டும். தனிப்பட்ட விதமாக, குடும்பமாக, சபையாக முழு இருதயத்தோடு பைபிள் படிப்பதற்கும் ஊழியத்தில் ஈடுபடுவதற்கும் முக்கியத்துவம் கொடுப்பதை இது அவசியப்படுத்துகிறது. (பிர. 12:13; மத். 6:33) இப்படிப்பட்ட கீழ்ப்படிதலுள்ள நடத்தையால் கன்மலையின்மேல் தன் வீட்டைக் கட்டினவனுக்கு ஒப்பான விசுவாசத்தை நாம் வளர்க்க முடியும். இது பெரும்புயல் போன்ற எப்படிப்பட்ட இன்னல்கள் தாக்கினாலும் வீழ்ந்துபோகாது.
3 இயேசு செய்த விதமாகவே, கடவுளுடைய சேவையை மையமாக வைத்து, லட்சக்கணக்கான மக்கள் உறுதியோடு தங்களுடைய வாழ்க்கையையும் எதிர்காலத்திற்கான நம்பிக்கையையும் அமைத்திருப்பதை பார்ப்பதில் மகிழ்ச்சியாக இருக்கிறது. (யோவா. 4:34) இவர்கள் தேவராஜ்ய நடவடிக்கைகளில் அட்டவணையை ஒழுங்காக பின்பற்றுவதால் முழுநிறைவான ஆசீர்வாதங்களை அனுபவிக்கின்றனர். இதற்கு எடுத்துக்காட்டாக, தங்களுடைய இரண்டு மகன்களையும் யெகோவாவை சேவிக்க வைப்பதில் வெற்றி கண்ட பெற்றோர் சொல்லுவதை கவனியுங்கள். முதலில் தாய்: “நாங்கள் எல்லா மாநாடுகளுக்கும் சென்றோம், கூட்டங்களுக்கு தயாரித்து ஆஜரானோம், வெளி ஊழியத்தை வாழ்க்கையின் ஒரு ஒழுங்கான பாகமாக்கிக் கொண்டோம். இப்படிப்பட்ட நடவடிக்கைகள் மூலமாக எங்களுடைய வாழ்க்கையை சத்தியத்தால் நிறைவாக்கினோம்.” தகப்பன் பின்வருமாறு கூறினார்: “சத்தியம் எங்களுடைய வாழ்க்கையின் பாகமாக அல்ல. அதுவே எங்கள் வாழ்க்கையின் உயிர்மூச்சு. மற்ற அம்சங்கள் இதைச் சுற்றியே இருக்கின்றன.” இதேவிதமாக உங்களுடைய குடும்பத்தில் யெகோவாவின் சேவையை முதலிடத்தில் நீங்கள் வைக்கிறீர்களா?
4 நடைமுறைக்கு ஒத்துவரும் அட்டவணையை தயாரியுங்கள்: வாரத்திற்கு ஐந்து கூட்டங்களை ஏற்பாடு செய்வதன் மூலமாக நல்ல ஆவிக்குரிய செயல்களை வழக்கமாக செய்ய யெகோவாவின் அமைப்பு உதவிசெய்கிறது. யெகோவாவின் வணக்கத்தை மையமாக வைத்து தங்களுடைய வாழ்க்கையை அமைக்கும் கிறிஸ்தவர்கள் இந்த எல்லா முக்கியமான கூட்டங்களிலும் கலந்துகொள்வதற்காக தங்களுடைய வேலைகளையும் குடும்ப விவகாரங்களையும் முன்கூட்டியே திட்டமிடுகின்றனர். அவ்வளவு முக்கியமில்லாத வேறு எந்த நடவடிக்கைகளும் இவர்கள் கூட்டங்களில் கலந்துகொள்வதை தடுக்க அனுமதிப்பதில்லை.—பிலி. 1:10, NW; எபி. 10:25.
5 ஒவ்வொரு நாளும் தவறாமல் குறிப்பிட்ட நேரத்தில் சாப்பிடுவது அவசியம். அதேபோல கூட்டங்களுக்கு தயாரிப்பது உட்பட தனிப்பட்ட மற்றும் குடும்பப் படிப்பிற்கு திட்டவட்டமான அட்டவணையை தயாரிப்பது மிகவும் அவசியம் என்பதை முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவர்கள் ஒப்புக்கொள்ளுகிறார்கள். (மத். 4:4) தினந்தோறும் தனிப்பட்ட படிப்பிற்காக குறைந்தபட்சம் 15 அல்லது 20 நிமிடம் ஒதுக்க முடியுமா? படிப்பிற்காக ஒதுக்கப்பட்ட நேரத்தை மற்ற நடவடிக்கைகள் ஆக்கிரமிக்காமல் பார்த்துக்கொள்வதே வெற்றியின் இரகசியம். இதை ஒரு பயனளிக்கும் பழக்கமாக்கிக் கொள்ளுங்கள். இதற்காக காலையில் சற்று சீக்கிரமாகவே எழுந்திருக்க வேண்டி வரலாம். உலகெங்கிலுமுள்ள 17,000 பெத்தேல் குடும்பத்தினர்கள் தினவாக்கியத்தை கலந்தாலோசிப்பதற்காக காலையில் சீக்கிரமாகவே எழுந்து விடுகின்றனர். ஆனால் நீங்கள் அடுத்த நாள் சீக்கிரமாக எழுந்திருக்க விரும்பினால் இரவில் போதுமான நேரம் ஓய்வெடுக்க வேண்டும்.
6 நீங்கள் ஒரு குடும்பத் தலைவரா? அப்படியானால் தேவராஜ்ய நடவடிக்கைகளுக்கான உங்களுடைய குடும்பத்தின் அட்டவணையை நீங்கள் முன்னின்று திட்டமிட்டு செயல்படுத்துங்கள். சில குடும்பங்களில் இரவு சாப்பாட்டை முடித்தபிறகு ஓய்வாக இருக்கும்போது பைபிளையோ வருடாந்தர புத்தகத்தையோ அல்லது மற்ற பிரசுரங்களையோ படிக்கின்றனர். அனேக பெற்றோர் தங்கள் பிள்ளைகள் ஆவிக்குரியவிதமாக பலமான கிறிஸ்தவர்களாகியிருப்பதை பார்த்திருக்கின்றனர். இந்த வெற்றியின் இரகசியம்தான் என்ன? வாராவாரம் ஒருநாள் சாயங்காலத்தில் ஆவிக்குரியவிதமாக பலப்படுத்தும் வகையில் குடும்பமாக ஒன்றுசேர்ந்து நேரத்தை செலவழிப்பதைப் பழக்கமாக செய்துவந்ததே காரணம். இப்படி செய்த ஒரு தகப்பனார் கூறினார்: “இது 30 வருடங்களுக்கு முன்பாக ஆரம்பித்தது. ஒவ்வொரு புதன்கிழமை இரவும் நாங்கள் தவறாமல் குடும்பப் படிப்பை நடத்தினோம். இன்று எங்களுடைய பிள்ளைகள் ஆவிக்குரிய வாழ்க்கையில் நன்கு வளர்ந்திருப்பதற்கு இதுவே முக்கிய காரணம்.” இவருடைய மூன்று பிள்ளைகளும் தங்களுடைய சிறுவயதிலேயே முழுக்காட்டுதல் பெற்று, அனைவரும் முழுநேர ஊழியத்தை ஆரம்பித்தனர். குடும்பப் படிப்போடு சேர்த்து, வெளி ஊழியத்தில் பேசும் முறைகளையும், கூட்டங்களில் பங்கேற்கும் பாகங்களையும் பழகிப்பார்க்கலாம். குடும்பமாக அனுபவிப்பதற்கு எவ்வளவோ பிரயோஜனமான நடவடிக்கைகள் இருக்கின்றன.
7 உங்களுடைய வாராந்திர அட்டவணையில் ராஜ்ய பிரசங்கிப்புக்காக ‘நேரத்தை விலைக்கு வாங்கி’யிருக்கிறீர்களா? (கொலோ. 4:5, NW) நம்மில் அநேகர் வாழ்க்கையில் ரொம்ப பிஸியாக இருக்கிறோம். மேலும், எல்லாருக்குமே குடும்ப மற்றும் சபை பொறுப்புகள் ஏராளம் இருக்கின்றன. ஆகவே வாராவாரம் பிரசங்கிப்பதற்கும் போதிப்பதற்கும் திட்டவட்டமான ஏற்பாடுகளை செய்யவேண்டும். இல்லையெனில் மற்ற நடவடிக்கைகள் இந்த முக்கியமான வேலையை நாம் செய்வதிலிருந்து நம்மை தடுத்துவிடும். ஒரு பெரிய கால்நடை வளர்ப்புப் பண்ணையின் சொந்தக்காரர் இவ்வாறு சொன்னார்: “இதை 1944-ல் தீர்மானித்தேன். ஊழியத்திற்கு செல்லவேண்டும் என்றால் குறிப்பிட்ட தினத்தை அதற்காக ஒதுக்கிவைத்துவிட வேண்டும். இன்றுவரையாக வாரத்தின் ஒரு நாளை ஊழியத்திற்காக ஒதுக்கிவைக்கிறேன்.” ஒரு கிறிஸ்தவ மூப்பர் திட்டவட்டமான அட்டவணையை வைத்திருப்பது பலனளிக்கிறது என்பதாக சொல்லுகிறார். ஆம், சராசரியாக மாதத்திற்கு 15 மணிநேரம் ஊழியத்தில் இவர் செலவழிக்கிறார். சனிக்கிழமையில் ஏதாவது வேலை வந்துவிட்டால், காலையில் வெளிஊழியத்தில் கலந்துகொண்ட பிறகு அதைக் கவனிக்கிறார். நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் வாரத்தில் குறைந்தபட்சம் ஒரு நாளையாவது வெளி ஊழியத்திற்காக ஒதுக்கிவைக்கிறீர்களா? இதை உங்கள் ஆவிக்குரிய வாழ்க்கையின் ஒரு பாகமாக ஏன் ஆக்கிக்கொள்ளக்கூடாது?—பிலி. 3:16.
8 உங்களது அன்றாட வழக்கமான அட்டவணையை நன்கு ஆராய்ந்து பாருங்கள்: நம்முடைய வாழ்க்கையில் யெகோவாவின் சேவையை மையமாக வைப்பதை தடைசெய்யும் சூழ்நிலைகளும் அவ்வப்போது ஏற்படுன்றன. ஒருவேளை, படிப்பதற்காகவும் கூட்டத்திற்காகவும் ஊழியத்திற்காகவும் நாம் கவனமாக திட்டமிட்டு இருப்போம். எதிர்பாராத சம்பவங்கள் குறுக்கே புகுந்து எல்லாவற்றையும் கெடுத்துவிடும். நம்முடைய பரம எதிரியாகிய சாத்தான் நம்முடைய திட்டங்களை “தடைபண்ணி” அவற்றை சுக்குநூறாக்க தன்னால் இயன்ற அனைத்தையும் செய்வான். (1 தெ. 2:18; எபே. 6:12, 13) நீங்கள் விட்டுகொடுத்துவிடுமளவுக்கு இப்படிப்பட்ட தடங்கல்கள் உங்களை உற்சாகமிழக்கச் செய்துவிட அனுமதிக்காதீர்கள். தேவராஜ்ய நடவடிக்கைக்காக நீங்கள் தயாரித்திருக்கும் அட்டவணையின்படி செய்வதற்காக தேவையான அனைத்து மாற்றங்களையும் செய்யுங்கள். தீர்மானத்தில் உறுதியாக விடாப்பிடியாக தொடர்ந்து நிலைத்திருப்பது மிகவும் அவசியம். இவ்வாறு செய்வது உண்மையில் பிரயோஜனமானது.
9 உலக செல்வாக்கும் நமது அபூரண மாம்சத்தின் தீய சக்தியும் கொஞ்சம் கொஞ்சமாக, நம்முடைய எல்லா நேரத்தையும் கவனத்தையும் ஆக்கிரமித்துக் கொண்டு நம்மை ஆவிக்குரியதல்லாத நடவடிக்கைகளுக்கு வழிநடத்திவிடும். ஆகவே பின்வரும் கேள்விகளை பயன்படுத்தி சுய பரிசோதனை செய்வது அவசியம்: ‘என்னுடைய வாழ்க்கைப்பாணி கொஞ்சம் கொஞ்சமாக சமநிலையை இழந்து வருவதுபோல் தோன்றுகிறதா? ஆவிக்குரிய நடவடிக்கைகளிலிருந்து என்னுடைய கவனம் சிதறுகிறதா? அழிந்துபோகக்கூடிய இந்த உலக நடவடிக்கைகளை மையமாக வைத்தே என் வாழ்க்கை சுழலும்படி அனுமதித்திருக்கிறேனா? (1 யோ. 2:15-17) தனிப்பட்ட நாட்டங்களுக்காகவும் சுற்றுலாவுக்காகவும் விளையாட்டு சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளுக்காகவும் டெலிவிஷன் முன்பாகவும் இன்டர்நெட்டில் மேலெழுந்தவாரி தேடுவதற்காகவும் எவ்வளவு நேரத்தை செலவு செய்கிறீர்கள்? இப்பொழுது ஆவிக்குரிய நடவடிக்கைகளுக்காக நீங்கள் எவ்வளவு நேரம் செலவு செய்கிறீர்கள் என்பதை இதோடு கொஞ்சம் ஒப்பிட்டுப் பாருங்கள்?’
10 உங்களுடைய வாழ்க்கை தேவையற்ற நடவடிக்கைகளால் குப்பைக்கூளம்போல நிரம்பி வழிகிறதென்றால் அப்பொழுது என்ன? பவுல் தனது சகோதரர்களுக்காக ஜெபித்தது போல, நீங்கள் “நற்சீர் பொருந்தும்படிக்கு” அல்லது “சரியான பாதையில் ஒழுங்குபடுத்தும்படிக்கு” ஏன் யெகோவாவிடம் ஜெபிக்கக்கூடாது? (2 கொ. 13:9, 11, NW அடிக்குறிப்பு) நீங்கள் எதை செய்ய தீர்மானித்திருக்கிறீர்களோ அதற்கேற்ப வாழ்வதற்கு திடத்தீர்மானமாயிருங்கள். மேலும் அவசியமான சரிப்படுத்துதல்களையும் செய்யுங்கள். (1 கொ. 9:26, 27) கீழ்ப்படிதலோடு சேவை செய்வதிலிருந்து வழிவிலகாதபடிக்கு கடவுள் உங்களுக்கு உதவுவார்.—ஏசாயா 30:20, 21-ஐ ஒப்பிடுக.
11 கடவுளுடைய மகிழ்ச்சியான சேவையில் சுறுசுறுப்பாயிருங்கள்: லட்சக்கணக்கானோர் மகிழ்ச்சிக்காக நம்பிக்கையில்லாமல் தேடி அலைகின்றனர். பொருட்செல்வங்கள் மகிழ்ச்சியை கொண்டுவரும் என நினைத்து அதற்குப் பின்னாலேயே ஓடி ஓடி அலைந்தவர்கள், அவை நீடித்திருக்கும் மகிழ்ச்சியை கொண்டுவரவில்லை என்பதை தங்கள் வாழ்க்கையின் முடிவில் உணர்ந்திருக்கின்றனர். “அவை அனைத்தும் காற்றைப் பிடிக்க முயல்வதற்கு ஒப்பா[ய்]” இருந்திருக்கிறது. (பிர. [சபை உரையாளர்] 2:11, பொது மொழிபெயர்ப்பு) மறுபட்சத்தில், யெகோவாவை மையமாக வைத்து நமது வாழ்க்கையை அமைக்கையில், அதாவது, ‘கர்த்தரை எப்பொழுதும் . . . முன்பாக வைத்திருக்கும்போது’ நாம் ஆழ்ந்த மனதிருப்தியை அனுபவிப்போம். (சங். 16:8, 11) ஏனெனில் இன்று நாம் உயிருடன் இருப்பதற்கு காரணமே யெகோவா தேவன்தான். (வெளி. 4:11) கடவுள் மிகச்சிறந்த நோக்கமுடையவர். இவரில்லாமல் நமது வாழ்க்கை பூஜ்யமே. யெகோவாவைச் சேவிப்பது நமது வாழ்க்கையை மதிப்புள்ளதாக்குகிறது. நோக்கமுள்ள இந்த நடவடிக்கை நமக்கும் மற்றவர்களுக்கும் நீண்ட காலத்திற்கு ஆம், நித்திய காலத்திற்கு பலனை கொண்டுவரும்.
12 மின்னல் வேகத்தில் நெருங்கிக்கொண்டிருக்கும் சாத்தானுடைய உலகின் முடிவைக்குறித்து மந்தமாக இருப்பதனால் நம்முடைய அவசர உணர்வை நாம் கோட்டைவிடக்கூடாது. எதிர்காலத்தைப்பற்றிய நோக்குநிலையின் அடிப்படையிலேயே நம்முடைய அன்றாட வாழ்க்கை பெரும்பாலும் அமைகிறது. நோவாவின் காலத்தில் உலகளாவிய பெருவெள்ளம் வரும் என்பதாக மக்கள் நம்பவேயில்லை. வாழ்க்கையில் தங்களுடைய தனிப்பட்ட நாட்டங்களை மையமாக்கி ஜனங்கள் புசித்தும் குடித்தும், பெண்கொண்டும் பெண்கொடுத்தும், ஜலப்பிரளயம் வந்து “அனைவரையும் வாரிக்கொண்டுபோகுமட்டும் உணராதிருந்தார்கள்.” (மத். 24:37-39) “கர்த்தருடைய நாள்” மனிதன் ஒருபோதும் அனுபவித்திராத மகா பேரழிவாக இருக்கும். அப்பொழுது, தங்களுடைய வாழ்க்கையில் இந்த உலகத்தை மையமாக கொண்டிருந்தவர்கள், அவர்களுடைய எதிர்காலத்திற்கான நம்பிக்கை சுக்குநூறாகிப்போவதை காண்பார்கள்.—2 பே. 3:10-12.
13 உயிருள்ள கடவுளாகிய யெகோவாவை மையமாக அமைத்து அவருடைய விருப்பத்தை செய்வதன் மூலமாக உங்களுடைய வாழ்க்கையில் முன்னேறிக்கொண்டே இருங்கள். நம்பத்தகுந்த உதவியாளராகிய யெகோவாவைக்காட்டிலும் இந்த உலகில் நீங்கள் வேறு யாரிடத்தில் உயிருக்காக முதலீடு செய்யமுடியும்? கடவுள் பொய் சொல்லவே மாட்டார். தன்னுடைய வாக்குறுதிகளை நிச்சயம் அவர் நிறைவேற்றுவார். (தீத். 1:3) யெகோவா ஒருபோதும் மரணமடைய மாட்டார். ஆகவே அவரிடம் நாம் வைத்துள்ள நம்பிக்கை வீண்போகாது. (ஆப. 1:12, NW; 2 தீ. 1:12) இன்று நம்முடைய வாழ்க்கையில் நாம் கடவுளுக்கு கீழ்ப்படிந்து விசுவாசித்து நடப்போமாக. நித்தியானந்த தேவனுக்கு நாம் நித்திய காலத்திற்கு செய்யப்போகும் சந்தோஷமான சேவையின் வெறும் ஆரம்பமே இது!—1 தீ. 1:11; 6:19.
[பக்கம் 3-ன் சிறு குறிப்பு]
“சத்தியம் எங்களுடைய வாழ்க்கையின் பாகமாக அல்ல. அதுவே எங்கள் வாழ்க்கையின் உயிர்மூச்சு.
வாழ்க்கையின் மற்ற அம்சங்கள் இதைச் சுற்றியே இருக்கின்றன.”