‘பேசாமலிருக்க முடியாது’
1 பிரசங்க வேலையை இயேசு கிறிஸ்து உன்னிப்பாய் கண்காணித்து வருகிறார். (மத். 28:20; மாற். 13:10) இந்தப் பிரசங்க வேலை இன்று 234 நாடுகளில் செய்யப்படுகிறது. கிட்டத்தட்ட அறுபது லட்சம் ராஜ்ய அறிவிப்பாளர்கள் சுறுசுறுப்பாய் இதைச் செய்து வருகின்றனர். இருந்தாலும், சாட்சி கொடுக்கும் வேலை முடிந்துவிட்டது என நாமே முடிவு செய்யக்கூடாது. வேலை முடிந்தது என கடவுள் சொல்கிற வரையில், நாம் கற்பவற்றை ‘பேசாமலிருக்கக் கூடாது.’—அப். 4:20.
2 கடவுளுடைய ஆவியின் மேல் சார்ந்திருத்தல்: நாம் சோர்வடைய வேண்டுமென சாத்தான் பெரும் தொல்லைகளை கொண்டுவருவான். (வெளி. 12:17) நம் அபூரண தன்மையால் வரும் கஷ்டங்களும் கொஞ்சநஞ்சமல்ல. இவை அனைத்தும், அதிமுக்கியமான பிரசங்க வேலையிலிருந்து நம் கவனத்தை திசை திருப்பிவிடும். ஆனால், யெகோவாவில் நாம் முழுக்க முழுக்க நம்பிக்கை வைத்தால், எந்த தடையையும் தகர்த்தெறிய அவருடைய ஆவி நமக்கு உதவும்.
3 முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களுக்கும் இதுவே நேரிட்டது. அவர்கள் கடும் துன்புறுத்துதலை எதிர்ப்பட்டனர். அப்போது, கடவுளுடைய வார்த்தையை தொடர்ந்து தைரியமாக பேசுவதற்கு உதவும்படி கடவுளிடம் ஜெபித்தனர். அவர்களுடைய ஜெபத்தை யெகோவா கேட்டார். தம் ஆவியை அவர்களுக்கு தந்து, தொடர்ந்து பிரசங்கிப்பதற்கான தைரியத்தையும் உற்சாகத்தையும் கொடுத்தார். அதனால், நற்செய்தியை தொடர்ந்து தைரியமாக அறிவிக்க அவர்களால் முடிந்தது.—அப். 4:29, 31; 5:42.
4 சோர்வூட்டும் பேச்சுக்கு பயப்படாதீர்கள்: நம்மைப் பற்றி பொதுவாக நிலவும் அபிப்பிராயத்தை அல்லது அவதூறான செய்திகளைக் கேட்டு ஒருவேளை நாம் மிரண்டு விடலாம். என்றாலும், பேதுருவும் மற்ற அப்போஸ்தலர்களும் ஆலோசனை சங்கத்தில் தைரியமாக பேசியதை ஞாபகப்படுத்திக்கொள்ளுங்கள். அது அப்போஸ்தலர் 5:29-32-ல் பதிவு செய்யப்பட்டுள்ளது. நியாயசாஸ்திரியாகிய கமாலியேல் ஒத்துக்கொண்டது போல, கடவுளுடைய வேலையை எவராலும் தடுத்து நிறுத்த முடியாது. இது நம் பெலத்தால் முடிக்கக்கூடிய வேலையல்ல. இந்த மாபெரும் வேலை கடவுளுடைய உதவியால்தான் செய்யப்படுகிறது. எனவே, அவர்தான் இதை முழுமையாக நிறைவேற்ற முடியும்!—சக. 4:6.
5 நற்செய்தியை வைராக்கியத்தோடு அறிவிப்பதற்கு உதவும் அவருடைய ஆவிக்காக தினமும் யெகோவாவிடம் மன்றாடுவோமாக. எரேமியா சொன்னது போலவே நாமும் ராஜ்ய செய்தி நம் எலும்புகளில் பற்றியெரியும் அக்கினியாய் இருக்கிறது என சொல்வோமாக. (எரே. 20:9) நாம் பேசாமல் இருக்கவே முடியாது!