இளைஞருக்கு பலனளிக்கும் கூட்டங்கள்
1 “வாழ்க்கையில அதிக கஷ்டப்படறது வாலிபர்கள்தான்னு நான் சிலசமயத்தில நினைக்கிறேன். ஏன்னா, எங்கள சுத்தி இருக்கிறவங்க யாருன்னா வேசித்தனம் செய்யறவங்க, போதை வஸ்துகள் உபயோகிக்கிறவங்க, தண்ணியடிக்கறவங்கதான்” என்றாள் ஒரு பருவ மங்கை. நீயும் அப்படிதான் நினைக்கிறாயா? அப்படியென்றால், இந்த கெட்ட சகவாசங்களை எதிர்க்க எது உதவும் என நினைக்கிறாய்? உனக்கு விசுவாசம் வேண்டும்; அதுவும், யெகோவாவின் வழிகள் நீதியானவைதான் என்ற திடமான விசுவாசம் வேண்டும். இதுமட்டும் இல்லாவிட்டால், “தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாத காரியம்.” (எபி. 11:6) உன் கிறிஸ்தவ நம்பிக்கையில் பலப்படுவதற்கும் தீமையை வெறுப்பதில் உறுதியாய் நிலைநிற்பதற்கும் கிறிஸ்தவ கூட்டங்களில் கலந்துகொள்வது உனக்கு உதவும்.
2 கூட்டங்களில் நிறைய கற்றுக்கொள்ளலாம்: அருமையான உணவு நம் கைவசம் இருந்தால் தானாகவே சந்தோஷம் வந்துவிடுமா? ஆரோக்கியமான உணவு அருமையான நண்பர்களுடன் இதமான சூழ்நிலையில் கிடைக்க வேண்டும். அதே போன்ற இதமான அனுபவத்தை கூட்டங்களிலும் நாம் அனுபவிக்கலாம்; ஆம் ஆன்மீக ரீதியாக.
3 கூட்டங்களில் சொல்லப்படும் விஷயங்கள் அறிவை வளர்க்கின்றன. அன்றாடம் எதிர்ப்படும் பிரச்சினைகளை சமாளிப்பதிலிருந்து மனதைக் கவரும் பைபிள் தீர்க்கதரிசனங்களைப் பற்றிய ஆழமான விஷயங்கள் கற்றுக்கொள்வது வரை பலதரப்பட்ட விஷயங்கள் கலந்தாராயப்படுகின்றன. சிறப்புமான வாழ்க்கை வாழ்வது எப்படி?, நீ எதிர்ப்படும் சவால்களை சமாளிப்பது எப்படி? என்ற நடைமுறையான அறிவுரைகளை நீ அங்கு கற்றுக்கொள்ளலாம். கூட்டங்களுக்குச் சென்றால் மிகச் சிறந்த நண்பர்கள் உனக்குக் கிடைப்பார்கள்; அந்த ஆன்மீக சூழல் இதமானது, பாதுகாப்பானது. (சங். 133:1) இது ஒன்றும் ஆச்சரியமான விஷயமல்ல. இந்தப் பருவ மங்கை சொல்வதைக் கேளுங்கள்: “நாள் முழுக்க ஸ்கூல்ல நிறைய பிரச்சினைகள் அழுத்தும்போது சோர்ந்துபோறேன். ஆனால் கூட்டங்களுக்கு வரும்போது அது எனக்கு பாலைவன சோலையாக தெரியுது. அடுத்த நாள் ஸ்கூலுக்கு போக புதுதெம்பே எனக்கு அங்குதான் கிடைக்குது.” இன்னொரு இளம் பெண் சொல்வதாவது: “யெகோவாமீது அன்பு வைச்சிருக்கிற மற்றவங்களோட நெருங்கி பழகறது கடவுள்கிட்ட நெருங்கி வர எனக்கு ரொம்ப உதவியா இருக்கு.”
4 நீ தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் சேர்ந்துகொண்டால், பைபிள் தகவலை சேகரிக்கவும், அதை பேச்சாக தயாரித்து ராஜ்ய மன்றத்தில் உள்ள பார்வையாளர்களுக்கு முன்பாக சம்பாஷிக்கும் விதத்தில் பேச்சுக் கொடுக்கவும் கற்றுக்கொள்வாய். கடவுளுடைய வார்த்தையிலுள்ள உயிர்காக்கும் சத்தியத்தை திறம்பட்ட விதத்தில் கற்பிப்பதற்கு பயிற்சி பெறுகையில் கிடைக்கும் பயனை சற்று யோசித்துப் பார்! இத்தனை மதிப்புமிக்க பயிற்சி இளைஞர்களுக்கு வேறு எங்கு கிடைக்கும்?
5 கூட்டங்களிலிருந்து முழுமையாய் பயனடைதல்: கூட்டங்களிலிருந்து முழுமையாய் பயனடைய மூன்று காரியங்கள் முக்கியம். அவை தயாரிப்பது, பங்கெடுப்பது, பின்பற்றுவது.
6 அவற்றிற்காக தயாரியுங்கள்: தவறாமல் கூட்டங்களுக்காக தயாரிப்பதற்கு நேரத்தை ஒதுக்கி வை. ஒவ்வொரு கூட்டத்திலும் கலந்தாலோசிக்கப்படும் விஷயங்களை முன்கூட்டியே தயாரிப்பதற்கு தேவையான நேரத்தை ஹோம்வொர்க், பார்ட்-டைம் வேலை அல்லது பொழுதுபோக்குகள் போன்றவற்றிற்கு செலவழித்துவிடாதே. கூட்டங்களுக்கு தயாரிப்பதை ஒரு பழக்கமாக்கிக் கொள்வது நல்லது. முதல் முக்கியமான காரியம், தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் உள்ள வாராந்தர பைபிள் வாசிப்பு பகுதியை தவறாமல் படிப்பது. ஒதுக்கப்பட்டுள்ள அதிகாரங்களை வாசித்து தியானிக்க ஒவ்வொரு நாளும் சில நிமிடங்களை செலவழித்தாலே போதும். சபை புத்தக படிப்புக்கும் காவற்கோபுர படிப்புக்கும் தயாரிக்க நேரத்தை ஒதுக்கு. கூட்டங்களுக்கு ஓரிரு தினங்களுக்கு முன்னர் சிலர் தயாரிக்கின்றனர். முடிந்தமட்டும், ஒவ்வொரு வாரமும் இதேபோல ஊழிய கூட்டத்திற்கான பகுதிகளையும் தயாரிக்க திட்டமிடு.
7 அவற்றில் பங்கெடு: பன்னிரண்டு வயதில் இயேசு தேவாலயத்தில் செவிகொடுத்து கேட்டார், கேள்விகளை கேட்டார், பதில்களை சொன்னார் என பைபிள் குறிப்பிடுகிறது. (லூக். 2:46, 47) சொல்லப்போனால், அவர் முழுக்க முழுக்க அதில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார். கூட்டங்களில் பங்கெடுக்க நீ முயற்சி செய்தால் அவற்றிலிருந்து பெறும் பயனடைய முடியும்.—நீதி. 15:23.
8 கூட்டங்களில் பேசப்படும் விஷயங்களுக்கு நீ தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டும். சிலசமயங்களில், பேச்சுக் கொடுப்பது எளிதாக இருக்கும் செவிகொடுத்து கேட்பதைவிட. ஏன்? ஏனெனில், வேறு யாரேனும் பேச்சுக் கொடுக்கையில் உன் மனம் அலைபாயலாம். இதை நீ எப்படி சமாளிக்கலாம்? குறிப்புகளை எழுதிக் கொள்வதன் மூலம். வேறொரு சமயம் திருப்பிப் பார்ப்பதற்கு வசதியாக முக்கிய குறிப்புகளை எழுதிக்கொள். குறிப்பெடுத்தல் உன் மனதை நிகழ்ச்சிநிரலை விட்டு அகலாமல் இருக்கும்படி கட்டிப்போட்டுவிடும். மேலும், சொல்லப்படும் வசனங்களை பைபிளில் திருப்பிப் பார், பேச்சாளர் வாசிக்கையில் அதை உன் பைபிளில் கவனி.
9 அதுமட்டுமல்ல, கூட்டங்களில் கேள்வி பதில் பகுதியில் கண்டிப்பாக பதில் சொல்ல வேண்டும் என்பது உன் தீர்மானமாய் இருக்கட்டும். பதில் சொல்வதற்காக கவனமாய் யோசிக்கையில் இன்னும் அதிக பயனடைவாய். ஏனெனில், “நீதிமானுடைய மனம் பிரதியுத்தரம் சொல்ல யோசிக்கும்” என நீதிமொழிகள் 15:28 சொல்கிறது.
10 நீ கற்றுக்கொண்டதை பின்பற்று: கடைசியாக, நீ கற்றுக்கொள்வது உன்னில் “கிரியை செய்”யும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். (1 தெ. 2:13, NW) ஒவ்வொரு கூட்டத்திலும் நீ கற்றுக்கொள்ளும் நல்ல குறிப்புகளைப் பின்பற்றினால் யெகோவா தேவனிடம் நெருங்கி வர முடியும். அவர் உனக்கு உண்மையானவராய் இருப்பார்; சத்தியத்தை உனதாக்கி, தொடர்ந்து “சத்தியத்திலே நடக்”கையில் அதிக சந்தோஷத்தையும் திருப்தியையும் நீ அனுபவிப்பாய்.—3 யோ. 4.
11 இளம் சகோதர சகோதரிகளே, நீங்கள் கூட்டங்களுக்கு தவறாமல் தயாரித்து வந்து, அவற்றில் பங்கெடுத்து, கற்றுக்கொண்டதைப் பின்பற்றுகையில் கூட்டங்களை முழுமையாய் அனுபவித்து மகிழ்வீர்கள். அதே சமயத்தில், அவற்றிலிருந்து முழு பயனையும் பெறுவீர்கள். உங்கள் விசுவாசம் பலப்படும்; உங்கள் பரம தந்தையாகிய யெகோவாவுக்கு உண்மையாய் இருக்க வேண்டும் என்ற உங்கள் தீர்மானமும் உறுதிப்படும்.—சங். 145:18.