நீங்கள் ஒரு “வேடிக்கைக் காட்சி”!
1 “நாங்கள் உலகத்துக்கும் தூதருக்கும் மனுஷருக்கும் வேடிக்கையானோம் [“வேடிக்கைக் காட்சியானோம்,” (தி.மொ.)]” என அப்போஸ்தலன் பவுல் எழுதினார். (1 கொ. 4:9) இதன் அர்த்தம் என்ன, நமது இந்நாளைய ஊழியத்துடன் இது எவ்வாறு சம்பந்தப்பட்டுள்ளது?
2 கொரிந்து பட்டணத்தைச் சேர்ந்த ஒருவருக்கு, “வேடிக்கைக் காட்சி” என்றதுமே ரோம அரங்கில் நடத்தப்பட்டுவந்த கொடூர கொலைக் காட்சியின் கடைசி நிகழ்ச்சியே மனதிற்கு வரலாம். குற்றவாளிகள் கொடூரமாக கொலை செய்யப்படுவதற்கு முன்பு அந்த அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு அழைத்து வரப்பட்டு ஆயிரக்கணக்கான பார்வையாளருக்கு முன்பு வேடிக்கை பொருளாக்கப்பட்டனர். அதைப் போலவே, முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் ராஜ்யத்திற்கு சாட்சி கொடுத்து வந்ததால் பட்ட பாடுகளை மாபெரும் கூட்டத்தார்—தூதர்களும் மனிதர்களும்—கவனித்தனர். (எபி. 10:32, 33) நவீன நாளைய அரங்கில் நம் சகிப்புத்தன்மை அநேகரை கவருவது போலவே அவர்களது உத்தமத்தன்மையும் பார்வையாளர்கள் அநேகரை கவர்ந்தது. நாம் யாருக்கு காட்சிப்பொருளாக இருக்கிறோம்?
3 உலகத்திற்கும் மனுஷருக்கும்: யெகோவாவின் ஜனங்கள் செய்துவரும் வேலைகளைப் பற்றி செய்தித்துறைகள் சில சமயங்களில் அறிக்கைகள் வெளியிடுகின்றன. நம் வேலைகளைப் பொறுத்தவரை, உண்மையும் நேர்மையுமான நல்ல அறிக்கைகளை வெளியிடுகையில் நாம் நன்றியுடன் ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் நம்மை பழிப்பவர்கள் நம்மைப் பற்றி அவ்வப்போது தவறான அறிக்கைகளையும் பரப்புவார்கள் என்பதை நாம் எதிர்பார்க்கிறோம். இருந்தபோதிலும், ‘கெட்ட அறிக்கையிலும், நல்ல அறிக்கையிலும்’ கடவுளின் ஊழியர்களாக தொடர்ந்து நம்மை காண்பிக்க வேண்டும். (2 கொ. 6:4, 8, NW) நம்மை கவனிக்கும் நல்லெண்ணம் படைத்தவர்களுக்கு, நாம் மெய்யாகவே இயேசு கிறிஸ்துவின் சீஷர்கள்தான் என்பது தெளிவாகிறது.
4 தூதருக்கும்: ஆவி சிருஷ்டிகளும் நம்மை கவனிக்கின்றனர். பிசாசும் அவனோடு இருக்கும் பேய்களும் கவனிக்கின்றனர்—ஆனால் ‘மிகுந்த கோபத்துடன்,’ ‘இயேசு கிறிஸ்துவைக் குறித்துச் சாட்சி சொல்பவர்களின் வேலையை’ நிறுத்த முயல்கின்றனர். (வெளி. 12:9, 12, 17; NW) ஒரு பாவி மனந்திரும்புவதைக்கூட கடவுளுடைய உண்மையுள்ள தூதர்கள் கண்டு, சந்தோஷமடைகின்றனர். (லூக். 15:10) நம் ஊழியத்தை வெகு அவசரமாகவும் இந்தப் பூமியில் செய்யப்பட்டு வரும் வேலையிலேயே மிக பயனுள்ள வேலையாகவும் தூதர்கள் கருதுகின்றனர்; இது நம்மை பலப்படுத்த வேண்டும்!—வெளி. 14:6, 7.
5 நீங்கள் எதிர்ப்பை சந்திக்கையிலும், ஊழியத்தில் பலன் கிடைக்கவில்லை என்பதாக நினைக்கையிலும், சர்வலோகமும் உங்களை கவனிக்கிறது என்பதை மறந்துவிட வேண்டாம். உங்களது உண்மையான சகிப்புத்தன்மையே ஏராளமாய் சாட்சி பகரும். முடிவில், உங்கள் ‘விசுவாசத்தின் நல்ல போராட்டம்,’ ‘நித்திய ஜீவனைப் பற்றிக்கொள்ள’ உதவும்.—1 தீ. 6:12.