கடவுளுடைய வார்த்தையை நிதானமாய்ப் பகுத்துப் போதியுங்கள்
1 ஓர் அதிகாரியிடம் சாட்சி கொடுக்கையில், “பிலிப்பு பேசத் தொடங்கி, இந்த [ஒரு குறிப்பிட்ட] வேதவாக்கியத்தை முன்னிட்டு இயேசுவைக் குறித்து அவனுக்குப் பிரசங்கித்தான்.” (அப். 8:35) பிலிப்பு ‘சத்திய வசனத்தை நிதானமாய்ப் பகுத்துப் போதிக்கிறவராய்’ இருந்தார். (2 தீ. 2:15) என்றபோதிலும், இன்று சாட்சி கொடுக்கையில் அநேக பிரஸ்தாபிகள் பைபிளை அரிதாகவே பயன்படுத்துவதாக பயணக் கண்காணிகள் கண்டிருக்கின்றனர். ஊழியத்தில் நீங்கள் பைபிளை பயன்படுத்துகிறீர்களா?
2 நாம் நம்பும், கற்பிக்கும் அனைத்திற்கும் அடிப்படை கடவுளுடைய வார்த்தைதான். (2 தீ. 3:16, 17) அதுவே ஜனங்களை யெகோவாவிடம் இழுக்கிறது, வாழ்க்கைக்குப் பிரயோஜனமான போதனை அளிக்கிறது. ஆகவே ஊழியத்தில் நமக்குப் பிடித்தமான விஷயங்களைப் பற்றி பேசிவிட்டு மட்டும் வருவதற்கு மாறாக நாம் பைபிளை பயன்படுத்துவது முக்கியம். (எபி. 4:12) பெரும்பாலான ஜனங்களுக்கு பைபிளைப் பற்றி அவ்வளவாக தெரியாது; எனவே அது அளிக்கும் நடைமுறை வழிகாட்டுதலையும் மனிதகுலத்திற்கான எதிர்காலத்தையும் அவர்களுக்கு காட்டுவதற்காக அதிலிருந்து வாசிக்க வேண்டும்.
3 பைபிளிலிருந்து நேரடியாக வாசியுங்கள்: நீங்கள் ஊழியத்திற்குச் செல்லும்போது கையில் பை எதுவும் எடுக்காமல் செல்ல முயற்சி செய்யலாம். நீங்கள் முக்கியமாக அளிக்க விரும்பும் பிரசுரங்களை பிரீஃப் கேஸில் வைத்துக்கொண்டு, பைபிளை உங்கள் கையிலோ பாக்கெட்டிலோ எடுத்துச் செல்லலாம். பிறகு, யாருடனாவது உரையாடும்போது, நீங்கள் ஏதோ பிரசங்கம் பண்ண வந்திருப்பதாக அந்த நபர் உணராத வகையில் பைபிளை வெளியில் எடுக்கலாம். நீங்கள் பைபிளில் வாசிப்பவற்றை வீட்டுக்காரரும் பார்ப்பதற்கு வசதியாக உட்கார்ந்து கொள்ளுங்கள் அல்லது நின்று கொள்ளுங்கள். முடிந்தால் ஒரு வசனத்தை சத்தமாக வாசிக்கும்படி அவரை கேளுங்கள். நீங்கள் சொல்லக் கேட்பதற்கு பதிலாக அவரே பைபிள் சொல்வதை கண்ணார காண்கையில் அது ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஆனால், அந்த வசனத்தின் அர்த்தத்தைப் புரிந்துகொள்ள வசதியாக வலியுறுத்த வேண்டிய வார்த்தைகளை அழுத்தி வாசியுங்கள்.
4 ஒரு வசனத்தைப் பயன்படுத்தி பேசுதல்: உங்களை அறிமுகப்படுத்திக் கொண்ட பின்பு, இவ்வாறு சொல்லலாம்: “தங்கள் வாழ்க்கையில் வழிநடத்துதலுக்காக மக்கள் வெவ்வேறு இடங்களில் தேடி அலைகின்றனர். நடைமுறையான வழிகாட்டுதலைப் பெற எது மிகச் சிறந்த இடம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? [பதில் சொல்ல அனுமதியுங்கள்.] இந்தக் குறிப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? [நீதிமொழிகள் 2:6, 7-ஐ வாசித்து, பதில் சொல்ல அனுமதியுங்கள்.] மனித ஞானம் வருந்தத்தக்க வகையில் குறைபாடு உள்ளதாய் நிரூபித்திருக்கிறது, இதனால் அநேக ஜனங்கள் நம்பிக்கை இழந்த நிலையில் இருக்கின்றனர். என்றாலும், கடவுளுடைய ஞானம், எப்போதுமே நம்பத்தக்கதாயும் பயனுள்ளதாயும் நிரூபித்திருக்கிறது.” பிறகு நீங்கள் அளிக்கவிருக்கும் பிரசுரத்தைக் காட்டுங்கள்; கடவுளுடைய நடைமுறை ஞானத்திற்கு ஓர் உதாரணத்தை அதிலிருந்து எடுத்துக் காட்டுங்கள்.
5 நேர்மை இருதயமுள்ளோருக்கு உதவ வசனங்களை இயேசு பயன்படுத்தினார். (லூக். 24:32) தான் கற்பித்த விஷயங்களை பவுல் வேதப்பூர்வமாக நிரூபித்தார். (அப். 17:2, 3) கடவுளுடைய வார்த்தையை நிதானமாய்ப் பகுத்துப் போதிப்பதில் அதிக திறம்பட்டவர்களாகி வருகையில், ஊழியத்தில் நம் உறுதியும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும்.