நம்முடைய பிரசுரங்களை மதிக்கிறீர்களா?
1 வைரங்களும் மற்ற நவரத்தினக்கற்களும் அவற்றின் அழகிற்காக மட்டுமல்லாமல் அவற்றைக் கண்டுபிடிப்பதற்கும் சுரங்கத்திலிருந்து வெட்டி எடுப்பதற்கும் ஆகும் பெரும் செலவின் காரணமாகவும் விலைமதிப்புமிக்கவையாய் உள்ளன. யெகோவாவையும் இயேசு கிறிஸ்துவையும் பற்றிய அறிவு அதைவிட பெரும் மதிப்புமிக்கது; மேலும், உலகிலேயே நம்முடைய பிரசுரங்கள் மட்டுமே இந்த ஆவிக்குரிய செல்வங்களைப் பற்றி ஆழமாகவும் தெய்வீக ஞானத்தோடும் விவரிக்கின்றன. (ரோ. 11:33; பிலி. 3:8) நம்முடைய பிரசுரங்களுக்கு உண்மையான போற்றுதலை நாம் எப்படி காட்டலாம்?
2 தனிப்பட்டவர்கள் பலரும் குடும்பத்தினரும், “சங்கத்தின் உலகளாவிய வேலைக்காக நன்கொடை—மத்தேயு 24:14” என ராஜ்ய மன்றங்களில் எழுதி வைக்கப்பட்டுள்ள நன்கொடை பெட்டிகள் ஒன்றில் நன்கொடை போடுவதற்கு தவறாமல் ஒரு தொகையை ஒதுக்கி வைக்கின்றனர். அதோடுகூட தனிப்பட்டவர்கள் உலகளாவிய வேலைக்கு மேலுமான நன்கொடையை, சபையில் பிரசுரங்களையோ பத்திரிகைகளையோ பெற்றுக்கொள்கையிலும் அளிக்கின்றனர்; வெளி ஊழியத்தில் கிடைக்கும் நன்கொடைகளையும் அளிக்கின்றனர்.
3 வெளி ஊழியத்தில் நாம் சந்திப்பவர்களிடம் நம்முடைய பிரசுரங்களை ஞானமாக அளிப்பது, அவற்றிற்கு போற்றுதல் காட்டுவதற்கான மற்றொரு வழியாகும். விலையுயர்ந்த வைரத்தை அதன் அருமை தெரியாத பச்சிளங்குழந்தையின் கையில் கொடுக்க மாட்டோம். அதே போல ஆவிக்குரிய காரியங்களுக்குத் துளியும் போற்றுதல் காட்டாத நபர்களிடம் மதிப்புமிக்க பிரசுரத்தைக் கொடுக்க மாட்டோம். (எபிரெயர் 12:16-ஐ ஒப்பிடுக.) தாராளமாக நம்மையே அளிப்பதற்கும் பிரசுரங்களை அளிப்பதற்கும் நம் பகுத்துணர்வு வழிநடத்த வேண்டும். வீட்டுக்காரர் கலந்துரையாட விருப்பமுள்ளவராக இருக்கிறாரா? நாம் பேசுகையில் அவர் கேட்கிறாரா? கேட்கும் கேள்விக்குப் பதிலளிக்கிறாரா? பைபிள் வாசிக்கையில் அதை கவனிக்கிறாரா? அத்தகைய ஆர்வம் வெளிக்காட்டப்பட்டால் பொருத்தமான பிரசுரத்தை அவருக்குக் கொடுப்பதில் நமக்கு சந்தோஷமே. நம்முடைய பிரசுரங்கள் ஒன்றில் பைபிள் படிப்பு நடத்துகையில் பைபிள் கற்பிப்பதைக் கற்றுக்கொள்ள மக்களுக்கு உதவுகிறோம்; யெகோவாவுடன் நல்லுறவை வளர்த்துக்கொள்ள அவர்களுக்கு வாய்ப்பெனும் வழி திறந்திருக்கிறது. நம்முடைய பிரசுரம் எப்படி உபயோகிக்கப்படுகிறது என்பதை பொறுத்தே அதன் உண்மையான பலனைப் பெற முடியும்.
4 ராஜ்ய மன்றத்தில் அல்லது நம் வீட்டு புத்தக அலமாரியில் பிரசுரங்கள் அப்படியே இருந்தால் அதனால் பயனேதும் இல்லை, அதன் மதிப்பையும் யாரும் அறிய முடியாது. பழைய பத்திரிகைகள், சிற்றேடுகள், புத்தகங்கள், துண்டுப்பிரதிகள் ஆகிய அனைத்தையும் நன்கு பயன்படுத்த வேண்டும். ஏற்கெனவே நம் கையில் எவ்வளவு பிரசுரங்கள் உள்ளன என்பதை எப்பொழுது நாம் கடைசியாக கணக்குப் பார்த்தோம்? நாம் எந்தளவுக்கு சேர்த்து வைத்திருக்கிறோம் என்பதைக் கண்டுபிடிக்கையில் நாமே மலைத்துப் போய்விடுவோம். நம்மிடமுள்ள பிரசுரங்கள் இன்னும் நல்ல நிலையில்—நாட்பட்டதால் பழுப்பேறிப் போகாமல், கிழியாமல், அல்லது அழுக்காகாமல்—உள்ளனவா? அப்படியானால், இவற்றை வெளி ஊழியத்தில் விநியோகிப்பதற்கு எல்லா முயற்சியையும் எடுக்க வேண்டும். சேதமடைந்த பிரசுரங்களைச் சொந்த உபயோகத்திற்காக வைத்துக்கொள்ளலாம் அல்லது முறையாக அப்புறப்படுத்தலாம். அந்தந்த மாதத்துக்குரிய பிரசுர அளிப்புக்கும் நாம் முக்கியமான கவனம் செலுத்தினாலும், வேறொரு பிரசுரத்தைப் பயன்படுத்த சில சமயங்களில் நாம் தீர்மானிக்கலாம்.
5 விநியோகிப்பிற்கு உண்மையில் எவ்வளவு பிரசுரங்கள் உங்களுக்குத் தேவை என்பதைக் குறித்து எப்போதுமே கவனமாக சிந்தியுங்கள். விவேகத்துடன் தீர்மானிப்பது அவசியம். முக்கியமாக நீங்கள் பயனியர் செய்கையில் அதிக எண்ணிக்கையில் பிரசுரங்கள் தேவைப்படலாம்; அப்போதும் அதிகளவு பிரசுரங்களை வாங்கி வைத்துக்கொள்ள அவசியமில்லை. ஏனென்றால் ராஜ்ய மன்றத்தில் கூட்டத்திற்கு முன்பும் பின்பும் தேவையான பிரசுரங்களைப் பெற்றுக்கொள்ளலாம். மாத துவக்கத்தில் போதியளவு பிரசுரங்களுடன் ஊழியத்தை ஆரம்பித்து அவை தீர்ந்து போகப் போக தேவையான அளவு பெற்றுக்கொள்ளுங்கள்.
6 கடவுளுடைய சத்திய வார்த்தையை மதிக்கும் ஆட்களுக்கு நம்முடைய பிரசுரங்களைக் கொடுக்கையில் அவை அதிக மதிப்புள்ளவையாய் இருக்கின்றன. நம்மிடம் கொடுக்கப்பட்டுள்ள பிரசுரங்களை ஞானமாகவும் விவேகமாகவும் பயன்படுத்துவதன் மூலம் அவற்றை அதிக மதிப்புமிக்கவையாய் கருதுகிறோமென காண்பிப்போமாக.