சத்தியம் நம்மை எப்படி விடுதலையாக்கும்
1 இயேசு தம்மீது விசுவாசம் வைத்திருந்த யூதரிடம் ஒருமுறை, “சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்” என கூறினார். (யோவா. 8:32) சமுதாய உரிமைகளை எல்லாம் மிஞ்சிநிற்கிற ஒரு விடுதலையைப் பற்றி இயேசு குறிப்பிட்டார்; அது, பணக்காரர் ஏழை, படித்தவர் படிக்காதவர் என்ற பாகுபாடின்றி எல்லாருக்கும் கிடைக்கிற ஒரு விடுதலை. பாவம், மரணமெனும் விலங்குகளை உடைத்தெறியும் சக்தி படைத்த சத்தியத்தை அவர் கற்பித்தார். அவர் சொன்னபடி, “பாவஞ்செய்கிறவன் எவனும் பாவத்துக்கு அடிமையாயிருக்கிறான்.” (யோவா. 8:34) கீழ்ப்படிதலுள்ள மனிதர்கள் அனைவரும் “அழிவுக்குரிய அடிமைத்தனத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, தேவனுடைய பிள்ளைகளுக்குரிய மகிமையான சுயாதீனத்தைப் பெற்றுக்கொள்ளும்” அந்த நாளைக் காண நாம் எவ்வளவாய் ஏங்குகிறோம்!—ரோ. 8:20.
2 இயேசுவையும் கடவுளுடைய நோக்கத்தில் அவருடைய பங்கையும் பற்றிய சத்தியம் இத்தகைய விடுதலையை அளிக்கிறது. நமக்காக அவர் அளித்த கிரயபலியைப் பற்றிய அறிவும் அந்த சத்தியத்தில் அடங்கும். (ரோ. 3:24) பைபிள் சத்தியத்தை ஏற்றுக்கொண்டு அதற்குக் கீழ்ப்படிகையில், பயம், மனத்தளர்வு, எல்லா விதமான தீங்கு விளைவிக்கும் பழக்கங்கள் ஆகியவற்றிலிருந்து இப்போதேகூட ஓரளவு விடுதலையை அனுபவிக்கலாம்.
3 பயத்திலிருந்தும் மனத்தளர்விலிருந்தும் விடுதலை: உலக நிலைமைகளைக் கண்டு சோர்வால் நம் மனம் துவண்டுவிட அவசியமில்லை; ஏனெனில் இன்றைய துன்மார்க்கத்திற்கான காரணத்தை நாம் புரிந்திருக்கிறோம், சீக்கிரத்தில் அது சுவடு தெரியாமல் அழிக்கப்படும் என்பதையும் அறிந்திருக்கிறோம். (சங். 37:10, 11; 2 தீ. 3:1; வெளி. 12:12) மேலும், இறந்தவர்களின் நிலை பற்றிய பொய்ப் போதகங்களிலிருந்து சத்தியம் நம்மை விடுதலை செய்கிறது. இறந்தவர்கள் நமக்கு எந்தக் கெடுதலும் செய்ய முடியாது, அவர்கள் நித்திய வாதனையை அனுபவிப்பதில்லை, மக்கள் தம்முடன் பரலோகத்தில் இருப்பதற்காக அவர்கள் உயிரைக் கடவுள் பறிப்பதில்லை என்றெல்லாம் அறிந்திருக்கிறோம்.—பிர. 9:5; அப். 24:15.
4 இத்தகைய சத்தியம், விபத்தில் தங்கள் பிள்ளையைப் பறிகொடுத்த ஒரு தாய் தகப்பனுக்குத் தொடர்ந்து ஆறுதலின் அருமருந்தாய் இருந்தது. “உயிர்த்தெழுதலில் எங்கள் மகனை மீண்டும் காணும் வரை ஒருவித வெறுமை எங்கள் வாழ்க்கையில் இருக்கத்தான் செய்யும். ஆனாலும் நாங்கள் அனுபவிக்கும் இந்த வேதனை தற்காலிகமானது என்பதை அறிந்திருக்கிறோம்” என்றார் அந்த தாய்.
5 தீங்கு விளைவிக்கும் பழக்கங்களிலிருந்து விடுதலை: பைபிள் சத்தியம் ஒருவருடைய எண்ணத்தையும் குணத்தையும் அடியோடு மாற்றிவிடும் சக்தி படைத்தது; இது தவிர்க்க முடியும் பல பிரச்சினைகளில் “சிறைப்படாமல்” விடுதலையை அனுபவிக்க வாய்ப்பளிக்கிறது. (எபே. 4:20-24) நேர்மையாகவும் சுறுசுறுப்பாகவும் இருப்பது வறுமையை சமாளிக்க கைகொடுக்கிறது. (நீதி. 13:4) சுயதியாக அன்பு காட்டுவது மற்றவர்களுடன் நல்லுறவில் நெருங்கி வர வழிசெய்கிறது. (கொலோ. 3:13, 14) கிறிஸ்தவ தலைமை ஸ்தானத்துக்கு மரியாதை காட்டுவது குடும்பத்தில் தலைதூக்கும் பிரச்சினைகளை பெருமளவு குறைக்கிறது. (எபே. 5:33–6:1) குடி போதைக்கு, பாலியல் ஒழுக்கக்கேட்டிற்கு, புகையிலைக்கு, போதை பொருட்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பது ஆரோக்கியமான வாழ்விற்கு வழிகாட்டுகிறது.—நீதி. 7:21-23; 23:29, 30; 2 கொ. 7:1.
6 ஒரு வாலிபன் ஒன்பது ஆண்டுகளாக போதை பொருட்களின் பிடியில் சிக்கி, வெளிவர வழி தெரியாமல் தவித்தான். ஒருநாள் தெரு ஊழியம் செய்துகொண்டிருந்த ஒரு பிரஸ்தாபியை அவன் சந்தித்தான். பிரசுரங்களைப் பெற்றுக்கொண்டான்; அவனுடைய வீட்டில் அவனை சந்திக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. பைபிள் படிப்பு ஆரம்பிக்கப்பட்டது. இரண்டு மாதங்களுக்குப் பிறகு அவன் போதை பொருட்களை பயன்படுத்துவதை ஒட்டுமொத்தமாக நிறுத்திவிட்டான்; எட்டு மாத பைபிள் படிப்புக்குப் பிறகு அவன் முழுக்காட்டப்பட்டான். இவன் போதை பொருட்களைக் கையில் தொடாதிருப்பதைப் பார்த்த அவனுடைய அண்ணனும் அண்ணியும் பைபிள் படிக்க ஆரம்பித்தார்கள்.
7 மற்றவர்கள் விடுதலை பெற உதவிக்கரம் நீட்டுங்கள்: பொய்ப் போதகங்களுக்கு வாழ்நாள் முழுவதும் அடிமைகளாக இருப்பவர்களுக்கு கடவுளுடைய வார்த்தை அளிக்கும் இந்த விடுதலையை ஜீரணிப்பது கடினமாக இருக்கலாம். அவர்களுடைய இருதயத்தை எட்டுவதற்கு பைபிள் படிப்பு நடத்துபவரின் பங்கில் அதீத ஊக்கமும் சிறந்த தயாரிப்பும் தேவை. (2 தீ. 4:2, 5) ‘சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையைக் கூறும்’ நம் வேலையில் சற்றே ஓய்வெடுக்க இதுவல்ல நேரம். (ஏசா. 61:1) கிறிஸ்தவ விடுதலை பொன் போன்றது. அதைப் பெற்றுக்கொண்டால் நித்திய ஜீவன்.—1 தீ. 4:16.