வியாபார பிராந்தியங்களில் எவ்வாறு பிரசங்கிப்பது
1 பொதுவாக புதிய ஆட்கள் வரவேற்கப்படுகிற ஒரு பிராந்தியத்தில், ஆட்களை வழக்கமாக சந்திக்க முடிகிற ஒரு பிராந்தியத்தில் பிரசங்கிக்க விரும்புகிறீர்களா? ஒருவேளை உங்கள் சபை பிராந்தியத்திலேயே அவ்வாறு பிரசங்கிப்பதற்கான வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கலாம். எப்படி? அங்கிருக்கும் கடைகளை சந்திப்பதன் மூலம் கிடைக்கலாம். கடைக்கு கடை ஊழியம் செய்கிற பிரஸ்தாபிகள் பெரும்பாலும் நல்ல பலன்களை பெறுகிறார்கள்.
2 சில சபைகளுடைய நியமிக்கப்பட்ட பிராந்தியத்திலேயே வியாபார பிராந்தியங்களும் இருக்கின்றன. பிராந்தியத்தை கவனித்துக்கொள்ளும் சகோதரர் நிறைய கடைகள் உள்ள வியாபார பிராந்தியங்களுக்குரிய விசேஷ வரைபட அட்டைகளை தயாரித்து வைக்கலாம். குடியிருப்பு பகுதியில் கடைகள் இருந்தால் அந்தக் கடைகளை தவிர்க்க வேண்டும் என்று அட்டைகளில் தெளிவாக குறிப்பிட வேண்டும். மற்ற பிராந்தியங்களில் வீடுகளுடன் சேர்த்து கடைகளிலும் சாட்சி கொடுக்கலாம். இதுவரை வியாபார பிராந்தியங்களில் நீங்கள் சாட்சி கொடுத்ததில்லையென்றால் முதலில் சில சிறிய கடைகளில் பேசிப் பாருங்களேன்.
3 எளிய அணுகுமுறையை பயன்படுத்துங்கள்: கடைக்கு கடை சென்று சாட்சி கொடுக்கும்போது கூட்டங்களுக்கு உடுத்தும் விதமாகவே உடுத்தி செல்வது முக்கியம். அதுமட்டுமல்ல, கடையில் கூட்டம் அதிகம் இல்லாத சமயம் பார்த்து செல்வது நல்லது. முடிந்தால் வாடிக்கையாளர்கள் அங்கில்லாத சமயத்தில் உள்ளே செல்லுங்கள். முதலாளியிடம் அல்லது கடையை பார்த்துக்கொள்பவரிடம் பேச அனுமதி கேளுங்கள். உங்கள் பேச்சு குறிப்பாகவும் சுருக்கமாகவும் இருக்க வேண்டும். அவர்களிடம் நீங்கள் என்ன சொல்லலாம்?
4 ஒரு கடைக்காரரிடம் அல்லது முதலாளியிடம் பேசும்போது இது போன்று ஏதாவது ஒன்றை நீங்கள் சொல்லலாம்: “வியாபாரம் செய்யும் ஆட்களுக்கு நாள் முழுதும் வேலை இருப்பதால் அவர்களை வீட்டில் சந்திப்பதே கடினம். அதனால்தான் நீங்கள் வேலை செய்யும் இடத்திற்கே வந்து உங்களை சந்திக்கிறோம். எங்களுடைய பத்திரிகைகள் உலக நடப்புகளை பற்றிய தெளிவான கண்ணோட்டத்தை கொடுக்கின்றன.” பிறகு பத்திரிகையிலிருந்து ஒரு சுருக்கமான குறிப்பை எடுத்துக் காட்டுங்கள்.
5 அல்லது இந்த எளிய அணுகுமுறையை நீங்கள் பயன்படுத்தலாம்: “எந்தத் தப்பும் செய்யாத மக்கள் ஏன் அடிக்கடி துன்பத்தை அனுபவிக்கிறார்கள் என எப்போதாவது யோசித்து பார்த்திருக்கிறீர்களா? ஒருவேளை அவர்கள் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்திருக்கலாம். இன்னும் சிலர் உருக்குலைந்து அல்லது ஊனமாகக்கூட பிறந்திருக்கிறார்கள். ஒரு மனிதன் தன்னுடைய முன் ஜென்மத்தில் செய்த பாவத்தின் காரணமாகத்தான் இப்படி கஷ்டப்படுகிறான் என்று அநேகர் நினைக்கிறார்கள். இது உண்மையாக இருக்குமா? மனிதன் இவ்விதமாக கஷ்டப்பட வேண்டும் என்று கடவுள் நினைத்திருப்பாரா? இத்தகைய கேள்விகளுக்கு திருப்திகரமான பதில்களை கண்டடைய இந்தத் துண்டுப்பிரதி உங்களுக்கு உதவும்” என்று சொல்லிவிட்டு துன்பத்திற்கு விடிவுகாலம் வருமா? என்ற புதிய துண்டுப்பிரதியை அளியுங்கள். வீட்டுக்காரர் பைபிள் மீது கொஞ்சம் மரியாதை வைத்திருப்பவர் போல் தோன்றினால் இந்தத் துண்டுப்பிரதியில் பக்கங்கள் 5-6-லுள்ள பொருத்தமான வசனங்களிடம் அவருடைய கவனத்தை திருப்புங்கள்.
6 ஒருவேளை கடையை பார்த்துக் கொள்பவருக்கு நேரமில்லாதிருந்தால் நீங்கள் வெறுமனே ஒரு துண்டுப்பிரதியை கொடுத்துவிட்டு பிறகு இவ்வாறு சொல்லலாம்: “நீங்கள் கொஞ்சம் ஃப்ரீயாக இருக்கிற சமயத்தில் இன்னொரு முறை வந்து உங்களை சந்திக்கிறேன். இந்தத் துண்டுப்பிரதியைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை அப்போது தெரிந்துகொள்ள விரும்புகிறேன்.”
7 ஆட்களுடைய ஆர்வத்தை வளர்த்தல்: வியாபார பிராந்தியத்தில் ஒரு பைபிள் படிப்பைக்கூட உங்களால் நடத்த முடியும். வியாபாரி ஒருவருக்கு விசேஷ பயனியர் ஒருவர் தவறாமல் பத்திரிகைகள் கொடுத்து வந்தார். பத்திரிகைகளை வாசித்து வந்த அந்த வியாபாரி அவற்றில் ஆர்வம் காட்டியபோது அந்தப் பயனியர் தேவைப்படுத்துகிறார் சிற்றேட்டை பயன்படுத்தி பைபிள் படிப்பு ஏற்பாட்டை விளக்கி காட்டினார். அந்த வியாபாரி வேலை செய்யும் இடத்திலேயே படிப்பு ஆரம்பிக்கப்பட்டது. சந்தர்ப்ப சூழ்நிலைமைகளை மனதில் வைத்து, அந்தப் பயனியர் ஒவ்வொரு முறையும் படிப்பை 10-15 நிமிடத்துக்குள் முடித்துக்கொள்வார். அவ்வாறாகவே நாமும்கூட வியாபார பிராந்தியங்களில் பிரசங்கிப்பதன் மூலம் ஆர்வமுள்ளோரை தொடர்ந்து தேடுவோமாக.
[கேள்விகள்]
1. வியாபார பிராந்தியங்களில் பிரசங்கம் செய்வதிலுள்ள நன்மைகள் சில யாவை?
2. வியாபார பிராந்தியங்களில் சாட்சி கொடுப்பதை எவ்வாறு ஒழுங்கமைக்க முடியும்?
3. கடைக்கு கடை ஊழியம் செய்கையில் திறம்பட பேசுவதற்கு எது உதவும்?
4-6. ஒரு கடைக்காரரிடம் அல்லது முதலாளியிடம் சாட்சி கொடுக்கையில் நாம் என்ன சொல்லலாம்?
7. வியாபார பிராந்தியங்களில் சந்திக்கும் ஆட்களின் ஆர்வத்தை நாம் எவ்வாறு வளர்க்கலாம்?