புதிய சிற்றேட்டின் விசேஷ விநியோகிப்பு
1 இந்த உலகத்தில் நடக்கும் காரியங்களைப் பார்த்து அநேகர் கவலைப்படுகின்றனர்; ஆனால் ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது, எதிர்காலம் எப்படியிருக்கப் போகிறது, வரவிருக்கும் அழிவிலிருந்து தப்பிப் பிழைப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதையெல்லாம் சிலர் மட்டுமே புரிந்துகொள்கின்றனர். (எசே. 9:4) ஆகவே நாம் வாழும் இந்தக் காலத்தின் முக்கியத்துவத்தை ஜனங்கள் புரிந்துகொள்வதற்காக விழிப்புடன் இருங்கள்! என்ற புதிய சிற்றேட்டை விசேஷமாக விநியோகிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விசேஷ விநியோகிப்பு ஏப்ரல் 18-ம் தேதி திங்கள் தொடங்கி மே 15-ம் தேதி ஞாயிறு வரை அமலில் இருக்கும்.
2 இந்தச் சிற்றேட்டை வீட்டுக்கு வீடு ஊழியத்தில், மறுசந்திப்பு செய்கையில், சந்தர்ப்ப சாட்சி கொடுக்கையில், அல்லது பொதுவிடங்களில் என எல்லா சந்தர்ப்பங்களிலும் கொடுக்கலாம். என்றாலும், யார் எவரென்று பாராமல் எல்லாருக்கும் இச்சிற்றேட்டை கொடுக்கக் கூடாது. உலக சம்பவங்கள் எதை அர்த்தப்படுத்துகின்றன என பைபிள் சொல்வதை உண்மையிலேயே ஆர்வத்தோடு கேட்பவர்களுக்கு மட்டும் இதைக் கொடுக்க வேண்டும். அந்தளவு ஆர்வம் காட்டாதவர்களுக்கு ஒரு துண்டுப்பிரதியைக் கொடுக்கலாம்.
3 பின்வருமாறு சொல்லி ஒருவருடைய கவனத்தை நீங்கள் ஈர்க்கலாம்:
◼ “பயங்கரமான பிரச்சினைகளும் அதிர்ச்சியூட்டும் சம்பவங்களும் இந்த உலகத்தில் சகஜமாகிவிட்டதைப் பார்த்து அநேகர் கவலைப்படுகிறார்கள். [அந்தப் பகுதியில் நடந்த சம்பவம் ஏதாவது இருந்தால் அதைச் சொல்லுங்கள்.] இப்படியெல்லாம் நடக்குமென்று பைபிள் முன்கூட்டியே சொல்லியிருப்பது உங்களுக்குத் தெரியுமா? [பதிலளிக்க அனுமதியுங்கள். பின்பு நீங்கள் குறிப்பிட்ட சம்பவத்திற்குப் பொருத்தமான வசனத்தை வாசியுங்கள். மத்தேயு 24:3, 7, 8; லூக்கா 21:7, 10, 11; அல்லது 2 தீமோத்தேயு 3:1-5 போன்ற வசனங்களை வாசியுங்கள்.] இப்பொழுது ஏன் இப்படியெல்லாம் நடக்கின்றன, மனிதரின் எதிர்காலம் என்ன என்பதையெல்லாம் பைபிள் தெளிவாக சொல்கிறது. இதைப் பற்றி இன்னும் அதிகமாக தெரிந்துகொள்ள உங்களுக்கு விருப்பமா? [பதிலளிக்க அனுமதியுங்கள். உண்மையில் ஆர்வம் காட்டினால் சிற்றேட்டை அளியுங்கள்.] இந்தச் சிற்றேட்டுக்கு விலை பெற்றுக்கொள்வதில்லை. ஆனால் எங்கள் உலகளாவிய வேலைக்கு நீங்கள் நன்கொடை கொடுக்க விரும்பினால் அதைச் சந்தோஷமாக ஏற்றுக்கொள்வேன்.”
4 அல்லது பின்வரும் அணுகுமுறை பலன் தரலாம்:
◼ “இந்த உலகத்தில் நடக்கும் அதிர்ச்சியூட்டும் சம்பவங்களைப் பார்க்கும்போது அல்லது தங்களுக்கே ஏதாவது பேரிழப்பு நேரிடும்போது அநேகர் நிலைகுலைந்து போய்விடுகிறார்கள். அவற்றையெல்லாம் கடவுள் ஏன் தடுப்பதில்லை என சிலர் நினைக்கிறார்கள். மனிதர் படும் கஷ்டங்களையெல்லாம் கடவுள் சீக்கிரத்திலே தீர்க்கப் போகிறாரென்று பைபிள் உறுதியளிக்கிறது. அவர் என்ன நன்மைகளை செய்யப் போகிறார் என்பதை கவனியுங்களேன். [சங்கீதம் 37:10, 11-ஐ வாசியுங்கள்.] இதைப் பற்றி அதிகமாக தெரிந்துகொள்ள உங்களுக்கு விருப்பமா?” என்று கேட்டுவிட்டு, மேற்கூறப்பட்ட அணுகுமுறையில் உள்ளவாறே சம்பாஷணையை முடித்துக்கொள்ளுங்கள்.
5 இந்தச் சிற்றேட்டை யாருக்குக் கொடுத்தாலும் அவர்களுடைய பெயரையும் விலாசத்தையும் கேட்டு வாங்கிக்கொள்ளுங்கள்; அவர்களது ஆர்வத்தை வளர்க்க மீண்டும் சந்திப்பதற்கு ஏற்பாடு செய்யுங்கள். மறுசந்திப்பின்போது அதை எப்படிச் செய்யலாம் என்பதற்கான ஆலோசனைகள் இனிவரும் ஊழியக் கூட்டங்களில் கலந்தாலோசிக்கப்படும். முதல் சந்திப்பிலேயே ஒருவர் அதிக ஆர்வம் காட்டினால், அப்பொழுதே பைபிள் படிப்பைத் துவங்கி விடலாம். விழிப்புடன் இருங்கள்! சிற்றேட்டையோ, தேவைப்படுத்துகிறார் சிற்றேட்டையோ, வேறொரு பிரசுரத்தையோ பயன்படுத்தி பைபிள் படிப்பை துவங்கலாம்.
6 இந்தக் கட்டுரை கலந்தாலோசிக்கப்படும் ஊழியக் கூட்டத்திற்குப் பின்னர் இப்புதிய சிற்றேடு சபையாருக்கு வழங்கப்படும். ஆரம்பத்தில் ஓரிரு நாட்களுக்குத் தேவையான பிரதிகளை மட்டுமே பிரஸ்தாபிகளும் பயனியர்களும் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். யெகோவா தமக்குத் துதி சேர்க்கவும் எங்குமுள்ள நல்மனமுள்ளவர்களுக்கு நன்மை செய்யவும் போகிற இந்த விசேஷ ஊழியத்தை ஆசீர்வதிப்பாராக.—சங். 90:17.