முன்னேறுகிற பைபிள் படிப்புகளை நடத்துதல்
பகுதி 6: மாணாக்கர் கேள்வி கேட்கையில்
1 பைபிள் படிப்பு முறைப்படி ஆரம்பிக்கப்பட்ட பிறகு, ஒரு விஷயத்திலிருந்து மற்றொரு விஷயத்திற்குத் தாவாமல், பைபிள் போதனைகளை கிரமமாய்க் கலந்தாலோசிப்பதே மிகச் சிறந்தது. இது, திருத்தமான அறிவை அஸ்திவாரமாகப் போடவும், ஆன்மீகத்தில் முன்னேறவும் மாணாக்கருக்கு உதவும். (கொலோ. 1:9, 10) என்றாலும், படிப்பு நடத்தப்படுகையில் மாணாக்கர் பல்வேறு விஷயங்களின்பேரில் கேள்விகள் கேட்பது சகஜம். அப்போது என்ன செய்யலாம்?
2 பகுத்தறியுங்கள்: படிக்கும் விஷயத்தோடு சம்பந்தப்பட்ட கேள்விகளை மாணாக்கர் கேட்டால் உடனுக்குடன் பதிலளிக்கலாம். அதே கேள்வி அப்பிரசுரத்தில் பின்னர் கலந்தாலோசிக்கப்படவிருந்தால் அதைக் குறிப்பிடலாம். ஆனால், படிக்கும் விஷயத்துக்குச் சம்பந்தமில்லாத கேள்வியைக் கேட்டால், அல்லது அது நன்கு ஆராய்ச்சி செய்து பதில் சொல்ல வேண்டிய கேள்வியாக இருந்தால், படிப்பு முடிந்தவுடன் அல்லது வேறொரு சந்தர்ப்பத்தில் பதில் சொல்வதே சிறந்தது. அப்படிக் கேட்கப்படும் கேள்வியை உடனே எழுதி வைத்துக் கொள்வது, அதை முக்கியமாகக் கருதுகிறோம் என்று மாணாக்கர் புரிந்துகொள்ள உதவலாம்; அதேசமயத்தில் படிப்பிலிருந்து கவனம் சிதறாதிருக்கும்படியும் பார்த்துக்கொள்ளலாம்.
3 படிப்பு நடத்துவதற்கு அமைப்பு வெளியிட்டுள்ள அடிப்படைப் பிரசுரங்களில் பைபிள் போதனைகள் பெரும்பாலும் சுருக்கமாகவே கலந்தாராயப்படுகின்றன. அவற்றில் ஒரு போதனையை ஏற்றுக்கொள்ள மாணாக்கருக்குக் கஷ்டமாய் இருந்தாலோ, தவறான போதனையை விடாப்பிடியாக நம்பி வந்தாலோ என்ன செய்வது? அந்த விஷயத்தைப் பற்றி பைபிள் சொல்வதை விளக்கமாகக் கலந்தாலோசிக்கும் வேறு பிரசுரங்களிலிருந்து பேசுவது பலன் தரலாம். அதற்குப் பின்பும் மாணாக்கர் ஏற்றுக்கொள்ளாவிட்டால், அதை வேறொரு சமயத்தில் கலந்தாலோசிக்கலாம் என சொல்லி அதற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு வழக்கம்போல் படிப்பைத் தொடரலாம். (யோவா. 16:12) பைபிளிலுள்ள இன்னும் அநேக விஷயங்களை மாணாக்கர் புரிந்து கொண்டு ஆன்மீகத்தில் முன்னேறுகையில், அந்தப் போதனையையும் அவர் புரிந்துகொள்ளலாம்.
4 அடக்கம் தேவை: ஒரு கேள்விக்குச் சரியான பதில் உங்களுக்குத் தெரியாவிட்டால், பதில் சொல்ல வேண்டுமே என்பதற்காக அப்போதைக்கு ஏதாவது ஒரு பதிலைச் சொல்லி விடுவதைத் தவிருங்கள். (2 தீ. 2:15; 1 பே. 4:11) அந்த விஷயத்தின் பேரில் ஆராய்ச்சி செய்து வந்து பதிலைச் சொல்வதாகக் கூறுங்கள். அப்படிப்பட்ட கேள்விகளுக்கான பதிலை ஆராய்ச்சி செய்து கண்டுபிடிக்கும் விதத்தை இந்தச் சாக்கில் அவருக்கே கற்றுக்கொடுங்கள். ஆராய்ச்சி செய்வதற்கு யெகோவாவின் அமைப்பு வெளியிட்டிருக்கும் வெவ்வேறு கருவிகளைப் பயன்படுத்த படிப்படியாகக் கற்பியுங்கள். இப்படியாக காலப்போக்கில் மாணாக்கர் தன் கேள்விகளுக்குத் தானே பதிலைக் கண்டுபிடிக்க பழகிக்கொள்வார்.—அப். 17:11.