‘பெரிதும் அநுகூலமுமான கதவு’ வழியாக உங்களால் பிரவேசிக்க முடியுமா?
1 அப்போஸ்தலன் பவுலுக்கு முன்பாக ‘பெரிதும் அநுகூலமுமான கதவு’ திறந்திருந்தபோது அதில் மிகுந்த ஆர்வத்தோடு அவர் பிரவேசித்தார். அவருக்கு பல விரோதிகள் இருந்தபோதிலும் ராஜ்ய அக்கறைகளை முன்னேற்றுவிப்பதற்காகத் தனக்குக் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டார். (1 கொ. 16:9) இன்று உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 6,42,000 பிரஸ்தாபிகள் ஒழுங்கான பயனியர் சேவை செய்வதன் மூலம் பெரிதும் அநுகூலமுமான கதவு வழியாக நுழைந்திருக்கிறார்கள்.
2 சூழ்நிலைகள் மாறும்: ஒருவேளை, தற்போது உங்களுடைய சூழ்நிலை அதிகம் செய்வதற்கு முட்டுக்கட்டையாக இருந்தாலும், நிலைமைகள் மாறும். பயனியர் ஊழியம் செய்வதற்கான சரியான சந்தர்ப்பம் வரும்வரை காத்துக்கொண்டிருப்பதற்கு பதிலாக நம்முடைய சொந்த சூழ்நிலைகளை அவ்வப்போது சோதித்துப் பார்ப்பது சிறந்தது. (பிர. 11:4) நீங்கள் இன்னும் கொஞ்ச நாட்களில் உயர்நிலை பள்ளி படிப்பை முடிக்கப்போகும் இளைஞரா? உங்களுடைய சிறு பிள்ளைகளை சீக்கிரம் பள்ளியில் சேர்க்கப்போகும் பெற்றோரா? வேலையிலிருந்து விரைவில் ஓய்வு பெறப்போகும் நபரா? இப்படிப்பட்ட மாற்றங்களால் உங்களுக்கு அதிக நேரம் கிடைக்கலாம். எனவே, ஒழுங்கான பயனியராகும் வாய்ப்பை நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். முன்பு உடல்நல பிரச்சினைகளால் அவதிப்பட்டுக்கொண்டிருந்த ஒரு சகோதரி தன்னுடைய 89-வது வயதில் பயனியர் ஊழியம் செய்ய தீர்மானித்தார். ஏன்? கடந்த ஒரு வருடமாக மருத்துவமனையில் சேர்க்க வேண்டிய நிலை அவருக்கு ஏற்படாததால் பயனியர் சேவை செய்ய தன் உடல் ஒத்துழைக்கும் என்று நினைத்தார்.
3 பவுலின் விஷயத்தை எடுத்துக்கொள்ளுங்கள், அவர் முதலில் கொரிந்து சபை சகோதரர்களைச் சந்திக்கவேண்டும் என்றுதான் நினைத்தார். ஆனால், நற்செய்திக்காக தன்னுடைய திட்டங்களை மாற்றிக்கொண்டார். இன்று ஒழுங்கான பயனியர் ஊழியம் செய்துகொண்டிருக்கும் அநேகர், அதைச் செய்வதற்காக ஏகப்பட்ட மாற்றங்களைச் செய்யவேண்டியிருந்திருக்கிறது. சிலர் தங்கள் வாழ்க்கையை எளிமையாக்கி செலவுகளைக் குறைத்துக்கொள்வதால் பகுதி நேர வேலையில் கிடைக்கும் சம்பளமே அவர்களுக்குபோதுமானதாகிறது. இப்படி மாற்றங்களைச் செய்ததால் தங்களுக்குக் கிடைத்த சேவையைப் பாக்கியமாக கருதி மகிழ்கிறார்கள். (1 தீ. 6:6-8) இன்னும் சில தம்பதிகள் கணவனுடைய சம்பாத்தியத்தை மட்டும் வைத்து குடும்பத்தை நடத்த முடிகிற அளவிற்கு தங்கள் வாழ்க்கைமுறையை மாற்றிக்கொண்டதால் மனைவி பயனியர் ஊழியம் செய்ய முடிந்திருக்கிறது.
4 ஊழிய மணிநேரத்தை உங்களால் எட்ட முடியாது என்று பயந்துகொண்டு, பயனியர் சேவை எல்லாம் சரிப்பட்டு வராது என்று சட்டென முடிவு செய்துவிடாதீர்கள். ஒரு நாளைக்கு வெறும் இரண்டு மணிநேரத்திற்கும் கொஞ்சம் அதிகம் செய்தாலே போதும். அவ்வாறு செய்ய உங்களால் முடியாது என்று நீங்கள் நினைத்தால் துணைப் பயனியர் செய்து பாருங்கள். ஆனால், 70 மணி நேரத்தை அடைய வேண்டும் என்ற குறிக்கோளோடு செய்யுங்கள். இதனால் பயனியர் சேவையை ருசித்து பார்க்க முடியும். (சங். 34:8) மற்ற பயனியர்களிடம் பேசி பாருங்கள். அவர்களும் இதேபோன்ற சவால்களை சந்திருக்கலாம். அதை எப்படி சமாளித்தார்கள் என்று சொல்லலாம். (நீதி. 15:22) ஊழியத்தை விரிவுபடுத்துவதற்காக நீங்கள் எடுக்கும் முயற்சிகளை ஆசீர்வதிக்குமாறு யெகோவாவிடம் ஜெபம் செய்யுங்கள்.—1 யோ. 5:14.
5 பயனுள்ள வேலை: ஒழுங்கான பயனியர் சேவை அபரிமிதமான ஆசீர்வாதங்களை பொழியும். தாராளமாக கொடுப்பதனால் வரும் அதிக சந்தோஷத்தை அனுபவிக்கும் வாய்ப்பை அது தரும். (அப். 20:35) கடவுளுடைய வார்த்தையின் சத்தியத்தைச் சரியாக போதிக்கும் திறமையை வளர்த்துக்கொள்ள உங்களுக்கு உதவும். (2 தீ. 2:15) யெகோவா உங்களுக்குப் பக்கபலமாக இருப்பதை உணர நிறைய வாய்ப்புகள் கிடைக்கும். (அப். 11:21; பிலி. 4:11-13) அதோடு, சகிப்பு தன்மைப் போன்ற ஆன்மீக குணங்களை வளர்த்துக்கொள்ளவும் யெகோவாவிடம் இன்னும் நெருக்கமான உறவை அனுபவிக்கவும் இந்த சேவை உதவும். (யாக். 4:8) எனவே, பெரிதும் அநுகூலமுமான கதவு வழியாகப் பிரவேசித்து நீங்கள் ஒழுங்கான பயனியராக முடியுமா?
[கேள்விகள்]
1. நமக்கு முன் என்ன ‘பெரிதும் அநுகூலமுமான கதவு’ திறந்திருக்கிறது?
2. அவ்வப்போது நம்முடைய சூழ்நிலையை சோதித்துப் பார்ப்பது ஏன் சிறந்தது?
3. ஒழுங்கான பயனியர் ஊழியம் செய்ய எப்படிப்பட்ட மாற்றங்களை சிலர் செய்திருக்கின்றனர்?
4. ஊழிய மணிநேரத்தை எட்ட முடியாது என்று நாம் நினைத்தால் என்ன செய்வது?
5. ஒழுங்கான பயனியர் சேவை ஏன் ஒரு பயனுள்ள வேலை?